எதிரியின் எதிரி எனது நண்பன்’ என்பது உலக அரசியலில் மிகவும் பழமை வாய்ந்த பழமொழி. மிக சுருக்கமாக கூறுவதனால், இரண்டாவது உலக போர் நடைபெற்ற வேளையில், சோவியத் யூனியனுடன் ஒத்துவராத நாடுகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும்,அடோல்ப் கிற்லரின் ஜெர்மன் நாசிய படைகளிற்கு எதிராக கைகோர்த்து நின்றனர். இவ் நாடுகள் தமக்குள் உள்ள சர்ச்சைகள் ஒருபுறம் தள்ளி விட்டு ஒன்றுபட்டு கைகோர்த்து நின்றார்கள் என்பது உலக சரித்திரம்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில், பல நாடுகள் பின்ணனியிலிருந்தாலும், விசேடமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, வடகொரியா, அமெரிக்கா ஆகிய நட்பற்ற நாடுகள் ஒன்றுபட்டு யுத்தத்திற்கு உதவினர்கள்என்பது, ‘எதிரியின் எதிரி எனது நண்பன்’ என்ற அடிப்படையிலேயே. தமது நண்பராகிய சிறிலங்காவின் ஆத்மா திருப்திக்காக> தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு முன்னின்றார்கள் என்பதே உண்மை.
இவ் ‘எதிரியின் எதிரி எனது நண்பன்’ என்ற நிலை, இன்று தமிழீழ மக்களிடையே நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் பிரபலியமானதாக கணப்படுகிறது. இதனால் பயனடைவது, சிறிலங்கா அரசு, விடேமாக சிறிலங்காவின் புலனாய்வு கட்டமைப்புக்கள்என்பதை, பொது அறிவு கொண்டவர்கள் அறிவார்கள்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில், எனது நீண்ட அனுபவத்தில், பலவித குரோதங்களை வளர்த்து சர்ச்சைகளை தேடிக்கொண்ட பலரை கண்டுள்ளேன். இவர்கள் இரவு பகலாக சிலரை திட்டுவதையும், போராட்ட வேளையில் இவர்களிடையே எந்தவிதசமரசமும் செய்ய முடியாது பல தடவைகள் விரக்தியும் அடைந்திருந்தேன்.
ஆனால் இன்று, விசேடமாக முள்ளீவாய்காலின் பின்னர், அதாவது 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் நிலைமைகள் வேறாகியுள்ளது. முள்ளீவாய்காலின் பின்னர் பல குழுக்களாகவும், பிரிவுகளாகவும் சின்னா பின்னமாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களில் சிலர்,தற்பொழுது ‘எதிரியின் எதிரி எனது நண்பன்’ என்ற நிலையில் தமது சுயலாபங்களின் அடிப்படையில் இணைந்துள்ளனர்.
எதிரிகள் இணைவது என்பது வரவேற்கதக்க விடயம். ஆனால் இருவருக்கு எதிரியாக காணப்படும் ஒருவரின் எதிர்காலத்தில் மண்ணை தூவுவதற்காக இணைவது என்பது மிக ஆபாயகரமான விடயம். இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் எந்தவிதபயனையும் அடைய மாட்டார்கள். மாறாக, நாட்டிலும் புலத்திலும் ஈழ தமிழர்கள் மேலும் அழிவுகளை சந்திப்பார்கள்.
அரசியல் விபச்சாரம்
தமிழீழ விடுதலை போராட்ட காலத்தில், ‘தமிழர் விடுதலை கூட்டணியை’ தேர்தலில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்ட வேளையில், தமிழ் தேசிய கூட்மைப்பு உருவாகியது. இவ்வேளையில், சகல கட்சிகளையும் இணைத்து உருவான தமிழ் தேசிய கூட்மைப்பில்,புளோட் என கூறப்படும், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் பங்கு கொள்ள முடியவில்லை. இதற்கான காரணங்களில் ஒன்று, சிலரினால், புளோட் அமைப்பு பற்றி நன்றாக போட்டு கொடுத்து, இவர்களை நம்புவதால் மிகவும் மோசமான ஆபத்துக்களே காத்திருப்பதாகஏவப்பட்டது. அதேபோல் புளோட் அமைப்பினரும் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதில் தமக்கு பெரும் பங்கு இருப்பதாக போர் முடிந்ததும் அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் இன்று, தமிழ் தேசிய கூட்மைப்பில் புளோட் பங்கு வகிப்பது மட்டுமல்லாது, அண்மை காலங்களில் உருவான தமிழர் பேரவையின் முக்கிய பங்காளிகளான – கஜந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் புளோட்டின் தலைவர்தர்மலிங்கம் சித்தாத்தன் கைகோர்த்து நிற்கின்றார். இது மிகவும் விசித்திரமான விடயம்.
இதேபோல், தமது ஊடகம் தக்கப்படும் ஒவ்வொருவேளையும், ஈபிடிபி எனப்படும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது குற்றம்சாட்டி, இவர்களுக்கு இடையில் பல வழக்குகள் நடப்பதாக கூறும் சரவணபவான், ஐ.நா.செயலாளர் நாயகம் திரு பன்கீ முனை சந்திப்பதற்காகஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவனந்தாவுடன் காணப்படுகிறார். இப்படியாக நூற்று கணக்கான ஊதாரணங்களை முன்வைக்க முடியும். இவை யாவும் கூறும் செய்தி என்ன? இப்படியான காரணிகளினாலேயே அரசியல் விபச்சாரத்திற்கு சமனாதுவென சிலஆய்வாளர் கூறுகின்றனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன்
இவற்றிற்கு ‘ஏதிரியின் எதிரி எனது நண்பனா?’ அல்லது கொள்கை இல்லா சுயநலம் கொண்ட அரசியலா காரணம்? இவற்றின் உண்மை தன்மைகளை அலசி ஆராய்வதற்கு யாவரும் உரிமை உடையவர்கள். இறுதியில் இவர்களது அரசியல் ஏமாற்று நாடகங்களிற்குபலியாவது அப்பாவி தமிழ் மக்கள் என்பதை யாவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
அன்று முதல் அமைச்சாராக தெரிவாகிய திரு விக்னேஸ்வரனை திட்டிய பலர், இன்று அவரது பெயரில் குளீர்காய்கிறார்கள். சுருக்கமாக கூறுவதானால், சிலர் விக்னேஸ்வரன் என்ற ‘ஏணியால்’ ஏற முயற்சிக்கிறார்கள். ஏணி என்பது ஏற மட்டும் அல்லா,இறங்குவதற்கும் பாவிக்கப்படுகிறது என்பதை, ‘ஏணியாக’ மற்றவர்களை பாவிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வேளையில் முன்னாள் அமெரிக்கா ஜனதிபதி ஏபிராகாம் லீங்கன் கூறிய விடயம் ஒன்று எனது மனதில் உதயமாகிறது. “ஒருவர் – எல்லோரை சிலவேளைகளிலும்; சிலரை எல்லா வேளைகளிலும் மடையர்கள் ஆக்க முடியும். ஆனால் எல்லோரையும்எல்லாவேளையிலும் மடையர்கள் ஆக்க முடியாது” என கூறியுள்ளார்.
இதே நிலையில் தான் இன்று புலம்பெயர் வாழ் செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. புலம்பெயர் தேசங்களிற்கு அகதிகள் வரவு ஆரம்பமாகிய 70ன் பிற்பகுதிகளில், விடுதலை இயங்கங்களை ஆதரிப்பதற்காக வேறுபட்ட சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில்,எந்தவித இணக்கமோ ஒற்றுமை வரமுடியாதவாறு சண்டித்தனங்கள் செய்தவர்களும், தெருக்களில் மூலை மூடுக்குகளில் நின்று மாறி மாறி ஒருவரை ஒருவர் வசைபாடியவர்களும், தாம் தான் போராட்டத்தின் முதுகெலும்பென தம்பட்டம் அடித்ததற்காகவிரட்டப்படவர்களும், இன்று திடீரென கைகோர்த்து நிற்பதும், ஒரே மேடையில் உதயமாவதும் வியற்பிக்குரிய வியடம். இவை உண்மையில் ஈழ மக்களிற்கு உதவுவதற்கா என்பதற்கு மேலாக, ‘ஏதிரியின் எதிரி எனது நண்பன்’ என்பதே உண்மை.
இப்படியான நட்பு, மிக நீண்டகாலமாக ஒற்றுமையாக இருந்து, முள்ளீவாய்காலின் பின்னர் பிரிந்தவர்களிடையே ஏற்படுமானால் நிட்சயம் வரவேற்ககூடிய விடயம். ஆனால் பல வருடங்களாக மாறி மாறி வசை படியவர்கள், ‘ஏதிரியின் எதிரி எனது நண்பன்’அடிப்படையில் உருவாகும் நட்பு என்பது, சிறிலங்கா அரசின் கபட வேலை திட்டங்களிற்கு மட்டுமல்லாது, வெளிநாட்டு புலனாய்வினர்களின் வேலை திட்டங்களிற்கு வலு சேர்கிறது என்பதே உண்மை.
நாரதர்களின் மாம்பழம்
வரட்டு கௌரவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் ஒரு பொழுதும் நிம்மதியாக வாழ மாட்டார்கள் என்பது மனேதத்துவ நிபுணர்களின் கருத்து. மதுபானம் பாவித்தவர்களுக்கு கைநடுக்கம் ஏற்படுவது போல், பதவிகள் வகித்து பதவிகள் பறிக்கப்பட்ட சிலர்,பதவிகளிற்காக, ‘ஏதிரியின் எதிரி எனது நண்பன்’ என்ற அடிப்படையில் சுயநலமான வேலை திட்டங்களை மேற்கொள்வதை புலம் பெயர் தேசங்களில் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
புலம் பெயர் தேசங்களில், புலி கொடி தேசிய கொடி என்பவை யாவும், நாரதர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள மாம்பழமே! புலி கொடி தேசிய கொடி விடயத்தை இவ் வேளையில் பெரிதுபடுத்தி ஊடகங்களில் இதற்காக மாபெரும் நிகழ்சிகள் செய்வது என்பது,ஏற்கனவே பிளவுபட்டுள்ள புலம் பெயர் வாழ் மக்களை மேலும் பிரிவுகளிற்கு உள்ளாக்கும் என்பதை இவர்கள் அறியாதவர்களானால், ஊடகம், ஊடகவியலாளார் என்ற பதத்திற்கு அருகதை அற்றவர்கள்.
திறமையுள்ள உள்ள ஊடகவியலாளர் எவரும், தமக்கு சாதகமான கருத்துக்களை கூறும் நபர்களை ஒரு குழுவாக இணைத்து, தமது கருத்திற்கு எதிரானவர்களை எதிர்கொள்ள மாட்டார்கள். இவ் அடிப்படையில் இயங்கும் ஊடகம் எப்படியாக நாடு நிலை ஊடகமாகஇருக்க முடியும்? இவ் அடிப்படையில் இயங்குபவர்கள், நிட்சயம் புலம் பெயர் வாழ் மக்களின் ஓற்றுமையை குலைப்பதையே செயற்திட்டமாக கொண்டவர்கள்.
யாழ் முஸ்லீம்கள்
யாழ்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டதற்கு, சர்வதேச ரீதியாக அனுதாபங்களும், ஆதரவுகளும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேவேளை, இச் சம்பவத்திற்கு பல தடவைகள் தமிழீழ விடுதலை புலிகள் மன்னிப்பு கேட்டுள்ளதுடன்,சமாதனப் பேச்சுவார்த்தைகள் நடந்த 2002ம் ஆண்டு காலபகுதியில், பல முஸ்லீம் தலைவர்கள் வன்னிக்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் உட்பட பல மேல்மட்ட தளபதிகளையும் சந்தித்து, தமிழ் பேசும் மக்களிடையேயான உறவுகள்பற்றி பல பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தனர்.
மறைக்க முடியாத உண்மை என்னவெனில், 1995ம் ஆண்டின் பின்னர், தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணம் இருந்திருக்வில்லை என்பதையும், அவ்வேளையில் யாழ்பாணத்து முஸ்லீம்களை ஏன் வேறுபட்ட சிறிலங்கா அரசினால் மீள்குடியேற்றம் செய்ய முடியவில்லை என்பதை இன்று வரை சரியான முறையில் ஆய்விற்கு உட்படுத்தபடவில்லை.
முதலாவதாக தமிழ் பேசும் மக்களிடையே சிங்கள அரசுகளினால் ஏற்கனவே ஏற்படுத்தபட்ட பகைமைகையை தொடர்ந்து பகைமையாக வைத்திருப்பதற்காகவும், தமிழீழ விடுதலை புலிகள் மீது, சிறிலங்கா அரசு தனது சர்வதேச பிரச்சாரத்தைமேற்கொள்வதற்காகவுமே விரட்டப்பட்ட யாழ் முஸ்லீம்கள் பயன்படுத்ப்பட்டார்கள் என்பதே உண்மை.
இல்லையேல் ஆயிரகணக்கில் இராணுவத்தையும், போர் தளவடங்ளையும் கடல் ஆகாய மார்க்கமாக யாழ் குடாவிற்கு தினமும் எடுத்து செல்லும் அரசிற்கு, விரட்டப்பட்ட முஸ்லீம்களை மீள் குடியேற்றம் செய்வதில் என்ன தடையிருந்தது என்பதை யாழ்முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும்.
இன்று யாழ்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டு ஏறக்குறைய இருபத்து வருடங்கள் கடந்தது மட்டுமல்லாது, பல அரசாங்களும், ஜனதிபதிகளும் மாற்றம் அடைந்துள்ள நிலையில், இவ் விவகாரம் தொடர்வதன் கபடம் என்னவென்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
1992ம் ஆண்டின் பின்னர், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அல்லது யாழ் முஸ்லீம்கள் ஐரோப்பாவிலும் வேறு பல நாடுகளிலும் வசித்து வருகின்ற நிலையில், திடீரென கடந்த ஐ.நா. மனித உரிமை சபையின் 33வது கூட்டத் தொடரில், அதாவது செப்டம்பர் 27ம்திகதி, யாழ்பாணத்திலிருந்து தமிழீழ விடுதலை புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள் பற்றி ஓர் பக்க கூட்டம் நடைபெற்றுள்ளது. இக் கூட்டம், “சுயநிர்ணய உரிமையும் இடப்பெயர்வும்” என்ற தலைப்பில் நடைபெற்றது வியப்பிற்குரியது.
இக் கூட்டத்தை நடத்திய “உலக முஸ்லீம் காங்கிரஸ்”என்ற அமைப்பு, ஐ.நா.மனித உரிமை சபையில், பாகிஸ்தான் எல்லை புறத்தில் வாழும் கஸ்மீர் மக்களுக்காக மிக நீண்ட காலமாக குரல் கொடுத்துவருபவர்கள். இவர்கள் யாழ் முஸ்லீம்களின் சம்பவம் பற்றி பலவருடங்களிற்கு முன்பு நன்கு அறிந்தவர்கள். ஆனால், இருபத்தி ஐந்து வருடங்களின் பின்னர் யாழ் முஸ்லீம்களிற்காக ஐ.நா.வில் மேடை அமைத்து கொடுத்தது நிட்சயம் அவர்களது சந்தர்பவாதமே.
இவ் சம்பவத்தை மிக நுணுக்கமாக ஆராயுமிடத்து, ‘எதிரியின் எதிரி எனது நண்பனா’ என்ற ரீதியிலேயே முடிகிறது. சுருக்மாக கூறுவதனால், பாகிஸ்தானின் முதலாவது தலைநகரான கராச்சியில் தனது காரியாலயத்தை கொண்டுள்ள ‘உலக முஸ்லீம் காங்கிரஸ்’ மீகநீண்டகாலமாக இந்தியா மீது வசை பாடுவதையே தமது செயற்திட்டமாக கொண்டுள்ளனர் என்பதை ஐ.நா.வில் யாவரும் அறிந்த விடயம். சிறிலங்காவில் இஸ்லாமிய தீவிர வாதம் பற்றிய பேச்சுகள் ஆங்காங்கே பேசம்படும் இவ் வேளையில், விடயங்கள் புரியாது,அப்பாவி யாழ் முஸ்லீம்கள் தமது விடயங்களை தவறனவர்களினால் தவறான முறையில் முன்னேடுப்பது இவர்களிற்கு ஏற்கனவே உள்ள சர்வதேச அனுதாபத்தை மழுக்கடிக்கும் என்பதை இவர்கள் புரியவில்லை போலும்.
இக் கூட்டத்தை ஒழுங்கு பண்ணியுள்ளவர், யாழ் முஸ்லீம் அல்லாத ஒருவர் என்பதுடன், அவ் நபரை ஐ.நா. மனித உரிமை சபைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் அழைத்து வந்தவர், இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய முன்னாள் தமிழ் அமைச்சரின் கையாளாகஜெனிவாவில் செயற்படும் நபரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விடயங்களை ஆராயுமிடத்து, புலம் பெயர் யாழ் முஸ்லீம்கள், ஐ.நா.வில் சில சந்தர்பவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கியுள்ளார்கள் என்பதே உண்மை.
இறுதியாக, சிறிலங்காவில் சிங்களவர்களிடையே பல அரசியல் கட்சிகள், பல வேறுபாடுகள் நிலவிய பொழுதும், சிங்களவர்களில் பெரும்பான்மையானோர், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை ஓர் பொது எதிரியாக எண்ணுவதனால், இங்கும் ‘எதிரியின் எதிரி எனதுநண்பன்’ என்ற அடிப்டையிலேயே யாவும் நகர்தப்படுகிறது. இலங்கைதீவு சுதந்திரம் அடைந்து இன்று பல தசாப்தங்களாகியும், இன்றுவரை தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கு வாழ் மக்களது அரசியல் அபிலாசைகளை திருப்பதிப்படுத்தும் வகையில், ஓர் அரசியல் தீர்வு காணப்படமைக்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்