உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு

636

 

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனித இனமும், தன்னை அடையாளப்படுத்துகின்ற சின்னங்களை, குறியீடுகளை வைத்திருக்கின்றது. அவ்வாறானதொரு சின்னம்/ குறியீடு

Kutty-Kannan

தெரிவுசெய்யப்படும்போது அந்த இனத்தவரின் கூட்டு ஆன்மாவும், உளமும் அதில் தாக்கம் செலுத்தக்கூடியவகையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றது. அதற்குள் குறித்த இனத்தின் வரலாற்று, பண்பாட்டு, ஐதீக நடைமுறைகள் இரண்டறக் கலந்தனவாக இருக்கின்றன. இந்தியர்களுக்கு ஒரு அசோகச் சக்கரமும், அமெரிக்கர்களுக்கு ஒரு கழுகும், சீனர்களுக்கு அனல்கக்கும் பறவையும், சிங்களவர்களுக்கு சிங்கமும் இந்தப் பின்னணியிலேயே நிலைபெற்றுவிட்டன. இந்தச் சின்னங்களையும், அதனை அடையாளப்படுத்தும் அரசுகளையும், அந்தச் சின்னத்தை தாங்கிக்கொள்கின்ற மக்களின் அரசியல் உளவியலை சற்று ஆழமாக அவதானித்தால், அவர்கள் குறிக்கும் தேசிய குறியீட்டின் முக்கிய பண்பை அப்படியே கொண்டிருப்பர். குறியீட்டின் பிரதிபலிப்பை சமூகம், பண்பாடு, அரசியல், பொருளாதார நடைமுறைகள், படையியல் என அனைத்திலும் கூட பார்க்க முடியும். இவ்வாறு ஓரினத்தின் அடையாளமாகவும், அவர்தம் இயங்கியலில் தாக்கம் செலுத்தும் முதல்தரப் பொருளாகவும், ஐதீகமாகவும் இருப்பதை தேசிய சின்னமாகவும் எடுத்துக்கொள்கின்றனர்.

தமிழர்களின் இன உருவாக்கத்தில் இந்தத் தேசிய சின்ன உருவாக்கம் ஆதிகாலம் தொட்டே சிக்கலுக்குரியதாகவே இருந்திருக்கிறது. கி.மு. 1000 இக்கும் கி.மு. 700க்கும் இடைப்பட்ட காலத்திலேயே – அதாவது, தமிழக பெருங்கற்காலத்தின் முடிவிலேயே (பெரிய கற்களை கொண்டு இறந்தவர்களுக்கு சமாதி செய்யும் முறை அறிமுகமான காலம்) தமிழ் பண்பாட்டின் தொடக்கம் வரலாற்றில் தென்படுகின்றது. அந்தக் காலத்தில் தமிழ் இனக்குழுமத்தைக் குறிக்கும் சின்னங்கள் பெருமளவு இன்னமும் அடையாளம் காணப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், பெருங்கற் காலத்திலிருந்தே குலக்குறியீடுகள் இருந்தமைக்கு இன்றும் தமிழர் பகுதிகளில் (ஈழம் – தமிழகம்) சில உண்டு. இப்போதும் மாடுகளுக்கு இடப்படும் குறியீடுகளின் சில வகைகளில் பெருங்கற்கால ஈமத்தாழிகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை ஒத்துள்ளன. அதேபோல துணி சலவை செய்யும் தொழிலாளர்கள் ஊரின் ‘முக்கிய புள்ளிகளின்’ ஆடைகளுக்கு மரபுரீதியாக ஒரே குறியீட்டையே பயன்படுத்தி வருவர். அது எதற்காக இடப்படுகிறது என்றால், அதற்கான காரணம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், முப்பாட்டனார் காலத்திலிருந்து இதே குறியீட்டைத்தான் அந்த முக்கிய புள்ளியாரின் குடும்பங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பார்கள். சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் இந்தக் குறியீடுகளும் பெருங்கற்கால ஈமத்தாழிகளில் உள்ள பொறிப்புக்களில் வருகின்றன. எனவே, தமிழ் பண்பாட்டின் உருவாக்கத்திலேயே குலங்களை குறிக்கும் குறியீடுகளும் உருவாகத் தொடங்கியிருக்க வாய்ப்புண்டு. அதன் உச்சமான வெளிப்பாட்டை, பெருங்கற்காலத்தின் முதிர்ச்சி நிலையில் தோன்றிய சங்க காலத்தில் பார்க்கலாம். அதாவது, சிறுசிறு குழக்களாக வாழ்ந்த தமிழர்கள் இனக்குழும நிலைக்கு முந்தைய கட்டத்தை அடைகிறார்கள். அதுவொரு நில இயல்புகளுக்கு ஏற்ற வகையில் ஐம்பெரும் பகுதிகளாக புவியியல் அடிப்படையில் பிரிந்து கொள்கின்றார்கள். முதல் தடவையாக தம்மைக் குறிக்க ஐந்து நிலங்களுக்கும் ஏற்ற வகையில் ஐந்து சின்னங்களை தெரிவுசெய்துகொள்கின்றனர். இங்கு தான் தமிழர்களின் தேசியத் தன்மை உருவாக்கத்தில் தவறு நிகழ்ந்திருக்கிறது. ஆரம்பமே கிளைகளாக இருந்திருக்கின்றது. பிரதானமாக ஒரு மொழியைப் பேசுகின்ற ஓரினம், தம் இன உருவாக்க சந்தர்ப்பத்திலேயே ஒரு சின்னத்தின் கீழ் வந்துவிட்டன. ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் இனவுருவாக்க தருணத்திலேயே பிரிந்துவிட்டார்கள். சதாகாலமும் நிலப்பிரிப்பின் அடிப்படையில் போரிட்டும் கொண்டார்கள். ஒன்றை விழுங்கிய இன்னொன்றின் போர் சேர, சோழ, பாண்டிய என பிரதான மூன்று தமிழர்களை உருவாக்கியது. இதற்குள்ளும் பல்வேறு பிராந்தியத்தாரின் கலப்புக்கள் இருந்தன. அந்த மூன்றும் மீண்டும் தம் அரசியல் சின்னங்களை தனித்தனியே அறிவித்தன. சோழர்கள் புலியாக, சேரர்கள் அம்பும் வில்லுமாக, பாண்டியர்கள் மீன் ஆனார்கள்.

இந்த மூன்றில் யார் அரசியல் அதிகாரத்துக்கு வருகிறார்களோ, அவர்களை குறிக்கும் சின்னமே குறித்த நூற்றாண்டுகளில் தமிழ் தேசிய அரசியலின் சின்னமாகவும் இருந்தது. சோழர் ஆட்சியைப் பிடித்தால் புலி, பாண்டியர் ஆட்சியைப் பிடித்தால் மீன் என வரலாறு மாறி மாறி நீண்டது. இனவுருவாக்கத்தின் 3ஆம் அல்லது இறுதிக் காலகட்டமாகிய இங்கேயும் இன ஒற்றுமை சாத்தியப்பட்டிருக்கவில்லை. ஒன்றை விழுங்கி, இன்னொன்று மேலெழுவதிலும், குழிபறித்து இழுத்து வீழ்த்துவதிலுமே குறியாக இருந்தது.

இவ்விடத்தில் ஒரு விடயத்தை இடைச்செருகலாக சேர்க்க வேண்டியுள்ளது. தமிழ் பரப்பில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும், வரலாற்றுக் காலத்தின் முதல் தொடக்கப்பகுதியிலும் – காலனிய காலம் வரையிலும் தேசியத் தன்மைகள் முகிழ்ப்புப் பெறவில்லை, அல்லது மேலே குறிப்பிட்டதான மூன்றுக்கு மேற்பட்ட இனக் குறியீட்டு சின்னங்களும் தேசியத் தன்மை வாய்ந்தாகப் பார்க்கப்படவில்லை. அந்தக் கால அரசும், அரசியலும் கொள்ளையடிப்புக்களுக்கும், அதிகார இருப்புக்கும் இடையில் நகர்ந்தவையே. எனவே, அதிக தடவைகள் வரி இறைப்புக்காகவும், பெண்களுக்காகவும் பொருதிக்கொண்டார்கள். பொதுமக்களைப் பலியிட்டு அரசர்களின் திறைசேரிகளை நிரப்பிக்கொண்டார்கள். எனவே, வரலாறு நெடுகிலும் தமிழர்கள் ஓரணியாவதற்கான சாத்தியங்கள் நிகழவேயில்லை. அது அரசியல் உளவியலாகவே இன்றுவரையும் தொடர்வதையும் அவதானிக்கின்றோம். ஆனால், ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தின் கீழ் தமிழர் நிலம் இணைக்கப்பட வேண்டுமென்பதை சிலப்பதிகாரம் கோரிநிற்கின்றது. தமிழர் நிலம் இடையறாத போர்களினால் சீரழிந்து கிடக்கையில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரம், நீதியை வேண்டி சேர, சோழ, பாண்டிய தேசங்களெங்கும் அலைகிறது. முடிவில் தமிழர் நிலம் எங்குமே நீதியில்லை, அழிந்துவிடுதலே நலம் என்ற கருத்தியலின் அடிப்படையில் மதுரை எரிக்கப்படுகிறது.

காலனியாதிக்கம் ஆரம்பமாகும் வரையில் தமிழ் பரப்பின் அரசியல் இதேநிலைதான். இலக்கியங்கள் சொல்வதைப்போல எங்கேயும் பொற்காலங்கள் நீடித்து நிலைத்திருக்கவில்லை. தமிழகத்தின் நிலையை ஈழத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். இங்கேயும் மாறிமாறி முடிகளுக்கான சண்டைகள் நடந்தன. தொடர்ச்சியற்ற வரலாற்றைக்கொண்ட யாழ்ப்பாண மற்றும் வன்னி மன்னர்கள் தங்களுக்குள் பொருதிக் கொண்டார்கள். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக சகோதர கொலைகளைக் கூட செய்திருக்கிறார்கள். எனவே, இவ்வாறானதொரு அரசியல் பாரம்பரியம் நிலவிய தமிழ் பரப்பில் முழுத் தமிழர்களையும் குறிக்கும் பொதுச்சின்னம் அடையாளப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே, சொன்னதுபோல எங்காவது ஒரு மூலையிலிருந்து வந்து அதிகாரத்தைப் பிடிக்கும் குலத்தினரின் சின்னம் அவர்களின் நூற்றாண்டுகளின் சின்னமாக இருந்திருக்கின்றது.

காலனியாதிக்க காலம் ஈழத்தையும், தமிழகத்ததையும் அரசியல் ரீதியாகப் பிரித்தது. பண்பாட்டு தொடர்புகள் நீடித்தன. இந்தக் காலப்பகுதியில்தான் ஈழத்தமிழர்கள் தனித்துவமானவர்களாக மாறினார்கள். காரணம், வெளியிலிருந்து வந்த பொது எதிரியை இங்கிருந்தே சமாளிக்க வேண்டியிருந்தது. அதற்கான உபாயங்களை இங்கிருந்தே சமாளிக்க வேண்டியுமிருந்தது. எனவே, சுய அரசியல் தேடலும், அதனுடனான பயணிப்பும், சமயப் பண்பாட்டை, கலாசார இருப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவையும் இங்கேயே அவசியப்பட்டது. காலனியாதிக்கவாதிகள் அரசியலுக்காக தேர்வுசெய்த விடயங்கள் (மதமாற்றம், வணிகம் உள்ளிட்டவைகள்) நேரடியாக மக்களைத் தாக்கும் தன்மை கொண்டிருந்ததால், இந்தக் கால அரசியலில் மக்களும் தலையிட்டார்கள். அத்துடன், வருகை தந்திருந்த காலனியவாதிகளும் முந்தையகால மன்னர்கள் போலல்லாமல் மேற்கத்தேய ‘நாகரிக’ சிந்தனை மரபுக்குள்ளால் இலங்கையில் வாழ்ந்தவர்களை அணுகினார்கள். அரசவை வரைக்கும் தமிழர்களின் செல்வாக்குப் பெருமளவுக்கு காலனியவாதிகளுடனான உறவு பலப்பட்டிருந்தது. எனவே, இந்தக் கட்டத்திலும், தமிழர்கள் சுயமான அரசியல் எண்ணமொன்றை வளர்க்க, அதனைப் பற்றி சிந்திக்கத் தவறிவிட்டார்கள். இந்து மதத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் இருந்தார்கள். அதற்காகவே போராடினார்கள். இவையிரண்டுமே மிகப்பெரும் அரசியல் சக்திகள் என்பதை விளங்கியிருந்தார்கள். அதற்குள்ளும் பிரதேச, சாதிய பிரிப்புக்கள் அதிகமிருந்தன.

ஆனால், மறுபுறத்தில் சிங்களவர்கள் அரசியல் ரீதியாக பொதுமைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இலங்கையின் வரலாறு முழுவதிலும் மிகப்பெரும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பௌத்தம் காலனியாதிக்கத்தை அகற்றுவதற்கும் போராடியது. சிங்கள இனத்தை அரசியலின்பால், இனவிடுதலைப் போராட்டத்தின்பால் இழுத்துவரும் பரப்புரைக்கருவியாக, சீர்திருத்தகால அறிஞர்களால் பௌத்தம் பயன்படுத்தப்பட்டது. எனவே, சிங்களவர்களுக்கும் காலனியவாதிகளுக்கும் இடையிலான அரசியல் எப்போது தகித்துக்கொண்டேயிருந்தது. அது சிங்கள மக்களை நாட்டின் மீதும், தன் இனம் மீதும் பற்றுக்கொள்ள வைத்தது.

தமிழர்கள் மென்போக்கான ஒரு அரசியல் பற்றுடனேயே பயணித்துக்கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டத்தில்தான் இலங்கைக்கு காலனியாதிக்கவாதிகளின் கைகளில் இருந்து விடுபட்டது. தமிழர்களும், தலைமைகளும் அப்போது கடைபிடித்த மென்போக்கு, சிங்களவர்களின் வன்போக்கான அரசியலிடம் தோற்றுப்போகவே வழிவகுத்தது. உலகம் முழுவதும், இனம், தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற விடயங்களின் அடிப்படையில் இன அங்கீகாரம் நிகழ்ந்துகொண்டிருந்த தருணத்தில் தமிழர்கள் கோட்டைவிட்டார்கள். சிங்களவர்கள், அதில் தெளிவாக காய் நகர்த்தி, வாளேந்திய சிங்கத்தை தம் தேசிய ஆன்மாவாக, அரசியலின் குறியீடாக முன்நிறுத்தினார்கள். ஆனால், தமிழர்களிடம் சாதுவான நந்திக்கொடி சமயப் பாரம்பரியங்களுடன் பறந்துகொண்டிருந்தது. சுதந்திரம் பெற்றுக்கொண்ட உடனேயே நாடு முழுவதையும் சிங்களவர்களுக்கு உரியதாக்கவும், இலங்கையின் முதன்மை பெற்ற இனமாக சிங்களவர்களை நிலைநிறுத்தவும் அவர்கள் போராடினார்கள். சுதந்திரம் பெறுவதற்கு முன்னரான சில வருடங்களிலேயே சிங்களவர்கள் அதற்கான பயணத்தை யாப்புமுறைகளின் ஊடாகவும், பிரதிநிதித்துவங்களை பகிர்ந்தளிப்பதன் ஊடாகவும் ஆரம்பித்திருந்தார்கள். அதன் உச்சம்தான் 1958ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டம். அப்போதிலிருந்துதான் தமிழர்கள் தேசியமயப்பட்ட அரசியல் யுகமொன்றை ஆரம்பித்தார்கள். உலக மனித இனங்கள் அரசியலிலும், வரலாற்றிலும் வெற்றிகரமான தேசிய அடையாளத்தைப் பெற்றுக்கொண்டிருந்த கட்டத்தில்தான்தான் ஈழத் தமிழர்கள் தமக்கான தேசியம் எதுவென சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். இது உலகில் தோன்றிய மூத்த இனமொன்றுக்கும், பிந்தித் தோன்றிய இனமொன்றுக்கும் இடையிலான உளவியல் போராகவும் இருந்தது. எனவே, இது வேகம்வேகமாக தன் இருப்பையும், அரசியலையும், எல்லாம் கலந்த தேசியத் தன்மையையும் கட்டமைக்க வேண்டிய நவீன காலமாக அது இருந்தது. ஆனால், இவையனைத்தையும் ஆழமாக சிந்தித்து, அறிவார்ந்த, தத்துவார்த்த நிலையில் கட்டமைக்கும் புத்தசீவித்தனம் தமிழ் சமூகத்தில் தோன்றியிருக்கவில்லை. சாதிய, மத பின்புலங்களின் ஊடான பார்வையுடனேயே தமிழர்களுக்கான நவீனகால தேசியத்தனம் கருக்கொண்டது. எனவே, அனைத்துத் துறைகளிலும், பழமைவாதமும், புதுமைவாதமும், அடிப்படைவாதமும் கலந்து தமிழ் தேசியத்திற்கான முதல் கட்டமைப்பைக் கொடுத்தன.

அந்தக் கட்டமைப்பு இற்றைவரையில், தமிழ் தேசியம் என்றால் என்னவென்று தமிழ் பாமரனும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் உருவாக்கப்படவில்லை. காலமாற்றமும் அரசியல்மாற்றமும் அறிவார்ந்த தளத்தில் தொடர்ச்சியான தடுமாற்றத்தை நிகழ்த்திவந்ததும், தமிழினத்தின் தகிடுத்தனங்களும் அதற்கான சாத்தியங்களை உருவாக்கவில்லை. எனவே தான் இன்றும் தேசிய எண்ணம் கருக்கொண்ட நாடான பிரான்ஸ், தேசியம் என்ற எண்ணக்கருவுக்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தையே தமிழ் மொழியாக்கி நாமும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். பிரான்ஸியர்களின் அரசியல் பண்பாட்டுச் சூழலில் பொருந்திவருகின்ற ஓர் எண்ணக்கரு நமக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்று கூட இன்றளவும் சிந்திக்கவில்லை. அப்படி எமக்கான தேசியத்தை கண்டுபிடிக்காததன் முக்கிய விளைவுகளில் ஒன்றுதான் 2009. ஒரு சிறுகடற்கரையில் உலகமே ஓரினத்தை அழித்துத் தொலைத்துக் கொண்டிருக்கையில், வேறொரு திசையில் தமிழர்கள் கவலைப்பட்டுக்கொண்டும், ஊர் கோவில் திருவிழா நடத்திக்கொண்டும் இருந்தார்கள். தேசிய எண்ணமும், அதன் மீதான பரிச்சயமும் ஆன்ம அளவில் ஏற்பட்டிருந்தால், ஊடுருவியிருந்தால் தமிழர் தம் தேசியத்தை இழந்திருக்க வாய்ப்பேற்பட்டிருக்காது. இந்த வாய்ப்பை முதலில் ஏற்படுத்தியவர்கள் யாரெனில் தமிழ் தேசியத்தை வைத்து ஏகப்பிரதிநிதித்துவ அரசியல் செய்யும் அரசியல் தலைவர்கள்தான். எனவே, தமிழ் தேசிய எண்ணம் எப்படியானது? அதன் கட்டமைப்பு சரியானதா? இதுமாதிரியான ஆயிரம் கேள்விகளுக்கான பதில்களுடன் தமிழ் தேசியத் தன்மை விசாரணைக்குட்படுத்த வேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.

SHARE