
முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர் (mark salter) இனால் எழுதப்பட்ட “TO END A CIVIL WAR” என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தற்போது இவ் இணையத் தளத்தில் வெளிவரும் சூழல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் தற்போது இலங்கையில் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்கவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவும், பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியை மீண்டும் பலப்படுத்தவும் மக்களிடம் அபிப்பிராயம் பெறப்பட்டு அரசியல் அமைப்பு சபையாக மாறியுள்ள பாராளுமன்றம் விவாதித்து வருகிறது.
இப் பின்னணியில் தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு என்ன? என்ற கேள்வி பல தரப்பாராலும் முன்வைக்கப்படுகிறது.
புலிகள் தனித் தமிழீழம் கேட்டு ஆயுதப் போராட்டத்தினை நடத்தி பலத்த தோல்வி அடைந்த பின்னணியில் அக் கோரிக்கையும் அத் தலைவர்களின் மறைவுடன் மரணித்துவிட்டதா? அல்லது அது இன்னமும் வலுவுள்ள கோரிக்கையாக உள்ளதா?
தாய்லாந்து பேச்சுவார்த்தைகளின் போது உள்ளக சுயநிர்ணய கோரிக்கையினை உண்மையில் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரமா?
இல்லையேல் உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து இயக்கத்திற்குள் வலுவான ஆதரவுப் போக்கு காணப்பட்டதா? இத்தகைய கேள்விகளை தற்போது நாம் கேட்கவேண்டியுள்ளது.
ஏனெனில் தாய்லாந்து பேச்சுவார்த்தைகள், அதனைத் தொடர்ந்து பயங்கரவாத இயக்கம் என தடை செய்த அமைப்புகளோடு நேரடியாக பேசுவதில்லை என்ற கொள்கைப் போக்குள்ள அமெரிக்கா தனது உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிற்றேஜ் அவர்களை எந்த அடிப்படையில் சந்திக்க சம்மதித்தது?
விடுதலைப்புலிகளின் தனித் தமிழீழக் கோரிக்கை, அதனை அடைய அவர்கள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றவற்றை மிகவும் வெளிப்படையாக அமெரிக்கா எதிர்த்து வந்தது.
இலங்கைக்கு நன்கொடை வழங்கும் நாடுகளின் மாநாட்டை நோர்வே தனது நாட்டில் நடத்தியபோது ராஜாங்க அமைச்சர் மிகவும் வெளிப்படையாகவே பிரிவினை சாத்தியப்படாது, பயங்கரவாதத்தினை கைவிடுகிறோம் என புலிகள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் முன்னிலையிலேயே கோரிய போது புலிகள் அவை குறித்து மௌனமாக இருந்துள்ளனர்.
அத்துடன் புலிகள் தரப்பில் பிரதான பேச்சாளராக செயற்பட்ட பாலசிங்கம் அவர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையை நோக்கிய வழிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில்தான் ஒஸ்லோ பிரகடனம் வெளியாகியது.
அப் பிரகடனத்தில் பரந்த சாத்தியமான ஒருமித்த சமாதானத்தை நோக்கிய கருத்தினை சகல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையிலான பொறிமுறை ஒன்றை உருவாக்க அரசு இணங்கியது.
குறிப்பாக ஜனாதிபதி சந்திரிகா மற்றும் எதிர்க் கட்சியினர் இதன் முன்னேற்றங்களை அறிதல் அவசியம் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.
ஓஸ்லோ பிரகடனம் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகங்களில் ஐக்கிய இலங்கையின் சமஷ்டி அமைப்பில் சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை எவ்வாறு எட்டுவது? என்பதை ஆராய்வது என்பதை ஏற்றுக்கொண்டனர்.
இதற்காக ஓர் உப குழு அமைக்கப்பட்டு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட அரசியல் அம்சங்களை நிறைவேற்றுவதற்கான வழி வகைகளை ஆராய்வது எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப் பிரகடனத்தில் வெளியிடப்பட்ட பல அம்சங்கள் தற்போதைய அரசினால் பொதுமக்கள் அபிப்பிராயத்தைக் கேட்டு வெளியிட்ட அறிக்கையில் தரப்பட்டுள்ளன.
ஒஸ்லோ பிரகடனத்தில் வெளியான அரசியல் கோரிக்கைகளில் சில பின்வருமாறு,
• மத்தியிலும், சுற்றிலும் அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது?
• மத்தியில் எவ்வாறு பகிர்வது?
• புவியியல் பிரதேசங்கள்.
• மனித உரிமைப் பாதுகாப்பு.
• அரசியல் மற்றும் நிர்வாகப் பொறிமுறை.
• பொது நிதி நிர்வாகம்.
• சட்டம் ஒழுங்கு.
மேற்குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்பாரும் ஏற்றுக்கொண்டது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
அதுவும் சமஷ்டி அடிப்படையில் தீர்வை நோக்கிச் செல்வது என்பது பல சிக்கல்களை நோக்கிச் செல்லும் வழியாக இருந்தது.
அதாவது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்பது புலிகளுக்கும், சமஷ்டியை ஏற்பது அரசிற்கும் அரசியல் தற்கொலையாகவே அமையும்.
எனவே இரு சாராருக்கும் ஏற்பட்ட இந்த உடன்பாடு குறித்து பலத்த சந்தேகம் அங்கு காணப்பட்டது. விடுதலைப்புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுள்ளார்களா?
என பாலசிங்கத்திடம் கேட்டபோது பிரபாகரனின் 2002ம் ஆண்டு மாவீரர் தின உரையை மேற்கோள் காட்டி புலிகளின் அரசியலின் இரட்டைத் தன்மையை விளக்கினார்.
அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்டையில் சுயாட்சி, சுய அரசு எட்டுவது முதலாது கட்டம்.
அரசாங்கம் இதில் நேர்மையாக பிரச்சனைகளை அணுகுமானால் இறுதித் தீர்வு ஐக்கிய இலங்கைக்குள் அமைந்ததாக அமையும்.
அரசு உள்ளக அம்சங்களைத் தடைசெய்யுமாயின், பிராந்திய அரசுக் கோரிக்கையை நிராகரித்தால் விடுதலைப்புலிகளுக்குள்ள மாற்று வழி சுதந்திர அரசே என்றார்.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கி பாலசிங்கம் திரும்பியதும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுகள் பற்றிய ஒன்றியம் நோர்வே தலைமையில் உருவாக்கப்பட்டு அலுவல்கள் தொடர்ந்தன.
புலிகள் தமது தற்போதைய மாற்றத்தை மக்கள் முன்னால் எவ்வாறு எடுத்துச் செல்வது? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போதைய நவீன உலகில் காணப்படும் மாற்றங்கள் பற்றிய கருத்துக்கள் எழுந்தன.
சுயாட்சி என்பது சமஷ்டிக் கட்டமைப்பிற்குள் மட்டுமே சாத்தியமாகும். சுயாட்சி, கூட்டாட்சி என்ற அடிப்படையிலான அரசுக் கட்டுமானமே தமது இலக்கு என புலிகளின் அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் விபரிக்கத் தயாரானார்கள்.
ஒஸ்லோ பிரகடனத்தில் காணப்பட்ட வாசகங்கள் சமஷ்டி பற்றி மட்டுமே குறிப்பிட்டதும் அதில் உள் அலகுகள் பற்றிய விபரங்கள் காணப்படாமையும் நோர்வேயினருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
அதாவது அரசியல் தீர்வை நோக்கிய பயணம் என்பதை விட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சி என எண்ணினார்கள்.
ஏதாவது ஒரு புள்ளியில் இவை தோல்வி அடைந்தால் தம்மீது பழி விழாமல் காத்துக்கொள்வதற்கான தந்திரமே எனவும் கருதினார்கள்.
அவ்வாறு தோல்வி அடைந்தால் மாவீரர் தின உரையில் தெரிவித்தவாறு பிரிவினையை நோக்கிய நியாயங்களாக இத் தோல்விகள் மாற்றம் பெறும்.
பாலசிங்கம் – பிரபாகரன் இடையே இடம்பெற்ற பலத்த வாக்குவாதம்: வன்னியிலிருந்து தந்திரமாக வெளியேறிய அன்ரன் பாலசிங்கம்!!

பல்வேறு சந்தேகங்களுக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது.
ஏனெனில் பிரிவினைக் கோரிக்கை இல்லாதது அவர்களுக்கு அது ஓர் வெற்றியாக அதாவது பேச்சுவார்த்தைகளின் வெற்றி எனக் கருதினார்கள்.
இதன் காரணமாகவே சமஷ்டி அடிப்படையில் பேசித் தீர்க்கத் தயாரானார்கள்.
இருப்பினும் சமஷ்டித் தீர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கச் செய்வது மிகவும் சிக்கலாக உள்ளது போலவே புலிகளுக்கும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எட்டுவது பிரச்சனையாக காணப்பட்டது.
இதனால்தான் இரு தரப்பார் மத்தியிலும் நம்பிக்கை காத்திரமானதாக இருக்கவில்லை.
சமாதானச் செயலகத்தின் செயலாளராக இருந்த முன்னாள் ராஜதந்திரி பேர்னார்ட் குணதிலக அவர்களின் கருத்துப்படி புலிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் குறித்து அரசுடன் உடன்பாட்டிற்குச் செல்வதில் அதிக அக்கறை கொள்ளவில்லை.
அவர்கள் காலத்தைக் கடத்துவதிலேயே தமது கரிசனையைச் செலுத்தினார்கள்.
பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள், இடம் பெயர்ந்த மக்களின் அவலங்கள் குறித்தே வற்புறுத்தினார்கள்.
அரசாங்கம் இவை பற்றிப் பேசத் தயாராக இருந்த போதிலும், அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளும் சமாந்தரமாக இடம்பெறுவதை வற்புறுத்தினார்கள்.
இதனால் பாலசிங்கம் பலத்த அழுத்தங்களை அனுபவித்தார்.
நோர்வே அதிகாரிகள் கொடுத்த அழுத்தங்களால் அவர் அரசியல் தீர்வு குறித்தப் பேச சம்மதித்தார். ஆனால் அவரால் அதனைத் தொடர முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் உணரத் தொடங்கினர்.
ஏனெனில் ஒஸ்லோ பிரகடனத்தின் மூலம் பாலசிங்கம் அதிகளவு விட்டுக் கொடுத்துள்ளார் என்பது புலிகளின் உயர் மட்டக் கருத்தாக இருந்தது.
ஓஸ்லோ சந்திப்பைத் தொடர்ந்து பாலசிங்கம் ஒரு சில வாரங்கள் வன்னியில் சென்று உயர் மட்டத்துடன் பேசச் சென்றிருந்தார்.
ஆனால் சென்ற இரண்டு நாட்களுக்குள் அவர் தனது உடல் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி தான் வெளியேற விரும்பவதாக பேர்னார்ட் குணதிலகவிற்கு தகவல் அனுப்பினார்.
அரசு உலங்கு விமானத்தை அனுப்பி அவரை வெளியேற உதவியது.
ஆனால் பின்னர் வந்த செய்திகளின்படி பாலசிங்கம் – பிரபாகரன் ஆகியோருக்கிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாகவும், அதன் விளைவாகவே உடல் சுகவீனத்தைக் காரணம் காட்டி வெளியேறியதாக தெரியவந்தது.
இலண்டன் வந்த பாலசிங்கம் வெளித் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டார்.
நோர்வேயின் அழைப்பிற்காக காத்திருந்தார்.
பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு பெருமளவு குறைந்தது. ஏனெனில் ஒஸ்லோ முடிவுகளில் தமிழ்ச் செல்வனும் திருப்தி அடையவில்லை.
இருப்பினும் புலிகளிற்கும், அரச தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் போர் விஸ்தரிப்பைத் தடுப்பது, சுமுக நிலைக்கு நிலமைகளை மாற்றுவது என்பது குறித்துப் பேசப்பட்டது.
இவை குறித்து பேச்சுவார்த்தைகள் 14-12-2002 ஆரம்பமாகின.
அதில் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் வாழ்ந்த மக்களை மீள அங்கு குடியமர்த்துவது தொடர்பான பேச்சுக்களே முக்கிய பங்கு வகித்தன.
இப் பிரச்சனையில் அமைக்கப்பட்ட குழுவினர் அப்போதைய யாழ். ராணுவ அதிகாரி சரத் பொன்சேகாவிடமிருந்து 21-12-2002 இற்கு முன்பதாக அறிக்கை ஒன்றைப் பெறுவதென தீர்மானித்தார்கள்.
புலிகளின் கோரிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை (EPDP)யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரத் பென்சேகாவின் அறிக்கை 20-12-2002 இல் கிடைத்தது.
அந்த அறிக்கை தொடர்பாக அரச தரப்பில் சரத் பொன்சேகா, புலிகள் தரப்பில் கேணல் தீபன் மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் வூர்கோவ்ட் ( General Furuhovde ) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்சேகவின் அறிக்கையில் ராணுவம் தனது கட்டுப்பாட்டு எல்லையைக் குறைப்பதாயின் புலிகளும் தமது ஆயுதங்களைக் குறைப்பதையும், போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதையும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டிருந்தது.
இக் கோரிக்கையை புலிகள் ஏற்காதது மட்டுமல்ல தம்மைச் சரணாகதி ஆக்குவதற்கான திட்டமாகவும் வர்ணித்தனர்.
அத்துடன் மனிதாபிமானக் கோரிக்கைகளோடு பாதுகாப்பு விவகாரங்களையும் இணைப்பதாகவும், யாழ்ப்பாண மக்களின் அவதிகளைக் குறைக்க ராணுவம் தயாராக இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இதில் முக்கிய அம்சம் என்னவெனில் சரத் பொன்சேகா சமர்ப்பித்த அறிக்கையில் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டே அடையாளப்படுத்தினார்.
இது புலிகளுக்கு மிகுந்த விசனத்தை அளித்தது.
இச் சந்தர்ப்பத்தில் கண்காணிப்புக் குழு விடுத்த தனது வருடாந்த அறிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இரு தரப்பினர் மத்தியிலும் படைச் சமநிலை அவசியம் என்பதை ஒப்பந்தம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான 4வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தபோது மீண்டும் அதி உயர் பாதுகாப்பு வலையப் பிரச்சனை மீண்டும் தொடர்ந்தது.
அத்துடன் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகள், புனர்வாழ்வுத் தேவைகள் என்பவை குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக் குழு ( Sub-Committee for Immediate Humanitarian and Rehabilitation Needs ) இக் குழு அமைக்கப்பட்ட பின்னர் இதற்கான பணத்தினைக் கையாழும் பொறுப்பு உலக வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்னொரு சர்வதேச நிறுவனம் இப் பிரச்சனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
புலிகளும் இதனை ஏற்று அதற்கு வடக்கு, கிழக்கு மீள் நிர்மாண நிதியம் ( North East Reconstruction Fund– NERF ) எனவும் பெயரிட்டனர்.
இதில் இரு தரப்பிலும் தலா 7பேர் நியமிக்கப்பட்டனர்.
இக் குழுவினர் பால் ரீதியான பிரச்சனைகள், மனித உரிமை மீறல் பிரச்சனைகளைக் கையாள தனித் தனிக் குழுவை அமைத்தனர்.
மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளைக் கண்காணிக்க முன்னாள் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் இயன் மார்ட்டின் ( ஐயn ஆயசவin ) அவர்களுக்கு அழைப்பு அனுப்பவும் தீர்மானித்தனர்.
பாதுகாப்பு வலையம் தொடர்பாக சரத் பொன்சேகா அளித்த அறிக்கையை புலிகள் நிராகரித்த போது ராணுவ தரப்பு, புலிகளின் ஆயுதக் குறைப்பை அதனுடன் இணைத்து வலியுறுத்தியது.
இது பெரும் முறுகல் நிலையை ஏற்படுத்தியதால் போர் விஸ்தரிப்பைத் தடுக்கும் குழுவிலிருந்து தாம் தற்காலிகமாக வெளியேறுவதாக புலிகள் அறிவித்தனர்.
இருப்பினும் அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்கு வெளியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் ஏற்றுக்கொண்டனர்.
vijaynambiar
அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் வாழ்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் காணப்பட்ட இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பாதுகாப்பு விடயங்களில் அனுபவஸ்தர் முன்னாள் இந்திய ராணுவ உயர் அதிகாரி நம்பியார் அவர்களை அழைத்து அறிக்கையைப் பெறுவதென தீர்மானித்தனர்.
நம்பியார் அவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டதும் அரச தரப்பில் பெரும் ஏமாற்றம் காணப்பட்டது.
gotabaya -vijay nambiyar
நம்பியார் – இந்திய உயர் ராணுவ அதிகாரி இலங்கை ஊடகங்களால் அவமானப்படுத்தப்பட்டார்.
இலங்கைப் பத்திரிகைகள் அவரை மிகவும் விமர்ச்சித்து எழுதின. புலிகளும் அவ் அறிக்கை குறித்து திருப்தி அடையாத போதிலும் விமர்சனத்தைத் தவிர்த்தனர்.
அரசினதும், ஊடகங்களினதம் இப் போக்கு நம்பியார் அவர்களை இப் பிரச்சனையிலிரந்து வெளியேற வைத்தது. இச் செயல்களின் தாக்கங்கள் போரின் இறுதிக் காலத்தில் வெளிப்பட்டிருந்தன.
ஜப்பானிய விருந்தினர்களை பாலசிங்கம் அலட்சியப்படுத்தினர்: பிற்காலத்தில் விளைவு பாரதூரமாக அமைந்தது!!

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
தமது வீரப் போராட்டங்களையும், தமிழ் மக்களது ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகளையும் உலகறியச் செய்வது அவர்களது நோக்கமாக இருந்தமையால் பல்வேறு தலைநகரங்களை அவர்களும் விரும்பியே தேர்ந்தெடுத்தனர்.
இப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியன செயற்பாட்டில் இருந்த வேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் என்ன நடந்தது? என்பதை அறிவதும் அவசியமானது.
அதாவது உலகத்தின் முன்னால் சமாதானம் பேசுவதாக காட்டிக்கொண்ட அவர்கள் தமது போராட்ட களத்தில் எவ்வாறு நடந்துள்ளார்கள்? என்பதை சமகாலத்தில் புரிந்து கொள்வதும் முக்கியமானது.
அந்த வகையில் இதே இணையத் தளத்தில் தொடர்ந்து வெளிவரும் தமிழினி அவர்களின் ‘ கூர்வாளின் நிழலில்’ நூலில் வெளியான கட்டுரைகளில் வெளியிடப்பட்டுள்ள அனுபவங்களையும் கவனத்தில் கொள்வது இன்றைய அரசியல் அவலத்தின் பின்னணியை சரிவரப் புரிந்து கொள்ள உதவும்.
நோர்வேயில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பினைத் தொடர்ந்து ஜேர்மனியில் தமது 5வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள்.
2003ம் ஆண்டு பெப்ரவரி 7ம்,8ம் திகதிகளில் பேர்லின் நகரில் இடம்பெற்றது.
இச் சந்திப்பிற்கு முதன் நாள் காரைநகர் கடற்பாகத்தில் புலிகளின் இரண்டு கப்பல்கள், மீன்பிடி படகுகள் போன்றவற்றின் நடமாட்டத்தினை இலங்கைக் கடற்படை அடையாளம் கண்டது.
உடனேயே அவற்றினைப் பரிசோதனை செய்யப்போவதாக கடற்படை மிரட்டியது. புலிகள் அனுமதி மறுத்ததோடு நோர்வே தலைமையிலான கடல் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்தார்கள். இதனால் அவர்கள் வரும் வரை கடற்படை காத்திருக்க நேரிட்டது.
பேர்லின் பேச்சுவார்த்தைகளில் கலந்தகொண்ட அரச தரப்பினர், நிலமைகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க எண்ணினர்.
கண்காணிப்புக் குழுவினர் கப்பல்களைப் பரிசோதிக்க அனுமதித்தனர். ஆள் இல்லாமல் இருந்த கப்பல்களுக்குள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்காணிப்புக் குழுவினர் கண்டனர்.
கப்பலில் வந்த புலிகளின் உறுப்பினர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தாமும் தற்செயலாக உயிர்தப்பியதாக கண்காணிப்பு உறுப்பினர்களும் தெரிவித்தார்கள்.
இருப்பினும் இவை கடற்படையால் மிகவும் திட்டமிடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறும் வேளை இத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக பின்னர் செய்திகள் கசிந்திருந்தன.
மிகவும் நெருக்கடியான சூழலில் இடம்பெற்ற பேர்லின் பேச்சுவார்த்தைகளில் மனித உரிமை அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. நாலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது
மனித உரிமை அம்சங்கள் குறித்த ஆலோசனையைப் பெற முன்னாள் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சார்ந்த இயன் மார்டின் அவர்களிடம் அதற்கான திட்டங்களைப் பெறுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனவே பேர்லின் பேச்சுவார்த்தைகளில் அதற்கான பொறிமுறை, போராளிகளுக்கு மனித உரிமைகளைப் பேணல் தொடர்பான பயிற்சிகள், அரச தரப்பில் மனித உரிமை தொடர்பான சட்டமூலங்களைக் கொண்டு வருதல் என்பன பேசப்பட்டன.
இச் சந்தர்ப்பத்தில் சிறுவர்களைப் பேராளிகளாக மாற்றும் புலிகளின் முயற்சிகள் குறித்தும் பேசப்பட்டன.
இதற்காக ஐ நா சபையின் ‘யூனிசெவ்’ என அழைக்கப்படும் சிறுவர் பிரிவு புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
இப் பிரச்சனையில் தம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயம் சர்வதேச அளவில் ஏற்படக்கூடாது என்பதில் புலிகளும் கவனமாக இருந்ததால் ஒத்துழைப்பு வழங்க தாமும் தயாராக இருந்தனர்.
சிறுவர்கள் இயக்கத்தில் இணைவதற்கு இரண்டு காரணங்கள் இருந்ததாக புலிகள் தரப்பில் கூறப்பட்டது. அதாவது போரட்டத்தில் இருந்த பற்றுறுதி காரணமாக தாமாக இணைந்தனர் எனவும், அடுத்ததாக வறுமை இன்னொரு காரணம் எனவும் தெரிவித்தார்கள்.
இப் பிரச்சனை நோர்வேயின் கண்காணிப்புக் குழுவினர் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறுவர்கள் மத்தியில் பயம், பீதி என்பது அதிகமாக காணப்பட்டது.
வறுமைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது பிள்ளைகளை புலிகளிடம் ஒப்படைக்க தயாராக இருந்தார்கள்.
ஏனெனில் அவர்கள் வறுமையால் வாடுவதை விட புலிகளிடம் செல்வது குறைந்த பட்சம் உணவு வேளைக்குக் கிடைக்கும் என எண்ணினார்கள்.
அது மட்டுமல்ல அவர்களுக்கு கல்வி, கட்டுப்பாடு, ஆங்கில மொழி அறிவு போன்றனவற்றையும் அவர்கள் வழங்கியிருந்தனர்.
நோர்வே காண்காணிப்புக் குழு அதிகாரி ஒருவரின் அனுபவம் இவ்வாறு அமைந்திருந்தது.
15 வயதான சிறுவன் ஒருவன் புலிகளால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தான். பின்னர் கண்காணிப்பு அதிகாரிகளின் வற்புறுத்தலால் விடுவிக்கப்பட்டிருந்தான்.
அந்த அதிகாரி அவனது வீட்டிற்குச் சென்று தாயிடம் விசாரித்தபோது அப் பெண் அவன் சுயமாகச் சென்றான் என தெரிவித்திருந்தார்.
அப் பையனின் தேவைக்காக சப்பாத்து, நூல்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கியிருந்தனர்.
அப் பையன் கெட்டிக்காரனாக இருப்பதாக அவர்களது அபிப்பிராயம் இருந்தது. பாடசாலைக் கல்வி முடிந்ததும் மேலும் கல்வியைத் தொடருமாறு அறிவுரை கூறி அவர்கள் திரும்பினர்.
சில மாதங்களின் பின்னர் அவன் மீண்டும் புலிகளிடம் சென்றுவிட்டான். ஆறு மாதங்களின் பின்னர் அந்த அதிகாரி அப் பையனை புலிகளின் போராளியாக, மாவீரர்களின் துயிலுமிடங்களைக் காவல் செய்யும் ஒருவனாக காண நேர்ந்தது.
இந்த அதிகாரியை கண்டதும் சுற்றும் முற்றும் பார்த்தபின் சில நிமிடங்களின் பின்னர் தனக்கு உதவி செய்தமைக்கு நன்றி எனத் தெரிவித்து, தனக்கு அங்கே இருப்பதுதான் விருப்பம் என்றான்.
நானாகவே இந்த வாழ்க்கையைத் தேர்வு செய்தேன். தான் ஆங்கிலமும், சந்தைப்படுத்தல் தொடர்பான கல்வியையும் கற்பதாக கூறினான்.
எனவே சிறுவர் தொடர்பான பிரச்சனை பல்வேறு சிக்கலான அம்சங்களைக் கொண்டது. அதனை வெறும் மனித உரிமைப் பிரச்சனையாக, குறிப்பாக வறுமையில் வாழும் சிறுவர்கள் குறித்து அவ்வாறு பார்க்க முடியாது என்பது அவர்களது அபிப்பிராயமாக இருந்தது.
இதன் பின்னணியில் பாலசிங்கம் சிறுவர்களை போராட்டத்தில் இணைப்பது குறித்த வாதங்களின்போது அவற்றை எதிர்த்ததோடு தாம் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையங்களை நடத்துவதாக நியாயப்படுத்தினார்.
பேர்லின் பேச்சுவார்த்தைகளின் முடிவில் 6வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை யப்பானில் 2003ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதன் பிரகாரம் முதல்நாள் பேச்சுவார்த்தைகளில் கடலில் மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு இரு தரப்பிலுமுள்ள கடற்படையின் உயர்மட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என்போர் அதற்கான வரைமுறைகளைத் தயாரித்தனர்.
இரண்டாவது நாள் பேச்சுவார்த்தைகளிற்கு யப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி SIHRN என அழைக்கப்பட்ட உடனடி மனித நேய மற்றும் புனர் வாழ்வு தேவைகளுக்கான அமைப்பின் பொருளாதார ஆலோசகர் என்ற வகையில் தலைமை தாங்கினார்.
இச் சந்தர்ப்பத்தில் அங்கு கலந்துகொண்ட தமிழ்ச்செல்வன் அரசின் தாமதப் போக்குக் குறித்து பல குற்றங்களை அடுக்கிச் சென்றார்.
உடனடித் தேவைகளுக்கென தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசு பணம் ஒதுக்கவில்லை. புனர்வாழ்வை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்பு வலையங்களிலிருந்து ராணுவம் விலகவில்லை.
இவ்வாறாக தொடங்கிய காலை விவாதங்கள் மாலையில் மனித உரிமை அம்சங்கள் குறித்து வாதிக்கத் தொடங்கியது.
அரசு தரப்பும், புலிகள் தரப்பும் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய திட்டங்களுக்கான அம்சங்கள் இயன் மார்டினால் தயாரிக்கப்பட்டிருந்தது. இவை அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பேசுபொருளாக தீர்மானிக்கப்பட்டன.
• அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மனிதநேய கடப்பாடுகள் என்பவற்றை இரு தரப்பினதும் அதிகாரிகள் தமது செயற்பாடுகளின் போது கடைப்பிடிக்கும் கோட்பாடுகள்.
• மனித உரிமைக் கோட்பாடுகளை மதித்துச் செயற்படும் பொருட்டு புலிகள் தரப்பு போராளிகள், பொலீஸ், சிறைச்சாலை அதிகாரிகள் என்போருக்கு பயிற்சி வழங்குதல் என்பதுடன் விசேடமாக ஐ நாடுகள் சிறுவர் அமைப்பின் கோட்பாடுகள், அகதிகள் அமைப்பின் கோட்பாடுகள், செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச மனித நேய சட்டங்கள் பற்றிய பயிற்சிகள்.
• இலங்கை மனித உரிமைச் சபையின் செயற்பாடுகளைப் காத்திரமான விதத்தில் நாடு முழுவதும் கண்காணிக்கும் ஆற்றலைப் பலப்படுத்தும் பிரேரணைகளை மேற்கொள்ளல்.
இதனைத் தொடர்ந்து நீண்ட காலப் பிரச்சனைகள் குறித்து அதாவது அரசியல் தீர்வு குறித்த விவாதங்களுக்கு பேச்சுவார்த்தைகள் திரும்பின. சமஷ்டி அரசியல் தீர்வில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளின் அடிப்படைகள் குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இச் சந்தர்ப்பத்தில் தமது தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் குழுவின் விபரங்களை பாலசிங்கம் அறிவித்தார்.
இக் குழுவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உயர்மட்டத்தைச் சேர்ந்த 21 உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இவர்களே எதிர்வரும் காலங்களில் அரசியல் தீர்வு குறித்த ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வர். குறிப்பாக சமஷ்டி முறைகள் பற்றி அறிந்து கொள்வர்.
இவ் ஆய்வுகளின் முடிவில் ஐக்கிய சமஷ்டி இலங்கையில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வை முன்வைப்பர்.
ஜப்பானிய பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் குறித்து எரிக் சோல்கெய்ம் அவர்களின் கருத்து இவ்வாறு இருந்தது.
இப் பேச்சுவார்த்தைகளின் போது ஜப்பானியர்கள் மதிய உணவை மிகவும் பிரமாதமான விதத்தில் தயாரித்துப் படைத்திருந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பினரைத் தவிர ஏனையோர் அதாவது இலங்கை அரச தரப்பினர், நோர்வே மற்றும் யப்பானியர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வு குறித்து அங்கு கலந்துகொண்ட உலகப் பத்திரிகையாளர்கள் புலிகள் யப்பானியர்களைப் புறக்கணித்தார்கள் என செய்திகளை வெளியிட்டிருந்தனர்.
இவ் விருந்தினைப் புறக்கணித்த புலிகள் தரப்பினர் அங்கிருந்த இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட உணவினைத் தனது கோட்டல் அறைக்கு எடுத்து பகிர்ந்துகொண்டனர்.
யப்பானியர்களால் புலிகளின் இச் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது அவர்களின் ராஜதந்திர பிரச்சனை என எண்ணினார்கள்.
இச் சந்தர்ப்பத்தில் இன்னொரு ராஜதந்திரப் பிரச்சனை எழுந்தது. சில பத்திரிகையாளர்களை பாலசிங்கம் தனது அறைக்கு அழைத்து அவர்களுக்கு குடிபானங்களை வழங்கி கௌரவித்தார்.
இச் செயல்களை ஏற்றுக்கொள்ளாத யப்பானியர்கள் அச் செலவுகளை வழங்காது தவிர்த்தார்கள்.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் யப்பானின் முக்கிய பகுதிகளைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் பாலசிங்கம் கலந்துகொள்ளாது தவிர்த்தார். இவை எதிர்காலத்தில் பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்த தவறவில்லை
உலக நாடுகள் விடுதலைப் புலிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளதை பாலசிங்கம் நன்கு தெரிந்திருந்தார்!!

• இலங்கை அரசு சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன் பாலசிங்கம், சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார். ஆனாலும் அவ்வாறான நிலமையைத் தவிர்க்க ஏன் முயற்சிக்கவில்லை?
• புலிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட சக்திகள் இந்த நாடுகளின் ஆதரவைக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்ததும் புலிகளைத் தோற்கடிக்கும் சதிவலைகளின் சூழ்ச்சிகளா?
• இரு சாராருமே சர்வதேச ஈடுபாடு அதிகம் இருப்பதை விரும்பவில்லை.
தொடர்ந்து…..
யப்பானில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவுகள் புலிகளுக்கும், அரசிற்கும் திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை.
குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபையைச் சார்ந்த இயன் மார்டின் வழங்கிய அறிக்கையில் மனித உரிமை பேணப்படுவதைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதை புலிகள் கடுமையாக எதிர்த்தனர். பதிலாக இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்பினர் கண்காணிப்பதை ஏற்றுக்கொண்டனர்.
இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இலங்கை அரசின் கீழ் உள்ள எந்த அமைப்பின் நடவடிக்கைகளிலும் நம்பிக்கை இல்லாத அவர்கள் மனித உரிமை அமைப்பை ஏற்றுக்கொண்டது ஒரு புறம் வியப்பை அளித்த போதும் அதில் காணப்படும் குறுகிய நோக்கத்தைப் பலரும் உணர்ந்தனர்.
இலங்கையின் மனித உரிமை அமைப்பு எந்தவித அதிகாரங்களும் அற்றது.
அது மட்டுமல்லாமல் கண்காணிக்கும் அளவுக்கு பலம்வாய்ந்த அமைப்பாகவும் இருக்கவில்லை.
இது பலவிதத்திலும் தமக்கு வாய்ப்பானது எனவும், தம்மால் தப்பிக்க முடியும் எனவும் அவர்கள் கருதினர். அத்துடன் அரச தரப்பினரும் இதில் உடன்பட்டுச் செல்வது கவனிக்கத்தக்கது.
இரு சாராருமே சர்வதேச ஈடுபாடு அதிகம் இருப்பதை விரும்பவில்லை.
ஆனால் சர்வதேச ஈடுபாட்டினை ஒரே ஒருவர் மட்டுமே விரும்பினார். அவர் வேறுயாருமல்ல. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் ஆகும்.
அப்போதைய ரணில் அரசு இப் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலேயே கவனத்தைச் செலுத்தினர்.
இச் சம்பவங்கள் தொடர்பாக அப்போதைய சமாதானச் செயலக அதிகாரியான பேர்னார்ட் குணதிலக தெரிவிக்கையில்,
ஒஸ்லோவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில அம்சங்கள் குறித்து நாம் பேசலாமா? என தான் பாலசிங்கத்தைக் கேட்டபோது அதற்குத் தனக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்த, இரண்டு கைகளாலும் தனது தொண்டையை மறைத்து அவ்வாறு பேசினால் தனது கதி அதுவாகும் எனச் சைகை காட்டியதாக கூறுகிறார்.
யப்பான் சந்திப்பினைத் தொடர்ந்து அமெரிக்காவில் இலங்கைக்கு உதவியளிக்கும் நாடுகளின் சந்திப்பு 2003ம் ஆண்டு ஏப்ரல் 14ம் 15ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சந்திப்பிற்கு விடுதலைப்புலிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
அமெரிக்கா புலிகளைப் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்திருந்ததால் அழைப்பு அனுப்பப்படவில்லை. புலிகள் தமக்கு அமெரிக்கா அழைப்பு அனுப்பும். அதன் மூலம் தடைகள் எடுக்கப்பட வாய்ப்பு உண்டு என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அப்போதைய உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிற்றேஜ் புலிகளுக்கு ஓர் செய்தியை அங்கு தெரிவித்தார்.
புலிகளின் தற்போதைய போக்குக் குறித்து தாம் ஒரளவு திருப்தி அடைவதாகவும், இருப்பினும் அவர்கள் பயங்கரவாதத்தினைக் கைவிடுவதாக சொல்லிலும், செயலிலும் காட்டவேண்டுமெனவும், அவ்வாறான மாற்றம் ஏற்படின் தாம் பயங்கரவாத தடைப் பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அங்கு இலங்கை அரசின் குழுவிற்குத் தலைமைதாங்கிச் சென்ற அமைச்சர் மிலிந்த மொறகொட தனது உரையில்…. “இரு தரப்பாரும் நிரந்தர அரசியல் தீர்வுகளை சமஷ்டி வடிவத்திற்குள் அதிகார பரவலாக்க அடிப்படையில் தீர்ப்பதற்கான வழிவகைகளில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
இலங்கை அரசு தரப்பினர் பேச்சுவார்த்தைகள் ஓரளவு முன்னேறி வருவதாக கூறி உதவி வழங்கும் நாடுகளை நம்ப வைக்க பலத்த முயற்சிகள் எடுத்தனர்.
அவர்களைப் பொறுத்தமட்டில் உதவிகளைப் பெறுவதன் மூலம் ஆட்சியைப் பலப்படுத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் தாம் அடுத்து எடுக்கவுள்ள திட்டங்களை அங்கு அறிவித்தனர்.
• சுமார் 10 லட்சம் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் செயலிழக்கச் செய்வது.
• பாதிக்கப்பட்டுள்ள நகரங்கள், கிராமங்களைப் புனரமைப்பது.
• உள் நாட்டில் இடம்பெயர்ந்துள்ள 10 லட்சம் அகதிகளுக்கான இருப்பிடங்கள், விவசாய உபகரணங்களை வழங்குதல்.
• போரினாலும், போதிய வசதி இல்லாமையாலும் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைப் புனரமைப்பது.
• நாடு முழுவதும் வாழும் மக்கள் அச்சமில்லாமல் தமது வேலைகளுக்குச் செல்வதை உறுதிப்படுத்துதல்.
அங்கு சமூகமளித்திருந்த உதவி அளிக்கும் நாடுகள் பல பேச்சுவார்த்தைகளின் முடிவுகளிலேயே தமது உதவிகள் தங்கியிருப்பதை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க அங்கு உடன்பாடு காணப்பட்டது.
அமெரிக்க உதவிகளைப் பெறுவது இலங்கைக்கு எவ்வாறு பயனுள்ளது? என்பது குறித்து தெரிவிக்கையில்..,
அமெரிக்கா போன்ற நாடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதால் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடையாமல் பாதுகாப்பதற்கான வலையாக அது அமையும் என்பது மிலிந்த மொறகொட இன் அபிப்பிராயமாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் அமெரிக்கா தமக்குப் பின்னால் இருப்பதாக இலங்கை மக்களுக்கு குறிப்பாக சிங்கள மக்களுக்க நம்பிக்கை கொடுப்பதும் தேவையாக இருந்தது.
அமெரிக்க சம்பவங்கள் புலிகள் தரப்பில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை தாம் அப்போது விளங்கிக்கொள்ளவில்லை என எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.
அதன் பின்னர் அதாவது.., புலிகள் அமெரிக்காவிற்கு அழைக்கப்படாதது, அமெரிக்க அமைச்சரின் உரை போன்றன புலிகள் தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
தாம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை தற்காலிகமாக ஒத்திப் போட்டுள்ளதாக புலிகள் அறிவித்தனர்.
இப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒதுங்குவதற்கான வேளையை அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இவை அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்ததாக சோல்கெய்ம் கூறுகிறார்.
இந்த முடிவுக்குச் செல்வதற்கு தொடர்ச்சியாக இடம்பெற்ற பல சம்பவங்கள் காரணமாக அமைந்தன. ஆனால் அவை தனது கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.
சர்வதேச சமூகத்தினால் தான் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரபாகரன் உணர்ந்ததாகவும், அமெரிக்க சம்பவங்கள் அதனை எடுத்துக் காட்டியதாக அவர்கள் கருதினர்.
புலம்பெயர் தமிழர்களும் சமஷ்டி அரசியல் தீர்வில் பலத்த சந்தேகங்களை வெளிப்படுத்தியதாகவும், நாம் பேச்வார்த்தைகளை முறிக்கவில்லை, ஒத்திப் போட்டுள்ளோம் என பாலசிங்கம் விளக்கியதாகவும் சோல்கெய்ம் கூறுகிறார்.
அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தைகள் குறித்து பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருந்ததாகவும் குறிப்பாக ராணுவ தயாரிப்புத் தொடர்பாக இருந்ததாகவும், ரணில் பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் செலுத்தியதாகவும் மிலிந்த மொறகொட குறிப்பிடுகிறார்.
புலிகள் ஓர் ராணுவ அமைப்பு என்பதால் நோர்வேயின் பணி மட்டும் போதாது. பலமான நாடுகளான அமெரிக்கா, யப்பான் என்பனவும் இதில் இணைவது அவசியம் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.
இந்தியாவிற்கு அவ்வப்போது நிலமைகளை விளக்கி வந்த நிலையில் அவர்கள் அதனை ஆதரித்த போதும் 1987 அனுபவங்கள் நேரடியாக தலையிடுவதை தடுத்து வந்தன.
அமெரிக்க பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்த நிலையில் மூதூரில் தமிழ்- முஸ்லீம் தாக்குதல்கள் ஆரம்பித்தன.
யூன் மாதத்தில் யப்பானில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கல்ந்து கொள்ள சம்மதித்திருந்த புலிகள் தற்போது பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதால் யப்பான் மாநாட்டிலும் கலந்துகொள்ளவில்லை என அறிவித்தனர்
இம் முடிவு பல தொடர்ச்சியான காரணிகளின் விளைவாக காணப்பட்டது. யப்பானில் இடம்பெற்ற மாநாட்டில் அரச தரப்பினரும், அனுசரணையாளர்களும் அரசியல் தீர்வை அடைவதில் காட்டிய தீவிரத்தினை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளில் காட்டவில்லை.
இதன் விளைவாக போரை விரிவடையாமல் தடுப்பது, வாழ்வினை சுமுக நிலைக்கு எடுத்துச் செல்வது என்ற நோக்கங்கள் புனர்வாழ்வு, மீள்குடியமர்வு விடயங்கள் நடைபெறாததால் தோல்வி அடைந்ததாக பாலசிங்கம் கருதினார்.
அடுத்தது., சர்வதேச உதவிகளை நாடிய அரசின் முயற்சிகள் தெற்கின் பொருளாதாரத்தைக் கட்டுவது, சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிவித்த பாலசிங்கம் சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார்.
பேச்சுவார்த்தைகளில் படிப்படியாக சர்வதேச நாடுகள் ஈடுபடுவது குறித்து தனது அச்சத்தை வெளியிட்ட பாலசிங்கம், இலங்கைக்கு உதவி வழங்குவது என்ற போர்வையில் பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி அரசைப் பலப்படுத்தும் வகையில் செயற்பட்டு அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான பலத்தின் சமநிலையைக் குலைக்க திட்டமிடுவதால் இச் சூழ்ச்சியிலிருந்து புலிகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புலிகளுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் செயற்பட்ட சக்திகள் இந்த நாடுகளின் ஆதரவைக் கோரி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் செய்ததும், பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருந்ததும் புலிகளைத் தோற்கடிக்கும் சதிவலைகளின் சூழ்ச்சிகளா? என எண்ணத் தோன்றுகிறது.
ஒரு புறத்தில் சிங்கள தீவிரவாத சக்திகள் அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்ட, மறு புறத்தில் இலங்கை அரசைப் பலப்படுத்தி ராணுவச் சமநிலையைக் குலைக்க மேற்குலக நாடுகள் சூழ்ச்சி செய்வதாக புலிகள் குற்றம் சுமத்துவது ஓர் பொதுவான போக்கை அடையாளப்படுத்துகிறது.
இரு பக்கத்திலுமுள்ள தீவிரவாத சக்திகள் அந்நிய நாடுகள் இப் பிரச்சனையில் தலையிடுவதை விரும்பவில்லை என்பதாகும். அதன் விளைவு தான் இன்றைய அனுபவங்களா?
‘ஈ.பி.ஆர்.எல் எஃப் தலைவர் சுபத்திரன் புலிகளால் படுகொலை!!: அடுத்த சில மணி நேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது!

• யூன் 9ம் திகதி யப்பானில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென கடன் வழங்கும் நாடுகளின் மாநாடு.
• யூன் 14ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தம்பிராஜா சுபத்திரன் புலிகளால் படுகொலை.
• சில நாட்களில் புலிகளின் இடைக்கால நிர்வாக கோரிக்கை பற்றி ஆராய அரச சட்ட மா அதிபர் கந்தப்பர் கமலசபேசன் லண்டன் பயணம்.
அமெரிக்காவில் இடம்பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்புக் கிடைக்காத புலிகள் தம்மை சர்வதேச வலைப் பின்னலிற்குள் சிக்க வைக்க அரசு முயற்சிப்பதாக எண்ணி பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
புலிகள் தமது முடிவுக்கான காரணங்களை பிரதமர் ரணிலிற்கு எழுத்து மூலம் அறிவித்தனர்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச உதவியை எதிர்பார்த்துப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அரச தரப்பினருக்கு இச் செய்தி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரச்சனைகளைத் தீர்க்க தாம் தயார் எனத் தெரிவித்த நிலையில், புலிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்த பின்னணியில் பேச்சுவார்த்தை குழம்பியது நோர்வே தரப்பினருக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் போரில் ஈடுபடுவதோ, அல்லது நிரந்தரமாக பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதோ மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புலிகள் நன்கு தெரிந்திருந்னர்.
சர்வதேச தரப்புடன் இப் பேச்சுவார்த்தைகளை இணைப்பது புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தணிக்க உதவும் என தாம் நம்பியதாக எரிக் சோல்கெய்ம் குறிப்பிடுகிறார்.
சமஷ்டி அடிப்படையில் பிரச்சனைகளைத் தீர்ப்பது, பொருளாதார நிலமைகளை மேம்படுத்துவது முக்கியமான தேவை என்பதால் அரசாங்கத்தையும் புலிகளின் கோரிக்கைகள் தொடர்பாக துரிதமாக முடிவுகளை எடுக்குமாறு நோர்வே வற்புறுத்தியது.
பேச்சுவார்த்தைகளிலிருந்து புலிகள் விலகுவதற்கு மேற் குறித்த காரணங்கள் இருப்பினும் இன்னொரு அம்சம் பிரதான பாத்திரம் வகித்ததாக எரிக் சோல்கெய்ம் கூறுகிறார்.
அதாவது.., பாலசிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து பிரபாகரனுக்கு சந்தேகம் காணப்பட்டது.
அது மட்டுமல்லாமல் ரணிலின் நோக்கங்களை நம்பியபோதும் அவரால் அதை நிறைவேற்ற முடியுமா? என்பது குறித்தும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, அதன் தலைவர் சந்திரிகா ஆகியோரின் பலம் குறித்தும் பிரபாகரன் நன்கு தெரிந்திருந்தார்.
அத்துடன் ரணில் ஏற்படுத்தி வரும் சர்வதேச வலைப்பின்னல் குறித்தும் கவலை கொண்டிருந்தார். ஏற்கெனவே ராஜிவ் காந்தி கொலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புலிகள் தொடர்ந்தும் தற்போதைய சர்வதேச ஈடுபாடுகளால் மேலும் தனிமைப்படுத்தப்படக்கூடும் என்ற கவலையும் காணப்பட்டது.
அத்துடன் மனித உரிமைகளைப் பேணுதல் சம்பந்தமாக நாட்டின் சிவில் சமூகத்தினதும், சர்வதேச அழுத்தங்களும் பேச்சுவார்த்தைகளிலிருந்து அவர்கள் விலகுவதற்கு காரணிகளாக அமைந்தன.
நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்காமல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது, அரசினால் மேலும் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்வது கடினம் என்பதை பிரபாரனால் புரிந்து கொள்ளாவிடினும், பாலசிங்கம் புரிந்துகொண்டார்.
சர்வதேச உதவிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை புலிகள் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஏற்கெனவே வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொருளாதாரக் கட்டுப்பாடு அவர்கள் கையில் இருந்தது.
அரச நிர்வாக கட்டுமானங்கள், நீதிமன்றங்கள் நிர்வகிக்கப்பட்டன. இவை புலிகளின் அணுகுமுறைகளோடு ஒப்பிடுகையில் எதிர்பார்த்ததுதான் என்பதை நோர்வே தரப்பினர் ஏற்றுக்கொண்ட போதிலும் பலமான அரசியல் கட்டுமானங்கள் படிப்படையாக வேர்கொள்ள வேண்டுமென தாம் எதிர்பார்த்ததாக நோர்வே தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புலிகள் தரப்பினர் ரணிலுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து ரணிலின் பதில் 2003ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி அனுப்பப்பட்டது.
(Liberation Tigers of Tamil Eelam (LTTE) leader Velupillai Prabhakaran presented a gold carved map of the separate state Eelam and the Tiger insignia as a gift to Japan’s Special envoy Yasushi Akashi at the end of the three hour long discussions the Japanese team held with the rebel group at their Kilinochchi stronghold. )
புலிகள் பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டும் என்பதை வற்புறுத்த யப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி மே மாதம் 7ம் திகதி பிரபாகரனைச் சந்தித்தார்.
அச் சந்திப்பின்போது யப்பானில் நடைபெறவுள்ள உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் புலிகளையும் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
உதவியும், பேச்சுவார்த்தைகளும் சமாந்தரமாக செல்லவேண்டுமெனவும், யாரும் உதவிகளைப் பெறும்போது சமாதான முயற்சிகளில் தமது பங்கினைத் தட்டிக் கழிக்க முடியாது எனவும் கூறினார்.
இச் சந்தர்ப்பத்தினை விடுதலைப் புலிகள் நழுவ விட்டால், அவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்க நீண்ட காலம் எடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
அடுத்த நாள் அதாவது மே 8ம் திகதி நோர்வே தூதுக் குழுவினர் பாலசிங்கத்துடன் புலிகளின் ராணுவத் தலைவர்களான சூசை, பானு, பால்ராஜ் ஆகியோரை முதன்முதலாக சந்தித்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் கடலில் சுதந்திரமாக செயற்படும் உரிமை குறித்த அம்சங்கள் குறிப்பாக கடலில் பயிற்சி செய்தலுக்கான எல்லைகள் பற்றி பேசப்பட்டன.
இக் காலகட்டத்தில் தென்னாசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரீனா றோக்கா இலங்கை வந்திருந்தார். அவரும் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு புலிகளை வற்புறுத்தினார்.
சமாதான முயற்சிகளை மேலும் எடுத்துச் செல்வதற்கு யப்பான் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் வற்புறுத்தினார்.
அமெரிக்க அமைச்சர் புலிகளை நோக்கி இக் கோரிக்கையை வைத்த விதம் பற்றி எரிக் சோல்கெய்ம் குறிப்பிடுகையில் ஆப்கானிஸ்தான் தலிபான், பாலஸ்தீன குழுக்கள் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறைக்கும், புலிகளைக் கையாளும் முறைக்கும் வேறுபாடு காணப்பட்டதாகவும், குறிப்பாக பேச்சுவார்த்தைகளில் புலிகளை இணைப்பது, சமாதான முயற்சிகளைச் சாதகமாக்குவது என்பதில் அவர்களின் கவனம் சென்றது என்கிறார்.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இன்னொரு தடை பாலசிங்கத்தின் வெளியேற்றமாகும்.
பாலசிங்கத்திற்கும், பிரபாகரனுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறபாடுகள் அவரையும், அவரது மனைவி அடேல் பாலசிங்கத்தையும் உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வைத்தது.
வைத்திய காரணங்களைக் கூறி 11-05-2003 இல் இவர்கள் வெளியேறிய போதும் அதன் பின்னர் அவருக்கு பதிலாக தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டதும் நிலமைகளைத் தெளிவு படுத்தின.
இதனைத் தொடர்ந்து மே 15ம் திகதி நோர்வே தூதுக் குழுவினர் கிளிநொச்சி சென்று பிரபாகரன், தமிழச்செல்வன், மகேஸ்வரன், ருத்ரகுமாரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
இச் சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு மீள் கட்டுமானம், அபிவிருத்திக்கென நிர்வாக கட்டுமானம் ஒன்றின் அவசியத்தை பிரபாகரன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக ரணில் அரசு இரண்டு நாட்களுக்குள் புதிய திட்டத்தை நோர்வே அதிகாரிகள் மூலமாக தமிழ்ச் செல்வனிடம் கையளித்தது.
அதில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்களை அங்குள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகள் மூலமாக செயற்படுத்துவது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மே 21ம் திகதி பாலசிங்கம் சுகதேகியாகி செய்தி ஒன்றினை ரணிலுக்கு அனுப்பியிருந்தார்.
“அதில் ரணிலின் ஆலோசனைகள் பிரபாகரனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை எனவும், தம்மால் தரப்பட்ட இடைக்கால நிர்வாக யோசனைகள் என்பன தீர்மானங்களை இயற்றுவது, நிறைவேற்றுவது, தாயக நிலமைகளை மாமூல் நிலைக்கு எடுத்தச் செல்வது என்பதில் சிறந்த பொறிமுறை என தெரிவித்திருந்தார்.
பாலசிங்கத்தின் பதில்கள் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியதாலும், யப்பான் மாநாடு அண்மித்ததாலும் யப்பான், நோர்வே ஆகிய நாடுகளைப் பொருத்தமான பொறிமுறையை வரையுமாறு ரணில் கேட்டிருந்தார்.
இதன் பிரகாரம் புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. சகல பிரிவினரின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்ட உயர் மட்ட குழு குழு ஒன்றினை அமைப்பது எனவும், அதுவே கொள்கைகளை வகுப்பதையும், ஆலோசனைகளை வழங்கும் அமைப்பாகவும் அதன் தலைவராக அரசினால் நியமிக்கப்படும் விசேட ஆணையாளர் செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ் யோசனைகளை நிராகரிப்பதாக பாலசிங்கத்தின் பதில் மே 30ம் திகதி அனுப்பப்பட்டது.
அதில் அரச நிர்வாகம் சீரற்றது. ஊழல் நிறைந்தது, மிகப் பெரும் மனிதத் தேவையை நிறைவேற்றும் சக்தி அதற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாலசிங்கத்தின் சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையில் ரணில் மே 1ம் திகதி பதில் அனுப்பியிருந்தார்.
கடிதப் போக்குவரத்து எந்த முடிவுக்கும் செல்லவில்லை என்பதாலும், பாரிய கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாலும் இரு தரப்பாரும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என பாலசிங்கம் கேட்டிருந்தார்.
அதில் தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக யோசனைகளுக்கு உடன்பாடான முன்மொழிவுகளை வைத்தால் தாம் கலந்துகொள்வதாக தெரிவித்தனர்.
இந் நகர்வுகள் மிகவும் தீவரமாகச் சென்றமைக்குக் காரணம் யப்பான் மாநாட்டிற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது.
புலிகளை யப்பான் மாநாட்டிற்கு வரச் செய்யும் நோக்குடன் எஞ்சிய பிரச்சனைகளைப் பேசி முடிவு செய்யும் பொருட்டு விசேட குழு ஒன்றினை ரணில் புலிகளிடம் அனுப்பினார்.
அரசு தமது இடைக்கால நிர்வாக யோசனைகள் பற்றிப் பேச உடன்படுமாயின் தாம் கலந்துகொள்ளத் தயார் என புலிகள் தெரிவித்தனர்.
இந் நிகழ்வுகளை அவதானித்து வந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில் அரச உதவிகள் எதுவும் கட்டுப்பாடுகள் அற்றதாக இருப்பதில் புலிகள் கவனம் செலுத்தியதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல் புலிகள் அமைப்பின் உள் கட்டுமானம், அதன் ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்பவற்றின் பின்னணியில் அவர்கள் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கும் ஜனநாயகம், மனித உரிமை, சமாதானம் என்பவற்றில் அதிக அக்கறை செலுத்துவார்கள் என்பது சந்தேகமே.. எனவே அவர்களைப் பொறுத்த மட்டில் ஜப்பான் செல்வதை விட தற்போதுள்ள நிலமைகளை மேலும் இறுக்குவது அவர்களுக்கு உகந்தது எனக் கருதுவார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
யூன் 9ம் திகதி புலிகளின் பங்குபற்றல் இல்லாமலே யப்பான் மாநாடு நடந்தேறியது. அம் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளில் மீண்டும் இணையுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அங்கு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளுக்கு சம்மதம் கிடைத்தது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரதேச அபிவிருத்தி என்பவற்றிற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உதவி குறித்து பேசப்பட்டது.
இம் மாநாட்டின் முக்கிய விளைபொருளாக இலங்கைக்கு உதவி வழங்க கூட்டுத் தலைமை ஒன்று உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, யப்பான், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அக் கூட்டுத் தலைமை நாடுகளாகும்.
தற்போது இலங்கைப் பிரச்சனையில் மேலும் பல நாடுகள் இணைவதை நாம் அவதானிக்கலாம்.
இவை யாவற்றிலும் புலிகளின் அணுகுமுறை எதிர்வினையாகவே இருந்தது.
அரசினால் முன்வைக்கப்பட்ட தற்காலிக அபிவிருத்தி நிர்வாகக் கட்டுமானத்தை தாம் ஏற்கவில்லை எனவும், தமது திட்டங்களை திணிக்க எண்ணுகிறார்கள் எனவும், நாட்டில் காணப்படும் மோசமான பொருளாதார பற்றாக்குறையும், அரசியல் வறுமையும் தவிர்க்க முடியாமல் சர்வதேச வலைப்பின்னலுக்குள் சிக்க வைத்திருப்பதாகவும்….,
இலங்கை அரசு மூன்றாவது தரப்பாரின் உதவியுடன் சமாதானம் பேசுவதாகக கூறி தற்போது சர்வதேச விசாரணை என்ற மட்டத்திற்கு பலமான சர்வதேச சக்திகளின் உதவியுடன் நிலமைகளை எடுத்துச் சென்று சிங்கள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயற்படுவதாக யூன் 23ம் திகதி வெளியிட்ட தமது அறிக்கையில் தெரிவித்தனர்.
eprlf தம்பிராசா சுபத்திரன் (ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)
யப்பான் மாநாடு முடிந்த ஒரு வாரத்தில் நிலமைகள் மோசமாகின.
விடுதலைப்புலிகளை மிக மோசமாக விமர்ச்சித்து வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்களின் ஒருவரான தம்பிராஜா சுபத்திரன் அதிகாலை மேல் மாடியில் உடற்பயிற்சி செய்யும் வேளை யூன் 14ம் திகதி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
அடுத்த சில மணி நேரங்களில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்குவது, கடல் வழியாக ஆயுதங்களைக் கடத்துவது தொடர்ந்ததால் கடல் உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சாத்தியமாக அமையவில்லை.
அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் அரசியல் வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டதால் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்றுக் குழுக்கள் பாதிக்கப்படடார்கள்.
படுகொலைகளும் தொடர்ந்தன.
மறு பக்கத்தில் அரசியல் அமைப்பு விடயங்கள் தொடர்பான அலுவல்கள் ஆரம்பமாகின. புலிகளின் இடைக்கால நிர்வாக யோசனைகளை அரசியல் அமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசியல் அமைப்பு ஆலோசனைகளைப் பெறும் பொருட்டு பிரதமர் ரணில், பிரதான சமாதான பேச்சாளர் மிலிந்த மொறகொட, சட்டமா அதிபர் கந்தப்பர் கமலசபேசன் ஆகியோர் லண்டன் சென்றனர்.
அங்கு பாலசிங்கம், எரிக் சொல்கெய்ம் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ரணில், சோல்கேய்ம் ஆகியோர் பேசின
பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன்.

ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. திருகோணமலைத் துறைமுகப் பாதுகாப்பு குறித்து சந்திரிகாவின் கவனம் திரும்பியிருந்தது.
வடக்கு, கிழக்கில் அரசியல் வேலைகளைச் செய்ய புலிகளை அனுமதித்ததால் அங்கு பாதுகாப்புக் குறித்த அச்சங்கள் பத்திரிகைகளால் வெளியிடப்பட்டன.
ரணில் தனது அதிகார இருப்பை நோக்கி நகர்வதால் பாதுகாப்பில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதாக சந்திரிகா கருதினார்.
இப் பின்னணியில் இடைநிறுத்தியிருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர புலிகள் சம்மதித்ததாலும், அரசின் இடைக்கால நிர்வாக சபை, புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க இரு தரப்பினரும் தயாராக இருந்ததாலும், நோர்வே தரப்பினர் பேச்சுவார்தைகளை ஆரம்பிக்க துரித கதியில் செயற்பட்டனர்.
இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புலிகள் முதன் முதலாக எழுத்து வடிவில் தமது கோரிக்கையினை முன் வைத்துள்ளதால் அதன் உள்ளடக்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடர உதவுமா? என்பது குறித்து அவர்களது கவனம் திரும்பியது.
அரச தரப்பினர் புலிகளின் கோரிக்கைகள் எட்ட முடியாத அளவுக்கு சென்று விட்டதாக உணர்ந்தார்கள்.
இருப்பினும் பேசிப்பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தார்கள். ஆனால் நோர்வே தரப்பினரின் அபிப்பிராயம் வேறு விதமாக இருந்தது.
25 வருடங்களுக்கு மேலாக புலிகள் போராடி வந்த போதிலும் இப்போதுதான் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்கள்.
ஆனாலும் புலிகள் தரப்பில் இப் பேச்சுவார்த்தைகளை நடத்துபவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அதாவது பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒரு போதும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைப்பவர்களாக இருக்கவில்லை.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் கூட உருத்திரகுமாரன், மகேஸ்வரன் போன்றவர்கள் தலைமையிலான அறிஞர்கள் குழுவினரால்தான் தயாரிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் இம் முன் மொழிவுகள் குறித்து பாலசிங்கம் மகிழ்ச்சியடையவில்லை தாம் ஒரு மூத்த உறுப்பினர் என்ற வகையிலும், எது சரியானது என்பதில் தமக்கு போதுமான தகைமை இருக்கிறது என்ற எண்ணத்தினாலும், அவை தனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை அவர் விரும்பினார்.
எரிக் சோல்கெய்ம் அவர்களின் கருத்துப்படி இக் கோரிக்கை புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை மட்டுப்படுத்துவதாகவும், மிகவும் இறுக்கமாக இருப்பதாலும் அவை ரணிலிற்கு பெரும் சவாலாக அமையலாம் எனவும் பாலசிங்கம் கருதினார்.
அதுமட்டுமல்ல…,
புலிகள் தரப்பில் ஆலோசனைகளை வழங்கிய புலம்பெயர் அறிஞர்கள் பிரச்சனைகளை கோட்பாட்டு அடிப்படையில் அணுகினார்களே தவிர, அரசியலில் காணப்படும் சிக்கல்களை அவர்களால் உணர முடியவில்லை.
பாலசிங்கம் மட்டுமே தனது அபிப்பிராயத்தை சுயாதீனமாக பிரபாரனுக்கு தெரிவித்து வந்தார். ஏனையோர் பிரபாகரனை மகிழ்ச்சிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினார்கள் என்கிறார் சோல்கெய்ம்.
பாலசிங்கம் குறித்து சோல்கெய்ம் மேலும் தெரிவிக்கையில்……
பல்வேறு வகைப்பட்ட வகையிலான சமஷ்டி வழிமுறைகளையும், அதில் அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்து பிரபாகரனை அதில் தலைவனாக அமர்த்துவதே அவரது நோக்கமாக இருந்தது.
பிரிந்து செல்வது முடியாத காரியம் என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார்.
இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் ரணிலிற்கு பெரும் பாதகமாக அமையும் என்பதை பிரபாகரன் எண்ணிப் பார்க்கவில்லை ஏனெனில் அது அவரது பிரச்சனையாக உணர்ந்தார்.
சுயநிர்ணய உரிமை குறித்து பாலசிங்கத்தின் அபிப்பிராயங்களை சோல்கெய்ம் இவ்வாறு விபரிக்கிறார். “சுயநிர்ணய உரிமை என்பது இலட்சியமாக கருதும் அவர் அது சுதந்திரமாக பிரிந்து செல்வதாக கருதவில்லை என்கிறார்.
சுயநிர்ணய உரிமை குறித்த புலிகளின் விளக்கங்களில் பிரிந்து செல்வதை வற்புறுத்திச் செல்லவில்லை என்கிறார்.
அது வளைந்து கொடுக்கக்ககூடியது. புிரிந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. வேறுவிதமாகவும் அமையலாம் எனக் கருதும் பாலசிங்கம் சிங்கள மக்களும், தமிழ் மக்களும் தனித்துவமானவர்கள் ஆனாலும் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட உயர்ந்தவர்கள் என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது.
தேசிய இனப் பிரச்சனை குறித்த அணுகுமுறைகளில் சுயாதீனமான எண்ணப் போக்கினைக் கொண்டிருந்த பாலசிங்கம் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைப் பேச்சுவார்த்தைகளில் ஓரம் கட்டப்பட்டார்.
தனது மனதில் இன்றுவரை தொடரும் கவலை குறித்து சோல்கெய்ம் தெரிவிக்கையில் மிகச் சொற்பமானவர்களே தெற்கில் காணப்படும் அரசியல் போக்கு குறித்து அல்லது இந்தியா அல்லது உலக கவனம் சம்பந்தமாக அறிந்துள்ளார்கள் எனத் தெரிவிக்கிறார்.
இதன் போக்கினை அவர்கள் நன்கு தெரிந்திருந்திருந்தால் ராஜிவ் காந்தியைப் படுகொலை செய்திருக்க மாட்டார்கள். புலம்பெயர் தமிழர்கள் பொருளாதாரம், சமூக, கலாச்சார அம்சங்களைப் புரிந்துள்ள போதிலும் அவை அரசியல் புரிதலில் வெளிப்படவில்லை என்கிறார்.
சந்திரிகா, ரணில் அரசின் அமைச்சுகளைப் பறித்தார்.
2003ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி ரணில் அரசின் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சுகளைப் பறித்து தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அரசின் முக்கிய துறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உதாரணமாக, தேசிய தொலைக்காட்சி நிறுவனம், அரச அச்சகம் என்பன கட்டுப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி சந்திரிகாவின் இத் திடீர் நடவடிக்கைகள் நாட்டின் சிக்கலான அரசியல் நிலவரத்தை உணர்த்தின.
ஓரு சில நாட்களுக்குள் ஏற்பட்ட இத் திடீர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் சகலரையும் அமைதியைப் பேணுமாறு கோரிய அதே வேளை விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அவை நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு, தேசத்தின் இறைமை என்பவற்றை மதிப்பதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
சந்திரிகாவின் இந் நடவடிக்கைகள் ரணில் அமெரிக்கா சென்றிருந்த தருணத்தில் நிறைவேற்றப்பட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அடுத்த சில தினங்களில் ரணில் நாடு திரும்பியபோது பெரும் வரவேற்பு காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவசரகால நிலை எடுக்கப்பட்டு ஐ தே கட்சியுடன் தேசிய ஐக்கிய அரசு ஒன்றை அமைக்கப் போவதாக சந்திரிகா அறிவித்தார்.
அவ் வேளையில் கட்சித் தாவல்கள் நடைபெறும் என்ற ஊகங்கள் வெளியாகியிருந்தன.
தனது கட்சியில் எதிர்க்கட்சியினர் சேரலாம் என சந்திரிகா எண்ணியிருந்தார்.
தேர்தல் ஒன்றிற்கான வாய்ப்புகளும் அதிகரித்திருந்த காரணத்தால் புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளையும் காரசாரமாக விமர்ச்சித்திருந்தார்.
புலிகளுடன் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை குறித்து ரணில் பேசத் தயாராக இருந்தமையால் அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் கூறி சிங்கள தேசியவாத சக்திகளை தனது பக்கம் திருப்ப அவர் முயற்சித்தார்.
முக்கியமான மந்திரிப் பதவிகளை சந்திரிகா பறித்தமையால் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சினைப் பறித்தமையால் புதிய அரசியல் களம் தயாராகியது.
முக்கியமான மந்திரிப் பதவிகள் குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு தமது கையில் இல்லாத காரணத்தால் தம்மால் சமாதான முயற்சிகளை மேலும் எடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதியே பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் எனவும் ரணில் நோர்வே தரப்பினரிடம் தெரிவித்தார்.
2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தில் தனது ஒப்புதல் இல்லாத காரணத்தால் அது சட்ட விரோதமானது எனத் தெரிவித்த சந்திரிகா தாம் சமாதானத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதால் ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்க உதவுவதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி சந்திரிகாவின் இத் தலையீடு குறித்து எரிக் சொல்கெய்ம் குறிப்பிடுகையில் இடைக்கால தன்னாட்டசி அதிகாரசபை முன்மொழிவுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்பது வாதமாக இருந்தது.
ரணில் அரசைப் பலவினப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்த அவர் புலிகள் தமது கோரிக்கையை முன்வைத்த மறுநாளே அமைச்சுப் பதவிகளைப் பறித்துள்ளார்.
இந்திய தரப்பினரும் இந் நிகழ்வுகள் குறித்து சந்தேகத்துடனேயே காணப்பட்டனர். இவ்வாறான பல பின்னணி நிகழ்வுகள் இம் முடிவுகளை நோக்கித் தள்ளின.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன்- பிரபாகரன் சந்திப்பு
Mr. Patten wishing the LTTE leader
அரசிற்குள் காணப்பட்ட பிணக்குகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன் 2003ம் ஆண்டு நவம்பரில் இலங்கை வந்தார்.
இவர் பிரித்தானியாவில் 1987இல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்து போது இலங்கைக்குச் சென்றிருந்தார்.
இவரும் ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ் போலவே நோர்வே முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவே சென்றிருந்தார். 2003ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி வன்னிக்குச் சென்றிருந்தார்.
இவ் வேளை மாவீரர் தின காலமாகையால் அங்கு சிங்கள எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரமாகக் காணப்பட்டன.
பிரபாகரனைச் சந்தித்த பின்னர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தாம் வன்முறையை முழுமையாக கைவிடுமாறு வற்புறுத்தியதாகவும், போரைக் கைவிடுமாறு கோரியதாகவும் தெரிவித்தார்.
தனது வன்னி அனுபவங்கள் குறித்து கிறிஸ் பற்றன் தெரிவிக்கையில்.. “ தாம் கிளிநொச்சி சென்றிருந்தபொது சிறுவர்கள் புலிக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் தெருவோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தாகவும், பிரபாகரனின் குணங்கள் குறித்த பயங்கர தோற்றம் தனது நினைவுக் வந்ததாகவும், அவரைப் பார்த்ததும் சிறிதளவு தாக்கமே ஏற்பட்டதாகவம்,
அவரைச் சுற்றிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்தவர்களே காணப்பட்டதாகவும், மிகவும் பலவீனமான கை குலுக்கலே இடம்பெற்றதாகவும், தனது அருகிலிருந்த இருவரையே அதிகம் பேசவைத்ததாகவும், தம்மை அவர் நேரடியாக பார்த்துப் பேசியது மிகக் குறைவு எனத் தெரிவித்தார்.
LTTE leader Mr. Velupillai Pirapaharan, European Union’s Commissioner Mr. Patten
அவரது தோற்றம் குறித்துத் தெரிவிக்கையில் இரக்கமற்ற தோற்றமாக இருந்ததாகவும், குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சிகூட இருக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
கிறிஸ் பற்றனைச் சந்தித்த மறுநாள் இடம்பெற்ற மாவீரர் தின உரையில் சந்திரிகாவின் தலையீடு மிக மோசமான முறையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை பாதித்துள்ளதாகவும், இடைக்கால தன்னாட்சி அதிகார சபை முன்மொழிவகள் நிரந்தர தீர்வை நோக்கிய வரைவுகள் அல்ல எனத் தெரிவித்து அவை புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற அலுவல்களை மேற்கொள்ள வரையப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இனப் பிரச்னையைத் தீர்க்க ஒரு கட்சி முயலும் போது மற்றக் கட்சி எதிர்க்கும் நாடகம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
Dr. Jay Maheswaran, Mr. Thamilchelvan and Mr. Thangan welcoming Mr. Patten at the Kilinochchi grounds
2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வே

இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது.
விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும் எழத் தொடங்கியிருந்தது.
ஒரு அரசில் இரண்டு கட்சிகள் சக வாழ்வு நடத்தும் அரசியலும் ஒரு பரிசோதனைக் களமாக அமைந்தது. பல அதிகாரங்களைக் கொண்ட சந்திரிகா ஜனாதிபதியாகவும், பாராளுமன்ற அதிகாரத்தினை ரணிலும் வைத்திருந்தார்கள்.
நோர்வேயின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உருப்படியாக எதையும் சாதிக்க முடியவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் மிகவும் பலவீனப்பட்டதாக இருந்தது.
புலிகள் தரப்பில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினைப் பலப்படுத்தவும், பேரம் பேசும் ஆற்றலை வலுப்படுத்தவும் சமாதான முயற்சிகளைப் பயன்படுத்தி வந்தார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சமாதான முயற்சிகள் சாத்திமானால்தான் வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியம் என்பதால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த முயன்றார்கள்.
2004ம் ஆண்டு தேர்தல் நாட்கள் நெருங்க நெருங்க அரச தரப்பினர் பேச்சுவார்த்தைகளையே தமது தேர்தல் பிரச்சாரத்தின் மையப் பொருளாக மாற்றி வந்தார்கள்.
இருப்பினும் கருணாவின் பிளவு புலிகளுடன் பேசுவதற்கான வாய்ப்புகளைத் துரிதப்படுத்தும் என எண்ணினார்கள்.
அரசாங்கம் புதிய நிபந்தனைகளைப் போடுமானால் தாம் போரை நோக்கித் திரும்ப நேரிடும் என தமிழ்ச்செல்வன் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.
அதே நிலை ராணுவத்திற்குள்ளும் பேச்சுவார்த்தைகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
போர்நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி புலிகள் போருக்கான தயாரிப்புகளை அதிகரிக்கலாம் எனவும், ராணுவம் பலவீனப்படும் அபாயம் உண்டு எனவும் எச்சரித்து வந்தனர்.
ஆனால் ரணில் போர்நிறுத்த வாய்ப்புகளை அரசியல் தீர்வாக மாற்றும் சந்தர்ப்பமாக மாற்றி சகல சமூகங்களும் அமைதியாக வாழும் எதிர்காலம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்து வந்தார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே வி பி என்பன கூட்டணி அமைத்த போதிலும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக முரண்பாடானான நிலைப்பாடுகளோடு செயற்பட்டனர்.
இப் பின்னணியில் விடுதலைப்புலிகள் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பகிரங்கமாக ஈடுபட்டனர்.
தமிழர் கூட்டமைப்பினை தமது அணியாக முன்வைத்து பிரச்சாரத்தை நடத்தினர்.
தனது கட்சியே சமாதானத்தை முன்னெடுக்கும் சக்தியாக உள்ளதாக ரணில் நடத்திய பிரச்சாரம் ஏப்ரல் 4ம் திகதிய முடிவில் தோல்வியாக அமைந்தது.
சந்திரிகா தலைமையிலான அரசு 225 ஆசனங்களைக்கொண்ட பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களைக் கைப்பற்ற ஐ தே கட்சி 82 ஆசனங்களை மட்டுமே பெற்றது.
சந்திரிகா அரசு நாட்டின் பிரதமராக லக்ஸ்மன் கதிர்காமரை நியமிக்க எண்ணியிருந்த போதிலும் கட்சிக்குள் மகிந்தவிற்கு அதிகளவு ஆதரவு இருந்ததால் அவரே பிரதமரானார்.
ரணிலின் தோல்விக்குக் காரணம் சமாதான முயற்சிகளைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட சந்தேகங்களே தவிர சமாதானத்தில் மக்கள் அவ நம்பிக்கை கொள்ளவில்லை
என அரசியல் ஆய்வாளர்கள் எழுதினர். ரணிலின் முயற்சிகள் புலிகளைச் சாந்தப்படுத்துவதாக அமைந்தது எனவும் தெரிவித்தனர்.
இத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் தீவிரவாதப் போக்கினை அனுசரித்த ஜே வி பி, ஜாதிக கெல உறுமய போன்ற கட்சிகள் தமது ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளனர்.
ஜே வி பி இனர் 40 ஆசனங்களையும், இரண்டுமாத ஆயுளைக் கொண்ட ஜாதிக கெல உறுமய 9 ஆசனங்களையும் பெற்றனர்.
இதன் காரணமாக ஜே வி பி இனர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் மந்திரிப் பதவிகளையும் பெற்றனர். மறு பக்கத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவில் இயங்கிய கூட்டமைப்பு 22 ஆசனங்களையும் கைப்பற்றியது.
தேர்தல் முடிவின் பின்னர் இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து எரிக் சொல்கெய்ம் தெரிவிக்கையில் லக்ஸ்மன் கதிரகாமர் பிரதமராக்கப்பட்டிருந்தால் அவர் எதிர்காலத்தில் ஏனையோருக்கு சவாலாக இருந்திருக்கமாட்டார்.
ஓரு தமிழரால் இலங்கை அரசில் வகிக்கக்கூடிய அதி உயர் பதவி வெளிநாட்டமைச்சு மட்டுமாகத்தான் இருந்திருக்க முடியும்.
ஜே வி பி, சுதந்திரக்கட்சிக் கூட்டு என்பது வசதிக்காக ஏற்படுத்திய திருமணமே ஆனால் அவ் இணைப்பு அரசாங்கத்தை சக்தி மிக்கதாக மாற்ற உதவலாம்.
ஜே வி பி எம்முடன் பேச விரும்பியதில்லை. சந்திரிகாவே தொடர்பாளராக செயற்பட்டார்.
மகிந்த எம்முடன் நட்புறவுடன் நடந்து கொண்டார். நாம் சம்பவங்களை அவ்வப்போது தெரிவித்து வந்தோம்.
அவர் எம்மிடன் கேள்விகளைக் கேட்பார். ஆனால் அவர் மனம் திறந்து பேசியதில்லை.
சமாதான முயற்சிகளை அவர் எதிர்ப்பதற்கான சமிக்ஞைகளை நாம் காணவில்லை. ஏதாவது அறிக்கைகள் அவரது அரசியலுக்கு உதவும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவை சரியானவை என்பதை இறுதி முடிவுகள் அவருக்கு உணர்த்தியிருக்கின்றன.
நோர்வே நாட்டிற்கான தூதுவர் இத் தேர்தல் முடிவுகள் பற்றித் தெரிவிக்கையில்ராஜபக்ஸ மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் கட்சி அடித்தளத்தைக் கட்டியிருந்தார்.
சந்திரிகாவிற்குப் பின்னர் தாமே அப் பதவிக்கு செல்ல முடியும் என உறுதியாக நம்பினார். ஜே வி பி உடன் சந்திரிகா கூட்டு அமைத்த போது அது சமாதான முயற்சிகளுக்கு இடராக இருக்கும் என நாம் எண்ணினோம்.
தனது கணவரைப் படுகொலை செய்த கட்சியுடன் அணிசேர அவர் சென்றமைக்குக் காரணம் ரணிலுக்கும் அவருக்குமிடையே காணப்பட்ட எதிர் உணர்வுகளே.
அரசியல் அமைப்பை மாற்றுவது குறித்து உட் கட்சிப் போராட்டம் நடைபெற்று வந்தது. சமாதான முயற்சிகள் என்பது ரணில் ஆரம்பிப்பதற்கு முன்னர் தன்னால் ஆரம்பிக்கப்பட்டவை என்பதால் அவற்றைத் தொடர்வதற்கு ராஜபக்ஸவை விட கதிர்காமர் பொருத்தமானவர் என்பதால் அவரை வைத்தே திட்டத்தை நிறைவேற்றலாம் என சந்திரிகா நம்பினார்.
அது போலவே நாம் பிரதமாரான ராஜபக்ஸவுடன் சமாதான முயற்சிகள் பற்றிப் பேசிய வேளைகளில் அவற்றை சந்திரிகாவுடன் பேசுமாறு அவர் தெரிவித்து வந்தார்.
நான் கதிர்காமருடன் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த போதே பேசியுள்ளேன். ஆனால் அவர் சிறந்த ராஜதந்திரி. திறமை மிக்கவர். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என விரும்பியவர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய சில நாட்களுக்குள்ளாகவே கருணா தரப்பினர் மீது கடும் தாக்குதல்களை புலிகள் தொடுத்தனர்.
இதன் காரணமாக கருணாவின் ஆட்கள் வெருகல் ஆற்றிற்கு அப்பால் பின்வாங்கினர்.
48 மணி நேரங்களில் கிழக்குப் பகுதி புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
2004ம் ஆண்டு ஏப்ரல் 13ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த சகல முகாம்களும் அழிக்கப்பட்டதாக புலிகளின் செய்தி வெளியானது.
இக் காலகட்டத்தில் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த கணிசமான தொகைப் போராளிகள் வன்னியில் இருந்தனர். அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்கள் என பிரபாகரன் கருதியதால் அவர்களைப் பயன்படுத்தியே இவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.
கருணாவின் தோல்வி குறித்து எரிக் சொல்கெய்ம் தெரிவிக்கையில்….
கருணாவின் இறுதிக்கால நடவடிக்கைகள் பரிதாபத்திற்குரியவை. அவருக்கு இடைநிலை அரசியலைத் தொடர வாய்ப்பிருக்கவில்லை. அதனால் அவர் அரசின் கைப்பொம்மையாக மாறினார்.
கருணாவிற்குப் பின்னர் அங்கு சுயமான அரசியல் ஒன்று இருக்கவில்லை. அதன் பின்னர் கருணா தரப்பினர் பல கொலைகளை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
எமக்கு அதில் சந்தேகம் இருக்கவில்லை. ஏனெனில் அவை அரசின் துணையோடு இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.
அரசு கருணாவின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் கருணாவை விரும்பிய நேரத்தில் பாவிக்கவும் கைவிடவும் ராணுவ உளவுப் பிரிவிற்கு வாய்ப்பு இருந்தது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் இரண்டு பிரச்சனைகள் முன்னணியில் வாதிக்கப்பட்டன. அதாவது புதிய அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்துவது, சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது என்பதாகும்.
புதிய அரசியல் அமைப்பைக் கொண்ட வருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அகற்றுதல் என்ற விவாதங்கள் எடுக்கப்பட்டபோது அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் தேசிய அரசுப் பேரவையைக் கூட்டி சாதாரண பெரும்பான்மையடன் அதனை நிறைவேற்ற எண்ணினர்.
இம் முயற்சியானது சந்திரிகாவை மீண்டும் ஜனாதிபதி பதவியில் வைத்திருக்க மறைமுகமாக எடுக்கப்படும் முயற்சி என விவாதங்கள் எழுந்தன.
2005ம் ஆண்டு சந்திரிகாவின் பதவி முடிவடைவதால் ஜனாதிபதி பதவி இல்லாமல் போனதும் அவர் பிரதமராகலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில் பாராளுமன்ற சபாநாயகர் தெரிவில் ராஜபக்ஸவின் தெரிவு சாத்தியமாகவில்லை. பதிலாக எதிர்க்கட்சிகளால் முன்மொழியப்பட்ட லொக்கு பண்டார மேலதிக ஒரு வாக்கினால் தெரிவானார்.
சமாதான முயற்சிகளில் புதிய அரசாங்கம் புதிய சவாலை எதிர்நோக்கியது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சகல தரப்பினரையும் ஒத்துழைக்குமாறு சந்திரிகா வேண்டினார்.
இத் தருணத்தில் கருணா தரப்பினரை எவ்வாறு கையாள்வது? என்ற கேள்வி எழுந்தது. விடுதலைப் புலிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்த போதிலும் நிலமை அவ்வாறு இருக்கவில்லை.
கருணா தரப்பினர் மீது கடும் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போதும் அவை சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக யாரும் பேசவில்லை.
மகிந்த பதவியேற்ற சில நாட்களுக்குள் வெளிநாட்டு ராஜதந்திரி என்ற வகையில் இந்தியத் தூதுவரே ராஜபக்ஸவை முதன் முதலாக சந்தித்தார் .
அப்போது இப் பிரச்சனையில் இந்தியா ஈடுபடவேண்டுமென ராஜபக்ஸ கோரியபோது இந்தியத் தூதுவர் மிகவும் சாதுரியமாக நிராகரித்தார்.
புதிய தமிழர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளே அமையவேண்டுமெனத் தெரிவித்தனர்.
தேர்தலின் பின்னர் காணப்பட்ட முக்கிய அரசியல் மாற்றமாக சபாநாயகர் தெரிவில் இடம்பெற்ற தோல்விப் பிரச்சனைகள் எதிர்கால அரசியல் போக்கை உணர்த்துவதாக அமைந்தன.
மே 1ம் திகதி நோர்வே தரப்பினர் மீண்டும் சமாதான முயற்சிகளைத் தொடர இலங்கை வந்தனர்.
கிளிநொச்சி சென்ற எரிக் சோல்கெய்ம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது அரசுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாக இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனைகள் அமைய வேண்டுமெனவும், விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்தினர்.
இதன் பிரகாரம் வேறு எவருக்கும் ராணுவ அல்லது வேறு வகையிலான உதவிகள் எதனையும் வழங்கக்கூடாது என வற்புறுத்தினார்கள்.
கருணா தரப்பினரை ஓரங்கட்டுவது, முஸ்லீம் பிரதிநிதிகளைத் தவிர்ப்பது என்பது அரசிற்குப் பெரும் சவாலாக அமைந்தது.
2002 இல் வாழைச்சேனையில் இடம்பெற்ற கலவரங்கள் சிங்கள ஆட்சியில் இணைந்து வாழ முடியாது என்ற முடிவிற்குக் கிழக்குத் தமிழரைத் தள்ளின. அதே போன்று தமிழரின் ஆதிக்கத்தில் தம்மால் சமாதானமாக வாழ முடியாது என முஸ்லீம் மக்கள் கருதினார்கள்.
இப் பின்னணியில் பேச்சுவார்த்தைக்கான புதிய நிபந்தனைகள் படிப்படியாக எழுந்தன. நிரந்தர தீர்வுக்கான பேச்சவார்த்தைகள் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளை விவாதிக்கும் சமகாலத்தில் தொடர வேண்டுமென்ற கோரிக்கையை நோர்வே தரப்பிடம் சந்தரிகா தெரிவித்திருந்தார்.
இச் செய்தியுடன் கிளிநொச்சி சென்ற நோர்வே தரப்பினருக்கு இறுதித் தீர்வு குறித்த செய்தி பற்றிய தமது அதிருப்தியை பாலசிங்கம் வெளியிட்டார்.
தாம் அரசியல் அமைப்பு மாற்றம் ஏற்படும் வரை நிரந்தர தீர்வு பற்றிப் பேச முடியாது எனத் தெரிவித்த பாலசிங்கம் இடைக்கால நிர்வாகம் பற்றியே பேசலாம் ஏனெனில் சிறுபான்மை அரசாங்கமாகவும், தொங்கு நிலையிலும் உள்ள அரசுடன் நிரந்தர தீர்வு பற்றிப் பேச முடியாது என பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.
வாசகர்களே,
இந் நூலில் தரப்பட்டுள்ள விபரங்களில் சில எமக்கு ஏற்கெனவே அறியப்பட்டதாக இருந்த போதிலும் நிகழ்வுகளின் போக்குகளை நாம் தொடர்ச்சியான சம்பவங்களின் மீது பார்வையைச் செலுத்தும்போதே அதன் போக்கின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும்.
2002ம் ஆண்டு தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தமும், பேச்சுவார்த்தைகளும் அரசியல் ரீதியாக ஒரு சிறிதளவும் நகராமல் இறுகிய நிலையில் இருந்தமைக்கான காரணத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.