சமகால அரச முறையில் காணப்படும் அரசுகளை சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படையில் ஏழு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவற்றை பின்வருமாறு ஆராயலாம்.
1. தாராண்மை ஜனநாயக அரசுகள்:
தாராண்மை ஜனநாயகம் வரையறுக்கக் கூடியதும், எதிர்வு கூறக்கூடியதுமான அரசியல் முறைகளையும், நிறுவனங்களை யும் கொண்டிருக்கும். வழமை யாக இவ்வரசுகள் உலகில் உள்ள ஏனைய அரசுகளை விட சொத்துகளை உடைய அரசுகளாகக் காணப்படும். இவ்வரசுகளில் மக்களின் சிவில் உரிமைகள், மக்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்காக உரிமைகள் என்பன ஏனைய அரசுகளுடன் ஒப்பிடும் போது உயர் அந்தஸ்தும் அங்கீகாரமும் அவ்வரசுகளில் வழங்கப்பட்டிருக்கும். அநேக தாராள ஜனநாயக அரசுகள் முதலாம் மண்டல அரசுகளாகவும் நாடுகளாகவுமே காணப்படுகின்றன.
(உ+ம்) அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளாகும்.
2. கம்யூனிச, கம்யூனிசத்திற்குப் பிந்திய அரசுகள்:
இவ்வகையினுள் வரும் அரசுகள் “நிலைமாறும் அரசுகள்” என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவ்வரசுகள் எப்போதும் மார்க்சிச, லெனிச பொருளாதார அரசாங்க முறையுடன் தொடர்புடைய அரசுகளாகும். இவ்வரசுகளில் பல அரசுகள் கெடுபிடி யுத்தத்தின் பின்னர் கம்யூனிசத்தில் இருந்து விடுபட்டுள்ளன.
அநேகமாக கம்யூனிச அரசுகள் ஏனைய அரச முறைமைக்குள் அதாவது தாராண்மை, ஜனநாயகம், புதிய கைத்தொழில் வளர்ச்சியடைந்த அரசுகள், இஸ்லாமிய அரசுகள் போன்றவற்றுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
(உ+ம்) ரஷ்யா, போலந்து, வடகொரியா, கியூபா, வியட்ணாம் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
3. புதிதாக கைத்தொழிலாகும் அரசுகள்:
18ம், 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அனுபவங்களைப் போன்றே சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களைப் பெற்று கைத்தொழில் மயமாகி வரும் அரசுகளே இவைகளாகும். இந்நாடுகளின் அரசியல் முறை உறுதியடைந்து வருவதுடன் படிப்படியாக கைத்தொழில் பொருளாதாரத்தை நோக்கி வளர்ந்து வரும் அரசுகளாகும்.
(உ+ம்) இந்தியா, மெக்ஸிக்கோ, பிரேசில், துருக்கி, ஆர்ஜன்டினா போன்ற நாடுகளாகும்.
4. குறைவிருத்தியுள்ள அரசுகள்:
அமெரிக்கக் கண்டத்தின் தென்பகுதியிலும், ஆபிரிக்காவில் சகாறா பிரதேசத்திலும் உள்ள அரசுகள் குறைவிருத்தியரசுகள் எனப்படுகின்றன. இவ்வரசுகள் சில சமூக, பொருளாதார, அரசியல் உறுதிப்பாட்டினை கொண்டிருப்பினும் நீண்டகாலமாக தீர்க்க முடியாத பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன.
சில அரசுகள் உறுதியான அரசாங்க முறையினை கொண்டிருப்பதுடன் பொருளாதார வறுமையினையும் கொண்டிருக்கின்றன. சில அரசுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தாலும் மனிதவுரிமை மீறல்கள், ஊழல் போன்ற விடயங்களால் உறுதியற்ற அரசாங்கத்தினைக் கொண்டிருக்கின்றன.
(உ+ம்) ஈக்குவடோர், தன்சானியா, நைஜீரியா, நிக்குவா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
5. இஸ்லாமிய அரசுகள்:
இஸ்லாமிய அரசுகளில் இஸ்லாமிய சமயத்துடன் இணைந்த தன்மையை அவதானிக்கலாம். அரசியல் நிறுவனங்கள் சமூக, பொருளாதார விடயங்கள் எல்லாவற்றிலும் இஸ்லாமிய சமயநம்பிக்கைகள் இவ்வரசுகளில் காணப்படும்.
(உ+ம்) ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற அரசுகளைக் குறிப்பிடலாம்.
6. ஓரங்கட்டப்பட்ட அரசுகள்:
எல்லா அரசுகளும் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவைகளாகும். சர்வதேச அரச முறையிலுள்ள அரசுகள் இந்நிலையை அடையும் போது தோல்வியடைந்த அரசுகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு அரசு தோல்வியடைந்த அரசாவதற்கு யுத்தம், இயற்கை அனர்த்தம், அரசியல், பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தல்கள் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
(உ+ம்) அங்கோலா, லைபீரியா, ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, சோமாலியா, மியன்மார் போன்ற அரசுகளைக் குறிப்பிடலாம்.
7. சிறிய அரசுகள்:
உலகில் உள்ள ஏனைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வரசுகளின் புவியியல் அளவு மிகவும் சிறியதாக உள்ளது. இயற்கை வளங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் போன்றவற்றிற்கு அயல் நாடுகளில் தங்கியிருக்கின்ற நாடுகளாகும்.
(உ+ம்) லக்சம் பேர்க், வகமாஸ், வத்திக்கான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இவ்வாறாக சமகால அரசுகளை ஏழு வகைகளாகப் பிரித்து பாகுபடுத்தலாம்.