உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை முதன் முதலாக தென் ஆப்பிரிக்க நாட்டில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த NIAID என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான Anthony Fauci என்பவர் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எயிட்ஸ் நோயை குணப்படுத்தும் தடுப்பூசி தொடர்பாக HVTN 702 என்ற ஆய்வு பல ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.
இதன் விளைவாக தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும் இதனை முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் புதன்கிழமை அன்று பரிசோதனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள 52.98 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 6.8 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 பேர் தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்தை தென் ஆப்பிரிக்காவில் உள்ள 18 முதல் 35 வயதுடைய 5,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பரிசோதனை வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் இறுதி மருந்தாகவும் இது அமையும் என இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இந்த தடுப்பூசி மருந்து வெற்றிகரமாக செயல்பட்டால், அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நாடுகளிலும் பரிசோதனை செய்யப்படும்.
எனினும், தற்போது தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ள உள்ள இந்த பரிசோதனையின் முடிவு எதிர்வரும் 2020-ம் ஆண்டின் இறுதியில் தான் தெரியவரும் என Anthony Fauci தெரிவித்துள்ளார்.