உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான பொதுஜன பெரமுன அளிக்கப்பட செல்லுபடியாகின்ற வாக்குகளில் 44.65% வீதமான வாக்குகளைப் பெற்று 236 சபைகளையும் 3369 உறுப்பினர்களையும் வென்றுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி 32.63 % வீதமான வாக்குகளைப் பெற்று 41 சபைகளையும் 2385 உறுப்பினர்களையும் வென்றுள்ளதோடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்து 13.38% வீதமான வாக்குகளைப் பெற்று 10 சபைகளையும் 1032 உறுப்பினர்களையும் வென்றுள்ளனர், எனினும் சுதந்திரக கட்சி/ மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவின்றி சுமார் 167 சபைகளில் ஆட்சியமைக்க பெருமபான்மை இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை வடகிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி 3.19% வீத வாக்குகளைப் பெற்று 34 சபைகளையும் 407 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. JVP நாடு முழுவதுமாக எந்தவொரு சபையையும் கைப்பற்றாவிட்டாலும் கூட 431 உறுப்பினர்களை வென்றுள்ளமையும் குறி ப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் முஸ்லிம் தேசியக் கூட்டணி மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணி ஆகியவற்றில் தனித்தும் போட்டியிட்டு 13 சபைகளையும் 185 உறுப்பினர்களையும் வென்றுள்ள அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் 1 சபையையும் 159 உறுப்பினர்களையும் வென்றுள்ளது.
முதன்முறையாக தம்மை ஒரு அரசியல் கட்சியாக அறிமுகம் செய்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பாக கிழக்கின் சில சபைகளிற்கும் நாட்டின் ஏனைய ஒருசில பகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 19 உறுப்பினர்களை வென்றுள்ளனர்.
மலையக மக்களைப் பொறுத்தவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் புரிந்துணர்வுடன் தனித்துப் போட்டியிட்டு 11 சபைகளில் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
தேர்தலில் நல்லாட்சி அரசு பின்னடைவை சந்தித்துள்ளதா ?
தேர்தலில் நல்லாட்சி அரசு பின்னடைவை சந்தித்துள்ளதா ? என்ற கேள்வியை எழுப்பினால் நிச்சயமாக ஆம் என்றே எடுத்த எடுப்பில் எல்லோருமாக கூறிவிடுவர், தற்போதைய பொதுசன அபிப்பிராயமும் அரசியல் விமர்சகர்களது கருத்துக்களும் அவ்வாறு தான் இருக்கின்றன.
என்றாலும், நல்லாட்சி அரசிற்கான பின்னடைவாக இந்த தேர்தல் முடிவுகளை கருதுவதாயின் நல்லாட்சி அரசின் பிரதான பங்காளிகள் சகலரும் ஒரே அணியில் தேர்தலில் களமிறங்கி இருத்தல் வேண்டும், ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்தும் தனித்தும் பல்வேறு இடங்களில் களமிறங்க, சுதந்திரக் கட்சி , பொது சன ஐக்கிய முன்னணி ஆகியவையும் அவற்றின் பங்காளிக் கட்சிகளும் வெவ்வேறாகவும் கூட்டாகவும் பல இடங்களில் களமிறங்கி கேட்டதனால் மூன்றாம் தரப்பு இலகுவாக பெரும்பான்மையான வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல.
2015 ஆம் ஆண்டு பொது எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளராக அதிபர் மைத்திரி களமிறங்கிய பொழுது அதிகாரத்தின் உச்சத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இருந்தமையும், நல்லாட்சி அரசு அமைந்த பின்னரும் அவர்களில் கணிசமானோர் பொது எதிரணியினர் என்ற பெயரில் அவருடனேயே இருக்கின்ற நிலையிலும் இந்த தேரத்லில் அதிபர் மைதிரியுடன் இருக்கின்ற அணிக்கு கிடைத்துள்ள தேர்தல் பெறுபேறுகளை வைத்து ஜனாதிபதியிற்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளனர் என்ற முடிவிற்கும் ஒரேயடியாக வர முடியாது.
உண்மையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையிலான பொது எதிரணி ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி என்ற பெயரில் களமிறங்கினாலும் அவரது தனிப்பட்ட ஆளுமையும் அவரோடு அன்றுமுதல் இன்றுவரையுள்ள கூட்டணிக் கட்சிகளும் ஒரே அணியாக நின்று சுமார் 50 இலட்சம் வாக்குகளை பெற்று (44.7%) 3369 உறுப்பினர்களை வென்றுள்ளனர், 2015 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸ சுமார் 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
அதேவேளை பலகூறுகளாக பிரிந்து உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கிய நல்லாட்சிக் கட்சிகள் சுமார் 61 இலட்சம் வாக்குகளைப் பெற்று (55.3%) வாக்குகளைப் பெற்று சுமார் 3417 உறுப்பினர்களை வென்றுள்ளனர், அவர்கள் ஓரணியில் சேர்ந்து களமிறங்கியிருந்தால் சுமார் மூன்றில் ஒரு சபைகளையே முன்னால் அதிபர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி முழுமையாக வென்றிருக்க முடியும்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடலாவியாய வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளமையை அந்தக் கட்சி உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது, அதற்கு பல கரணங்கள் கூறப்பட்டாலும் 2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணை முறி விற்பனையில் இடம் பெற்ற பாரிய மோசடியில் அதன் முன்னணி தலைவர்கள் தொடர்புபட்டிருந்தமையும் அவர்களுக்கு எதிராக ஊடகங்களும்,சிவில் சமூகத் தலைமைகளும் பொது எதிரணியினரும் அரச பிரதானிகளும் மேற்கொண்ட மேற்கொண்ட தீவிர கண்டனங்களும் காரணமா எனலாம்.
எனவே இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து நல்லாட்சி அரசின் கடந்த காலத்தை கணிப்பீடு செய்வதோ அல்லது தேசிய அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை மட்டிடுவதோ மிகச் சரியான அரசியல் அவதானங்களாக இருக்க முடியாது.
மூன்று வருட கால நல்லாட்சி அரசின் பின்னடைவுகள் குறித்து விரிவாக ஆராயப்படுவது கட்டாயமாகும், எந்த வகையிலும் இந்த அக்கம் நல்லாட்சி அரசை அல்லது ஜனாதிபதியை திருப்திபடுத்துகின்ற நோக்கில் எழுதப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.
இந்த நாட்டு மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் வாக்குரிமையை பயன்படுத்துகின்றார்களா ?
இந்த நாட்டு மக்கள் தேர்தல்களூடாக சரியான தீர்வுகளை எடுக்கின்றார்களா ? என்ற கேள்வியைக் கேட்டால் “இல்லை” என்றே சொல்ல முடியுமாக இருக்கிறது, பொதுவாக சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றை கவனமாக ஆராய்கின்ற பொழுது தென்னிலங்கை மக்கள் அரசியல், பொருளாதார வெளியுறவு கொள்கை கோட்பாடுகளை மையமாக வைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதனை விடுத்து அவ்வப்போது பெருந்தேசியவாத எழுச்சி அலைகளை மையமாக வைத்தும் 1977 இல் பசி பட்டினி போன்ற உடனடி காரணிகளையும் வைத்து இரு பெரு முகாம்களாக பிரிந்து நின்று சங்கீதக் கதிரை அரசியலையே செய்துள்ளமையை புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் போருக்குப் பின்னரான இலங்கையில் 2015 இல் அமைந்த நல்லாட்சி தேசிய அரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சிங்களப் பெருந்தேசிய சக்திகள் நேரடியாகவும் மறை முகமாகவும் கைகொடுத்திருப்தனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஆள்விலான ஊழல் மோசடிகள், நிர்வாக சீர்கேடுகள், குடும்ப் ஆதிக்கம், வெள்ளை வேன் ஆட்கடத்தல்கள், ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் படுகொலைகள் என்பவற்றை விசாரிப்பதாகவும், உரியவர்களுக்கு தராதரம் பாராது தண்டனை வழங்குவதாகவும், இழக்கப்பட்ட அரச வளங்களை வெளிநாடுகளில் இருந்தாலும் மீட்பதாகவும் சபதமிட்டு பதவியிற்கு வந்த நல்லாட்சி அரசு அவற்றி செய்யாது குற்றவாளிகளை பாதுகாக்கவும் விடுவிக்கவும் துணை போகிறது எனவே மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின் ஏன் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் ? அல்லது தவறிழைத்த நல்லாட்சியின் பங்காளிகளுக்கு 61 இலட்சம் வாக்குகளை (55.3%) வழங்கினார்கள் ? மக்கள் கொள்கை கோட்பாடுகளை மாத்திரம் முன்வைத்து தெளிவாக ஆணை வழங்குவதாயின் கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் இடம் பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை அவ்வப் பொழுது வெளிக் கொண்டு வந்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற கட்சிகளுக்கல்லவா வாக்களித்திருக்க வேண்டும்?
உண்மையில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்பதனையே இந்த தேர்தல்கள் எடுத்துக் கட்டுகின்றன.
மத்திய அரசில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமா ?
உண்மையில் இந்த கூட்டாட்சி தொடர வேண்டுமா இல்லையா என்ற கேள்வி அண்மைக்காலமாகவே தேசிய அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகின்றது, கடந்த 2017 செப்டம்பர் மதத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான் கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டிருந்த கூட்டாட்சி புரிந்துணர்வு உடன்பாடு காலாவதி ஆகிய பின்னர் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கிடையில் முரண்பாடுகளும் முளைவிட ஆரம்பித்திருந்தன, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினருடன் பிரதமர் உறவுகளை வைத்திருப்பதாகவும், அரசியல் உள்நோக்கங்களுடன் பாரிய குற்றச் சாட்டுகள் உள்ள அவர்களை பாதுகாப்பதாகவும் அரசியலில் தன்னை தனிமைப்படுத்த முனைவதாகவும், சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தி பலவீனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச் சத்துக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் தனது கட்டுப் பாட்டில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவை உருவாக்கி அதன்மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவைகளாக சுதந்திரக் கட்சிசார்பினரால் விமர்சிக்கப்பட்டது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த திருமதி தில்ருக்ஷி பதவி நீக்கம் செய்யப்பட்டு ஆணைக்குழு செயலிழக்கச் செய்யப் படுகிறது.
இவ்வாறான முறுகல் நிலை இருந்த பொழுதுதான் மத்திய வங்கி பிணை முறை மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது, அதனை விசாரிப்பதற்காக ஜனாதிபதி விஷேட ஆணைக்குழுவையும் நியமிக்கின்றார், விசாரணை அறிக்கைகள் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப் படுகிறது, பிரதமர் உற்பட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதானிகள் குற்றவாளிகளாக inam காணப்படுகின்றனர். உடனடியாகவே சட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி சட்டமா அதிபர் மத்திய வங்கி ஆளுநர், இலஞ்ச ஊழல் ஆணைகுழு ஆகியவற்றிற்கு உத்தரவிடுகின்றார்.
இத்தகைய சூழ்நிலைகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப் பட்ட நிலையில் தான் கடந்த அரசிலோ இந்த அரசிலோ ஊழல் மோசடிகளில் மற்றும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டோருடன் கூட்டாட்சி பங்காளியாக இருக்கப் போவதில்லை என திட்டவட்டமாகவே அறிவித்திருந்தார். அதனையே பிரச் சாரக் கூட்டங்களில் வலியுறுத்திக் கூறியும் வந்தார்.
இவாறான ஒரு திரிசங்கு நிலையில், தான் தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் பின்னடைவை சந்தித்திருப்பதாலும் இன்றுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராக மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி தேர்தல்களில் கணிசமான வெற்றி ஈட்டியுள்ளதாலும் எதிர்கால அரசியலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருமைப்பாடு ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை தேசிய கூட்டாச்சி பங்காளி என்ற வகையில் முன் கொண்டு செல்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கின்றார் எனத் தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் தனித்து ஆட்சியை அமைப்பதற்கான முன் ஆயத்தங்களில் ஆரம்பத்திலிருந்தே மேற்கொண்டுவருவதை அறிய முடிகிறது, ஏற்கனவே பல சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளை உள்வாங்கியிருந்ததோடு தமிழ் தேசியக் கூட்டணியுடனும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகிறது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நிலைப்பதனை நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டணி விரும்பும் என்பதில் சந்தேகமில்லை, தற்பொழுது தம்மிடம் 105 உறுப்பினர்கள் இருப்பதனால் தம்மோடு உடன் படுகின்ற ஏனைய கட்சிகளை சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு முன்செல்ல அவர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
எதிர்க் கட்சித் தலைவர் பதவி ?
நல்லாட்சி அரசு அமைந்த பின்னர் அதிபர் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினர் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற விரும்பவில்லை அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவரும் பெரும்பாலான அவரது அணியினரும் தலைமை வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக இருந்தமையால் பல சட்டச் சிக்கல்கள் இருந்தன.
அந்த நிலையில் தமிழர் தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவாகியிருந்தார், என்றாலும் புதிய அரசியல் கள நிலவரங்களின் படி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள கூட்டு எத்றிக் கட்சியினர், தமது புதிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணி தனித்து பலமடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை இலக்கு வைக்கலாம் எனவும் அறிய முடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவைத் துண்டித்து சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சி ஒன்றை அமைக்குமாறு வலியுறுத்தும் மஹிந்த தரப்பினர் தாம் அரசில் இணைந்து பதவிகளைப் பெறப் போவதில்லை ஆனால் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அரசிற்கு ஆதரவு தருவோம் என்றே கூறியும் வருகின்றனர்.
பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடத்த முடியுமா?
உள்ளாட்சி தேர்தலில் அதிகூடிய சபைகளை வென்றுள்ள முன்னால் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுசன முன்னணி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றிற்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அரசியலமைப்பின் மீதான 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி நடப்பில் உள்ள பாராளுமன்றத்தினை நான்கரை வருடங்கள் கழியுமுன் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது, மூன்றிலிரு பெரும்பான்மை ஆதரவுடன் மாத்திரமே பாராளுமன்றம் கலைக்கப் பட முடியும்.
அவ்வாறான ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டால் மாத்திரமே தம்மால் ஆதரவு வழங்கப் பட முடியும் என்றும் இந்தக் குறுகிய காலத்தில் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து ஆட்சியைக் கைப்பற்றும் உபாயங்கள் எதுவுமில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் களநிலவரங்களை அவதானிக்கின்ற பொழுது முடியுமானவர்கள் ஆட்சியை அமைத்துக் கொள்ளுங்கள் நான் தொடர்ந்தும் சுயாதீனமான ஜனாதிபதியாகவும் அரச தலைவராகவும் இருக்கப் போகின்றேன் என்ற செய்தியையே ஜனாதிபதி மைத்திரி உணர்த்தி வருகின்றார், அதேவேளை நாடு பழைய படி இரு பெரும் கட்சிகளினதும் பாரம்பரிய அரசியலுக்கு திரும்புவதற்கு வழிவிட வேண்டிய கடப்பாடும் அவரிடம் இருக்கின்றது, தனது வாழ்நாளில் சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிற்கு சவாலான பலமான சக்தியாக மாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பும் அவரிடம் கட்சியின் தலைவர் என்ற வகையில் இருக்கின்றது.
குறிப்பாக 2020 பொதுத் ஜனாதிபதித் தேர்தல் அதனைத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்தல் (சிலவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே இடம் பெறலாம்) போன்ற வற்றிலும் மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர் கொள்ளுமளவு பலமான சுதந்திரக் கட்சி/ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினை கட்டி எழுப்புவதற்கு சகல விதமான ஒத்துழைப்புக்களையும் அவர் வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
பிரதமரை மாற்ற முடியுமா ?
ஏற்கனவே பிணைமுறி விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள பிரதமர் பதவி விலகுவதை பல தரப்புக்களும் வலியுறுத்தியிருந்த போதும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு மூன்றிலிரு பெரும்பானமையுடன் அது நிறைவேறினால் மாத்திரமே பிரதமரை ஜனாதிபதியால் அகற்ற முடியும் என 19 ஆவது திருத்தச் சாட்டம் சொல்கிறதாம்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்து முன்வைக்கப்பட்ட கோசங்களை பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை ஆசுவாசப்படுத்துவதன் மூலம் பிரதமர் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவருவதாக தெரிகிறது, கட்சியின் முழுமையான ஆதரவின்றி தாம் பிரதமராக விரும்பவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைய அல்லது நல்லாட்சி தேசிய அரசு தொடர தாம் ஆதரவளிக்க வேண்டுமெனில் பிரதமர் ரணில் பதவி விலக வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் எதர் கொண்டுள்ள அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்கள்
உண்மையில் நடந்து முடிந்த தேர்தல் உள்ளூராட்சி மன்றங்களிற்கான தேர்தல்கள் ஆகும், ஆளும் கூட்டணிக் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்ட நிலையிலும் சுமார் 53 % வாக்குகளை பெற்றுமுள்ளனர், இந்த நிலையில் மத்திய அரசில் மாற்றங்களைக் கொண்டுவருமாறு விடுக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமற்றவையாகும்.
என்றாலும் நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்பாடு கடந்த வருடம் டிசம்பர் மாதம் காலாவதியாகியுள்ள நிலையிலும், பிரதான கட்சிகளுக்கிடையில் முறுகல் நிலை முற்றியுள்ள நிலையிலும் தொடர்ந்தும் தேசிய அரசிற்கான உடன்பாட்டினை புதுப்பிப்பதா இல்லையா என்ற கேள்வியே தற்பொழுது எழுந்துள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன சுதந்திரக் கட்சியினது எதிர்கால ஐக்கியத்தை கருத்தில் கொண்டு தமது மாற்று அணியினரான மஹிந்த தரப்பு ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியினருடன் உடன்பாட்டிற்கு வருவதனையே விரும்புகின்றனர்.
இந்த நிலையில் தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி விலகி ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சி அமைக்கப் படின் அமைச்சரவை அங்கத்தவர்களின் எண்ணிக்கை 30 ஐயும் பிரதியமைச்சர்கள் எண்ணிக்கை 15 ஐயும் தாண்ட முடியாது என அரசியலமைப்பின் மீதான 19 ஆவது திருத்தச் சட்டம் கூறுகிறது.
அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் படுவதாயின் பதவியில் உள்ள பிரதமரை நீக்குதல், அமைச்சரவையை கலைத்தல், பெரும்பானமையுடன் ஆட்சியமைக்க தகுதியுடைய தரப்பினரை பாராளுமன்றத்தில் வக்கெடுப்பினூடாக இனம் காணுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களில் ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் உயர் நீதிமன்றத்தின் கருத்தினை அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பழி தீர்க்கும் கைங்கரியத்தை கட்சிதமாக செய்து கொண்டிருக்கின்றனர்.
ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர் முதற்கட்டமாக ஐ தே க சுதந்திரக் கட்சி விவாகரத்தை செய்வித்து இரண்டாம் கட்டமாக அமையும் ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு பின்னர் மூன்றிலிரு ஆதரவுடன் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான களநிலவரங்களையே ஏற்படுத்த சூழ்ச்சிகள் செய்வதகவே தெரிகிறது.
இதய சுத்தியில்லாத உள்நோக்கங்கள் கொண்ட ஒரு தரப்பு மற்றோரு தரப்பிற்கு குழி தோண்டுகிற நயவஞ்சகமான பேச்சு வார்த்தைகளும் பேரம் பேசல்களுமே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதியின் நடவடிக்கைகள் நன்றி கெட்ட நடவடிக்கைகள் எனில் ஆரம்பம் முதலே அவரைத் தனிமைப்படுத்த பிரதமர் மேற் கொண்ட நடவடிக்கைகளும் நன்றி மறந்த நடவடிக்கைகளாகும்.
குறைந்த பட்சம் அரசியலமைப்பின் படி பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை தீர்க்கமான மாற்றங்களோடு தேசிய அரசு தொடர்வதே சிறந்தது.
நல்லாட்சி என்று இனிமேலும் இதனை அழைக்க முடியாது, அழைக்கவும் கூடாது.
தொடரும்…..