எப் 21 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு எந்த நாட்டுக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திடம் எப்.,21 ரக போர் விமானங்கள் வாங்க இந்தியா டெண்டர் கோரியுள்ளது.
18 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், 114 விமானங்களை வாங்க இந்திய விமானப்படை டெண்டர் கோரியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன.
இந்த போட்டியில், லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப்.21 போயிங் நிறுவனத்தின் ‘எப்/ஏ-18’, டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர் டைப்யூன், ரஷ்யாவின் ‘மிக்-35’ மற்றும் சுவீடனின் ‘சாப்-35’ கிரிப்பன் விமானங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், லாக்ஹீட் மார்டின் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளதாவது,
எப்.,21 ரக போர் விமானங்கள், இந்தியாவில் 60 விமான நிலையங்களில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல உயர்தர அதிநவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியா எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தால், விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம். டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், விலையும் குறைவாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.