உலகை மாற்றும் திறனாளிகள் தினம்

418

(இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா.)

1992 முதல் ஐ.நா சபை இத்தினத்தை பிரகடனம் செய்தது. உலகமக்கள் அனை வருமே மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப்புரிந்து கொண்டு அவர்களுக்கான உரிமைக ளையும் முதன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இத்தினம் ஜ.நா சபையால் பிர கடனம் செய்யப்பட்டது. 1981-ம் ஆண்டை உலக மாற்றுத் திறனாளிகள் ஆண்டாக முதலில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அத னைத் தொடர்ந்து 10 வருடங்கள் விசேட தேவையுடையோர் தசாப்தம் என அறிவிப்பு செய்தது. அந்த தசாப்தத்தின் நிறைவு தினத்தில் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் திகதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளாக ஜ.நா அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வு நிறுவனங்களினாலேயே இந் நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுக ளில் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் இவர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவது உண்டு. அத்துடன், இத்தினத்தில் சமுதாயத்தில் விசேட தேவை யுடையோரின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வுகள், விளம்பரங்கள், பிரச்சாரங்கள், இவர்களுக்கிடையிலான கலை கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள்; இவர்களின் உரிமைகள் தொடர்பான கவனயீர்ப்பு பேரணிகள், தொழில்வாய்ப்பு வழங்கும் சந்தைகள் என்பவற்றையும் நடாத்தி வருகின்றன.

இவ்வகை செயற்பாடுகள் வாயிலாக விசேட தேவையுடை யோர் சமூகத்தில் சம உரிமை களுடன் வாழ்வதுடன்; அனைத்து துறையிலும் சிறந்து விளங்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங் கமும், தன்னார் வத்தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வகையில் உதவுகின்றன. அதுமட்டுமில்லாது பெற்றோருடன் இணைந்து சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும். இவர்களை சமூகத்தின் அனைத்து விடயங்களிலும் அரவணைத்து பல துறைகளுக்குள்ளும் உட்படுத்தி, தமது வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற சந்தர்ப்பமும் வாய்ப்பும் வழங்குவதும் சமுதாயத்தின் தலையாய கடமையாகும் என்பதைப்புரிந்து நடக்க வேண்டும்.

இவை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி நாட்டின் தேசிய அபிவிருத்தியிலும் தேசிய நீரோட்டத்திலும் பங்காளர்களாக விசேட தேவையுடையோரை மாற்றுவதே இத்தினத்தின் பிரதான இலக்காகும் என்பதை நாம் உணர வேண்டும்.

உலகில் மட்டுமல்ல நம் நாட்டிலும் இன்று தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி தமது சொந்தக்காலில் நின்று முன்னேறி வரும் பல மாற்றுத்திறனாளிகளைக் காண்கின்றோம். அவர்கள் தம்மீது பரிதாபப்பார்வையை பிறர் செலுத்தவேண்டும் என இன்று விரும்புவதில்லை. மாறாக தமக்கும் நடப்பதில்; ஏறுவதில்; பயணிப்பதில்; கற்பதில் தொழில்பெறுவதில்; மட்டுமல்ல, அரசியல் சமூக கலாச்சார பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு கொடுங்கள் என குரல் கொடுக்கின்றனர்.

‘தங்கத்திலே குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ…அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ’ என்பது போல் உடலளவில் குறைகள் பல இருந்தாலும் மனதளவில் இவர்கள் தைரியமானவர்கள். இவர்களுக்குள் பல திற மைகள் ஒளிந்து கிடக்கின்றன.மற்றவர்கள் போல நாமும் சமூகத்தில் நடமாடித்திரிவதற்கு; பிறருடன் தொடர்புகொள்வதற்கு; மற்றவர்களை இலகுவாக அணுகுவதற்கு உரிய வாய்ப்பு வழங்குங்கள் என கேட்டு நிற்கின்றனர்.

உலக மக்கள் தொகையில் 15 வீதமானோர் மாற்றுத்திறனாளிகள். இவர்களில் 80 வீதமானோர் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்கள் எனச்சொல்லலாம். இந்நாடுகளில் வாழும் 90 வீத மாற்றுத் திறனா ளிப் பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை என பாரிஸில் இயங்கும் யுனஸ்கோ நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் 16 இலட்சத்து 17 ஆயிரத்திற்கு (1.6 மில்லியன்) மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.7 வீதமாக உள்ளது. இலங்கையின் சிறி யளவு குடித்தொகைக்கு இந்த அளவு அதிகம் என்பதை பலரும் உணர்வதில்லை. மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கி வருகிறது. மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவிப் பணக்கொடுப்பனவு, மாற்றுத்திறனாளிகளுக்கான உப கரணங்கள் மற்றும் பல சேவைகளை வழங்கி வருகின்றது. இவற்றை விட சமூக மட்ட நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான வலிந்துதவு சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பனவும் இவர்களுக்கான சேவைகள் வழங்குகின்றன.

இன்று மாற்றுத்திறனாளிகள் பிறரிடம் கையேந்தி வாழும் நிலை மாறி புலம்பெயர் உறவுக ளின் உதவியுடன் தமது சொந்தக் காலில் தாமே உழைத்து வாழும் நிலை மெல்ல மெல்ல வடக்கிலே பல இடங்களிலும் அரங்கேறி வருகின்றமை பாராட்டத்தக்கது.

இன்று விளையாட்டு, கலை, தொழில்நுட்பம்;, அரசி யல், எனப் பலதுறைகளிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறிவரும் இவர்கள் உண்மையில் மாற்றுத்திறனாளிகள் அல்ல..! சமூகத்தையே மாற்றும் திற னாளிகள் என்பது இந்நாளின் பெருமைக்குரியது.

இதற்கு எம்மிடையேயும் உலகிலும் பல உதாரணங்கள் உள்ளன. தமது திறமைகளால் எம்மை வியக்கவைத்தவர்கள் இவர்கள்.
சிறுவயதில் தனது பார்வை கேட்டல் திறனை இழந்தும் பேசும் திறனையும் இழந்த அமெரிக்காவின் கெலன்கெல்லர் அம்மையார்; தனது முயற்சியால் கல்வி கற்று உல கின் சிறந்த நாவலாசிரியராகவும் யுத்தத்தில் பாதிப்படைந்த இரானுவ வீரர்களின் முகாம்களுக்குச் சென்று அங்கங்களை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் பிற்காலத்தில் மாறினார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த பிராங்ளின் ரூஸ்வோல்ட் சக்கரநாற்காலியில் இருந்தே நாட்டை நிர்வகித்தார் என்பது பலரும் அறியாத உண்மை.

சிறு வயது விபத்தால் தனது பார்வையை இழந்த பிரான்ஸ் நாட்டு லூயிஸ் பிறேய்லி பார்வை இழந்தவர்களுக்கான பிறேய்லி எழுத்து முறையை அறிமுகம் செய்து மாற்றத்தை ஏற்படுத்தினார்.

அது மட்டுமல்ல, பிறக்கும் போதே வாதத்தால் கைகால்கள் இரண்டும் இயங்க முடியாது உடலோடு பிணைந்த வகை யில் பிறந்த பிள்ளை தாயாரின் விடாமுயற்சியாலும் சிறுவனின் தன்நம்பிக்கையாலும் மெல்ல முன்னேற்றம்கண்டு நாடக நடிக னாகி பின்னாலில் ஹொலிவூட்டில் ரம்போ எனப்போற்றப்பட்ட பிரபல அமெரிக்க நடிகர் சில்வஸ்டோர் ஸ்டோலன் வாழ்க்கை எமக்கு வியப்பை தரவல்லது.

காது கேளாத நிலையிலும் சிறந்த இசையமைப்பாளரானார் இத்தாலி நாட்டில் பிறந்து வியட்னாம் வாழ்ந்த பீத்தோவன். ஓட்டிசத்தால் பாதிப்படைந்த ஜேர்மானியர் ஜஸ்டீன் மிகப்பெரிய விஞ்ஞானி ஆனார்.

தமிழ்நாட்டின் பரதநாட்டிய மேதை சுதா சந்திரன் கால்களை இழந்தும் சிறந்த நாட்டிய தாரகை யாக விளங்கினார். ஈக்குவடோர் நாட்டின் உப ஜனாதிபதி லெனின் மொறீனோ, அவுஸ்ரேலியாவின் பேச்சாளர் கைகளை இழந்த சாம் கௌதோர்ன், கால்களை இழந்தும் செயற்கைக்கால்களுடன் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியப் பெண் அறுனிமா சின்னா, குதிரையில் இருந்து விழுந்து முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்து சக்கரநாற்காலியில் இருந்தபடி சாதித்து புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குனர் நடிகர் கிறிஸ்தோபர் றீவீ, பிறக்கும் போதே கால்கள் கைகள் இல்லாது பிறந்து பின்னாளில் மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாறிய அவுஸ்ரேலியாவின் நிக்கலோஸ் ஜேம்ஸ் வியூசிக்;, பார்வை இழந்தும் புகழ்பூத்த ஆங்கிலக்கவிஞரான ஜோன் மில்டன் போன்றோரும் இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களே.

இவர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் றோல்ப் பிறவுண் சிறுவயதிலேயே நடக்க முடியாத நபராக இருந்ததால் தனக்காவே சக்கரநாற்காலியை கண்டறிந்து உலகத்திற்கு அறிமுகம் செய்தார்.

அமெரிக்காவின் பிர பல பத்திரிகையாளர் ஜோன் கொக்கின்லெறி பார்வைக் குறை பாடுடையவர்; சக்கரநாற் காலிப் பாவனையாளர். ஸ்ரிவ் வொண்டர் கண்தெரியாத போதும் சிறந்த பாட கராக இசையமைப்பாளராக புகழ் பெற்றவர்.

தமிழ்நாட்டில் பிரபல பாட லான சொப்பன சொப்பன சுந்தரி பாடலைப்பாடிய விஜயலட்சுமி கண்கள் இரண்டும் தெரியாதவர்.

இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து அண்மையில் காலமான அடுத்த சந்ததிக்கு புதிய விஞ்ஞான கொள்கையைக் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் உடல் அசைவற்று சக்கரநாற்காலியில் இருந்துகணணியால் மட்டுமே தனது பௌதீக விஞ்ஞான தத்துவங்களை உலகத்திற்கு முன்வைத்தவர்.

இதனால் தான் பல சந்தர்ப்பங்களில் தமது செயல்கள் மூலம் மாண்புமிகு திறனாளிகளாகவும் இவர்கள் போற்றப்பட்டு வருகின்றனர்.

எமது நாட்டில் இன்றுள்ள மாற்றுத்திறனாளிகளும் இப்படி உருவாகுவார்கள். இதற்கு இவர்கள் மீது இரக்கம் கொள்ளுவதை விடுத்து இவர்களுக்கான சலுகைகளை வழங்கும் மனோபாவத்தை விட்டு அவர்களின் உரிமைகளை வழங்கும் ஒட்டுமொத்த சமூகமாக நாம் மாறுவது இக்காலத்தின் அவசியமும் அவசரமும் ஆகும். இதன் மூலமே அவர்களுக்கு நாம் நன்மை செய்ய முடியும். இன்று இளந்தலைமுறையினர் மாற்றுத்திறனாளிகள் மீது நேசம் காட்டுவதும் பாடசாலை மாணவர்கள் இவர்களுக்கு உதவமுன்வரும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து வருவதைப்பார்க்கும் போது நல்ல உதவும் மனப்பாங்கு கொண்ட சிந்தனையுள்ள இளம் தலைமுறை வடபகுதி முழுவதும் உருவாகி வருவது மகிழ்ச்சி தருகிறது.

எனினும் பொது இடங்களில் இவர்கள் பல சவால்களை எதிர்நோக்கி வருவதை நாம் கண்டும் காணாது இருக்க முடியாது.
1.பல வைத்தியசாலைகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் வைத்தியசாலை வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவதில்லை.
2.வைத்தியசாலை நோயாளர் விடுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான மலசலகூட வசதிகள் உரிய முறையில் அமைக்கப்படாமை.
3. பொது போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளை சில சாரதிகள் ஏற்றிச்செல்ல மறுத்தல்.
4. பஸ்வண்டிகளில் பொதுமக்கள் இவர்களுக்கு இருக்கைகளை வழங்க தயங்குதல்.
5.பல பொது அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், கலைநிகழ்வுகள் நடக்கும் மேடைகள் பொருத்தமான அணுகுவசதிகளை கொண்டிராமை.
எனப்பல பிரச்சினைகளை மாண்புமிகு திறனாளிகள் எதிர்கொண்டு வருகின்றனர் . இவை நாளும் எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகள். இவற்றை நிவர்த்தி செய்ய முழுச்சமூகமும் விருப்பம் கொள்ளவேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்கள், கட்டிடத்திணைக்களம் என்பன கட்டிடம் கட்ட அனுமதி வழங்கும் போது அணுகுவசதி தொடர்பில் 2014 ஆம் ஆண்டு வர்த்தமாணி அறிவித்தலை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வேண்டுகோளாகும்.

இதன் மூலமே 2019 ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின தொணிப்பொருளான ‘அனைவருக்கும் அணுகுவசதி கொண்ட எதிர்காலம்’ என்ற இலக்கை நாம் தடையின்றி அடைய முடியும்.

‘உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்’
‘மனிதா உன் மனதைக்கீறி விதை போடு மரமாகும்… அவமானம் படுதோல்வி பலமான உரமாகும்’ என்ற பா.விஜய் வரிகள் இன்றைய தின நாயகர்களின் மனதுக்கு ஒத்தடமாக அமையும்.

நீங்கள் இலட்சியத்தை விதை போட்டு தன்னம்பிக்கை எனும் தண்ணீர் ஊற்றி முயற்சி எனும் உரமிட்டு வெற்றி என்ற கனியை ருசிக்கும் காலம் விரைவில் கைகூடட்டும்.

நன்றி…!

SHARE