13-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 15-ந் திகதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரிவில் 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-மலேசியா (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் (இரவு 8.30 மணி) சந்திக்கின்றன. இன்னொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, ஸ்பெயினை (இரவு 10 மணி) எதிர்கொள்கிறது.
ஐரோப்பிய கண்டத்தில் ஆக்கியில் வேகமாக வளர்ந்து வரும் பெல்ஜியம் அணி, இந்தியாவுக்கு கடும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான கடந்த 4 முக்கியமான ஆட்டங்களில் பெல்ஜியம் அணி ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. பழைய தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி தீவிரம் காட்டும். பெரிய போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் சர்தார்சிங் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் இளம் மற்றும் மூத்த வீரர்கள் சம அளவில் இடம் பிடித்து இருக்கின்றனர்.
இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த போட்டியை டென் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.