ஜனநாயக வழிப்பாதையில் செல்வதாக தம்பட்டமடிக்கும் எந்தவொரு நாடும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும். 2015 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிப் போன உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இன்னும் நடத்தாமல், பல்வேறு காரணங்களைக் காட்டி அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது என எதிர்த்தரப்பினர் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மையிருக்கத்தான் செய்கிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, கடுமையான எச்சரிக்கையொன்றை அரசாங்கத்துக்கு விடுத்துள்ள னர்.
முடியுமானால் மாகாணசபைத் தேர்தலை நடத்திக்காட்டட்டும் சவால் விடுக்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மே தினத்தைத் தொடர்ந்து சூளுரைத்து வருகிறார். அரசா ங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை காலி முகத்திடலிலிருந்து ஆரம்பித்துவிட்டேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இந்த அரசாங்கம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது. கூட்டு எதிரணியினர் தங்களைத் தோற்கடித்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை அரசாங்கம் நடத்தாமல் இழுத்தடிப்பு செய்கிறது என்ற பிரசாரத்தை, மஹிந்த அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மஹிந்த அணியின் இச்சவாலை ஏற்பது போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மே தின உரையில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐ.தே.கட்சி தயாராகவுள்ளது என பதில் இறுத்துள்ளார்.
ஜனநாயக வழிப்பாதையில் செல்வதாக தம்பட்டமடிக்கும் எந்தவொரு நாடும் உரிய காலத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது ஜனநாயக கடமையாகும். 2015 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிப் போன உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இன்னும் நடத்தாமல், பல்வேறு காரணங்களைக் காட்டி அரசாங்கம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது என எதிர்த்தரப்பினர் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மையிருக்கத்தான் செய்கிறது.
2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பவற்றினால் 2015 ஆம் ஆண்டு கனதியான ஆண்டாகப் போயிருந்தாலும் 2016 ஆம் ஆண்டில் கலைந்துபோன, அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தை அரசாங்கம் செம்மைப்படுத்தியிருக்க வேண்டும். அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் கைகளில் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் பல்வேறு தடங்கல்களும் சிக்கல்களும் ஏற்படுவதாக விமர்சிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதற்கு உள்ளூராட்சி, எல்லை நிர்ணயம், வட்டாரவகுப்புக்கள் சீரமைக்கப்படவேண்டும். புதிய எல்லை நிர்ணயங்களின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என்ற வாக்குறுதிகளையும், விளம்பரங்களையும் அரசாங்கம் சொல்லிவந்தபோதும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்பட்ட காலதாமதங்கள், எல்லை நிர்ணயிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் காரணமாக, புதிய உள்ளூராட்சி அமைப்பு எல்லை வகுப்புத் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள், சிறு கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருவது தேர்தலை நடத்த முடியாமைக்குரிய காரணங்களாகக் கூறப்பட்டது.
இது தவிர, பழைய, விகிதாசார முறையில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த வேண்டும். புதிய முறையில் நடத்தப்படும் என்ற இழுபறி நிலையும் இருந்து வருவது அவதானிக்கக்கூடிய விடயமாகும். பெரும்பான்மையான கட்சிகள் குறிப்பாக, சிறுபான்மைக் கட்சிகள் சிறிய கட்சிகள், சில பெரும்கட்சிகள் கூட, பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்படவேண்டுமென்ற கோரிக்கையை விடுத்து வந்துள்ளன.
இவ்வாறு அவர்கள் தொங்கிக் கொண்டு நிற்பதற்குக் காரணம் ஏலவே இருந்த பிரதிநிதித்துவங்களை புதிய தேர்தல் முறையில் தாங்கள் இழந்து விடுவோம் என்ற பயம் ஒருபுறமும், பலம் பொருந்திய தேசியக்கட்சிகளோடு போட்டி போடமுடியாத நிலையொன்றை புதிய தேர்தல் முறையில் இழந்துவிட நேரிடும் என்ற பயப்பாடும் பழைய தேர்தல்முறையை தொடர்ந்து பேணவேண்டுமென்பதற்கு மூலகாரணமாக இருக்கலாமென்று கூறப்படுகிறது.
எதிரணியினர் மிக நீண்டகாலமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வலியுறுத்தி வருகின்ற போதும், அரசாங்கம் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு பின்னணியாக பல காரணங்கள் இருக்கின்றபோதும் எதிரணியினர் தங்களைத் தோற்கடித்துவிடுவார்கள். இலங்கையிலுள்ள மிக பிரதானமான உள்ளூராட்சி சபைகள் தங்கள் கைகளை விட்டு எதிரணியின் கைகளுக்கு மாறிவிடும் அவ்வாறு மாறும் நிலையொன்று உருவாகுமாக இருந்தால் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக முறைகளில் பாரிய நெருக்கடிகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டி நேரிடும் என்ற பயம் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உரியகாலத்தில் நடத்தாமல் இழுத்தடிப்பு செய்கின்றார்கள் என்ற விமர்சனமே அரசாங்கத்தின் முன் முன்வைக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் பெருந்தொகையானவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசமே இருந்து வந்துள்ளது, வடக்கு, க்கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி அதிகாரங்கள் இருந்துவந்துள்ளபோதும் இம்மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வசம் கணிசமான உள்ளூராட்சி சபைகள் இருந்துள்ளன என்பதும் தெரிந்த விடயம். உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி சபைகள் இருந்த போதிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வசம், திருகோணமலை நகரசபை, வெருகல் பிரதேச சபை, உப்பு வெளி பிரதேச சபை ஆகிய மூன்றும் தவிர்ந்த ஏனைய 10, சபைகளும் ஏதோ ஒரு வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே இருந்துவந்துள்ளன. இதே ஆதிக்கம் அம்பாறை மாவட்டம், வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் இருந்து வந்துள்ளது என்பது மறைமுகமான உண்மை.
இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புக்களின் கட்டமைப்பின் போக்கை சிறிது நோக்குவோமாயின் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்துவதில் காட்டும் இழுத்தடிப்புக்களை ஓரளவுக்கு ஊகித்து அறிந்து கொள்ள முடியும். இலங்கையிலுள்ள உள்ளூராட்சி வடிவங்கள் இவ்வாறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன.
1) மாநகர சபைகள் 23
2) நகர சபைகள் 41
3) பிரதேச சபைகள் 271
மொத்தம் 335
மாகாண அடிப்படையில் பார்ப்பின் அவற்றின் எண்ணிக்கையளவு பின்வரும் வகையில் காணப்படுகிறது.
1) மத்திய மாகாணம் 43
2) கிழக்கு மாகாணம் 45
3) வடமத்திய மாகாணம் 26
4) வட மாகாணம் 34
5) சப்ரகமுவ மாகாணம் 29
6) தென் மாகாணம் 49
7) ஊவா மாகாணம் 28
8) மேல் மாகாணம் 48
9) வடமேல் மாகாணம் 33
2011 ஆம் ஆண்டு மூன்று கட்டமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 17.03.2011, 23.07.2011 8.10.2011 ஆகிய மூன்று தினங்கள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட இத்தேர்தல்களில்
இலங்கையிலுள்ள 335, உள்ளூராட்சி சபைகளில் ¾ சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கீழ் இருந்து வந்துள்ளன. வாக்களிப்பு நிலைகளை நோக்குகின்ற போதும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய அளவில் 56 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 25 வீத வாக்குகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 14 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறானதொரு முன் கணிப்பின்படி பார்க்கின்ற போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றை தற்போதைய தேசிய அரசாங்கம் வைக்க முற்படுமாயின் அதன்பெறுமானங்கள் எவ்வாறு அமையுமென்பதே கேள்வியாகும்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக பெருமைப்பட்டுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவர்கள் 2011 ஆம் ஆண்டு தேர்தலை நடத்திய போது இருந்த சாதகமான நிலை, யுத்த வெற்றியைக் காரணம் காட்டியது மாத்திரமன்றி அவரின் அரசாங்கத்தின் செல்வாக்குப் போக்குகள், ஆதிக்கவல்லமைகள் பெருந்தொகையான உள்ளூராட்சி சபைகளை வெற்றிகொள்ள வைத்தது.
ஆனால் இன்றைய சூழ்நிலையைப் பார்க்கின்றபோது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரிந்து மைத்திரியணி மஹிந்தஅணியென்ற பிரிவை உருவாக்கி தவிர்க்கமுடியாத போட்டி நிலைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. மஹிந்த தன்னுடன் 50க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறேன் என்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமன்றி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமாயின் தன்னுடைய அணி தனித்து நின்று போட்டியிட்டு சாதனை புரிந்து காட்டுவதுடன் ஆளும் அரசாங்கத்தினை செல்லாக்காசு ஆக்கிக் காட்டுவேன் என்றும் சவால்விட்ட வண்ணம் இருக்கிறார்.
உண்மையோ, பொய்யோ நடந்த மேதினத்தில் அவருடைய செல்வாக்கை உறுதிப்படுத்திக் காட்டும் வகையில் காலி முகத்திடலில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அவரின் மே தினத்துக்கு வலுச்சேர்த்தது மாத்திரமின்றி தங்கள் ஆதரவையும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வானது தேசிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பேரிடியாக, சூளுரைப்பாக ஆகியிருக்கிறது என்பது மறுக்கப்படமுடியாத ஒரு விடயமாகும்.
அரசாங்கம் தேர்தலை நடத்த தயங்குவதற்கு இன்னுமொரு உள்முக காரணமாக தெரிவது, தேசிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் இரு பிரதான கட்சிகளும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தாம், தனித்தனியாகவே போட்டியிட வேண்டும். போட்டியிடப் போகின்றோமென்று கூறிக் கொண்டிருப்பது. இதற்கு காரணம் இருகட்சிகளிலுமுள்ள அமுக்கக் குழுக்கள். எங்கள் கட்சிகளின் செல்வாக்கு பெருக்கப்படவேண்டுமாயின் தனித்தன்மை பேணப்பட வேண்டுமாயின் தனித்தனியாகவே போட்டியிட வேண்டுமென, விடாப்பிடியாக நிற்பதை சுதந்திரக் கூட்டணியின் மூத்த அமைச்சர்களும் உறுப்பினர்களும் வலியுறுத்தி வருவதைக் காணுகிறோம்.
என்னதான் கூட்டரசாங்கம் ஒப்புக்கு நடத்தப்பட்டாலும் இருகட்சிகளும் தங்களது தனித்தன்மையை கைவிடவோ இழக்கவோ தயாரில்லாத போட்டி நிலையே, பனிப்போராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வகையான சூழ்நிலை தற்போதைய ஆளும் அரசாங்கத்துக்கு ஒரு இரண்டும் கெட்டான் நிலையையே கொண்டுவந்திருக்கிறது. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தில் கூட்டுக் கட்சியாக இருந்து வருகிற போதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி ஆளுமையை, எல்லாத்துறைகளிலும் செலுத்தி அடுத்த கட்டத்துக்கான நகர்வை மேற்கொண்டுவருகிறார் என மைத்திரி அணியினர் குற்றம் சுமத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இதேவேளை, 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னுள்ள நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கின்ற போது, ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி தொடர்ச்சியாக வீழ்ந்து வருவது தொடர்பில் கட்சியின் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் தலைமைத்துவத்தின் மீது அதிருப்தி கொண்ட ஒரு நிலையும் முன்பு இருந்துள்ளது.
ஆனால் தற்போதைய தலைமைத்துவத்தின் ஆளுமை மிக்க, செயல்முறைகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்ற பின்னணியில் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியானது தனது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் காட்டும் வகையில் எதிர்கொள்ளும் உள்ளூராட்சி தேர்தல்களையும் மாகாணசபை தேர்தல்களையும் திட்டமிட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இதில் காணக்கூடிய சங்கடமென்ன வெனில் தேசிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டு தேசிய அரசாங்கத்தை விமர்சிக்கும் சூழ்நிலையொன்றை ஐக்கிய தேசியக்கட்சியும் கைக்கொள்ள முடியாது, அதேபோன்று மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கூட்டணியும் செயற்பட முடியாது.
இவ்விரு கட்சிகளின் பொது எதிரியாகப் பார்க்கப்பட வேண்டியவர்களாக, மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரே காணப்படுகிறார்கள். உரலுக்கு ஒரு பக்க இடி மத்தளத்துக்கு இருபக்க இடியென்பது போல், மஹிந்த அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியையும் மறுபுறம் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, ஆட்சியாளர்களை சமாளிக்க வேண்டிய அரசியல் ஆடுகளமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலும் மாகாணசபை தேர்தலும் இருக்கப் போகிறது.
மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளின் தேர்தல், சர்வசன வாக்கெடுப்பு என்ற மூன்று தேர்தல்களும் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் எதை முந்தி நடத்துவது, எதை பிந்தி நடத்துவது என்ற சம போராட்டத்தில் இலங்கையரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்ற விடயம் யாவராலும் புரிந்து கொள்ளப்படுகிற விடயம். அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற அழுத்தம் உள்நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் பலப்பட்டுவருகிற நிலையில் சர்வசன வாக்கெடுப்பை முதலில் நடத்துவது என அரசு திட்டமிட்டாலும் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் அனர்த்தங்கள் அதிகமென்பதை அரசாங்கம் புரியாமலில்லை. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முதல் கட்டமாக நடத்தப்படுமாயின் அதனால் ஏற்படக்கூடிய பாதக – சாதக விளைவுகள் அரசியல் தீர்வு விடயத்தை பாதிக்கும் என்ற யதார்த்தமும் அரசை கதிகலங்க வைக்கிறது. இதேவேளை எதிர்வரும் செப்டெம்பருடன் காலாவதியாகிப்போகும் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலையும் இவ்வருட இறுதிக்குள் நடத்தியே தீர வேண்டும். எவ்வகை, எவ்வழியால் பார்ப்பினும் அரசாங்கம் எதிரணியின் சவால்களையும் சூளுரைப்பையும் சமாளிக்கும் உபாயங்களை உச்சளவில் வகுக்க வேண்டியது அவசியமே.