சிரஷே்ட ஊடகவியலாளரான ஏ.ஆர்.ஏ.பரீல் உடத்தலவின்னையைபிறப்பிடமாகக் கொண்டவர். விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியபீடத்தில் கடமையாற்றும் இவர் காதி நீதிவானாகவும் பதவிவகிக்கிறார்.
மாகாணசபைத் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள். மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் நடாத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் உறுதியளித்திருந்தார். அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது ஸ்ரீ. லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்திருந்தபடி பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டுவிட்டது. அறிக்கைக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரேனும் வாக்களிக்கவில்லை. அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்த அமைச்சர் பைசர் முஸ்தபாவும் எதிர்த்து வாக்களித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாகாண சபைத்தேர்தல் தாமதமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அறிக்கையை பெரும்பான்மையினர் நிராகரித்துள்ளனர். வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த 139 உறுப்பினர்களும் அறிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
மக்கள் விடுதலை முன்னனி உட்பட 86 உறுப்பினர்கள் ஏற்கனவே அறிக்கைக்கு ஆதரவளித்திருந்தாலும் வாக்கெடுப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் சமுகமாகியிருக்கவில்லை. இதன்மூலம் எந்தவொரு கட்சியும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
புதிய தேர்தல் முறைமை
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் சிபார்சினையடுத்து புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதி முறையை அடிப்படையாகக் கொண்ட கலப்பு தேர்தல் முறைமை உள்ளூராட்சி தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் பாராளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு கலப்பு விகிதாசார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் மாகாண சபை தேர்தலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து சட்டத்தை அமுல்படுத்துவதற்காக மாகாண சபைத்தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படுவது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தச் சட்டத்தின்படி மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் ஐவர் கொண்ட தேசிய குழுவொன்றினை நியமிக்க வேண்டியேற்பட்டது. ஜனாதிபதி இதற்கென முன்னாள் நில அளவையாளர் நாயகம் கே.தவலிங்கம் தலைமையில் குழுவொன்றினை நியமித்தார். இந்தக் குழு 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் திகதி நியமிக்கப்பட்டதுடன் குழு தனது அறிக்கையை 4 மாத காலத்துக்குள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜனாதிபதி இக்குழுவின் அங்கத்தவர்களை நியமித்தார். மூன்று இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூவர் இக்குழுவில் அங்கம் பெற்றிருந்தனர்.
அறிக்கை அமைச்சரிடம் கையளிப்பு
மாகாண சபைத்தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது. அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு முன்பு அமைச்சர் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஆணைக்குழுவை வேண்டியிருந்தார். இது தொடர்பில் அமைச்சர் ஆணைக்குழுவிற்கு கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் ஆணைக்குழு அதற்குச் சந்தர்ப்பம் வழங்கவில்லை. பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி இதற்குச் சட்டத்தில் இடமில்லை எனத்தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியிருந்ததுடன் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி அமைச்சரிடம் அறிக்கையை கையளித்தது.
அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு எல்லை நிர்ணய ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தால் அறிக்கையின் குறைகள் திருத்தப்பட்டிருக்கலாம்.
மாகாண சபை திருத்தச் சட்டம் 3 அ (11) பிரிவின் கீழ் அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கிணங்க பெப்ரவரி 19 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற அறிக்கையை அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபைத் தலைவரிடம் கையளித்தார்.
மார்ச் 2 ஆம் திகதி கையளிக்கப்பட்ட அறிக்கை மார்ச் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு அறிக்கையிடப்பட்டது. என்றாலும் அன்றைய தினம் அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. கட்சித் தலைவர்கள் அறிக்கை தொடர்பில் பிரதமரின் தலைமையில் கலந்துரையாடல்களை நடாத்தி தீர்மானமொன்றினை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்கள். ஆனால் கட்சித் தலைவர்கள் கடந்த 6 மாத காலமாக பேச்சு வார்த்தைகள் நடாத்தியும் பலன் ஏற்படவில்லை. காலம் வெறுமனே வீணடிக்கப்பட்டது.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தல் தாமதமாக்கப்படுவது தொடர்பில் அரசாங்கத்தை பிரதிநிதிப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் இணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்புகளை வெளியிட்டன
தேர்தல்கள் ஆணைக்குழுவும் மாகாண சபைத் தேர்தலை தாமதியாது நடாத்துவதற்கு பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியது. இதனையடுத்தே கடந்த 24 ஆம் திகதி எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு
மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். குறிப்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மேடைகளில் கடுமையாக எதிர்த்தனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் மனோகணேஷன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா என்போர் பாராளுமன்ற கட்டிடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து எல்லை நிர்ணய அறிக்கையை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் ஜனாதிபதி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன்படி இணைந்த எதிர்கட்சியினர் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களித்தமை சிறுபான்மை கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி எனலாம்.
அமைச்சர் பைசரும் எதிர்ப்பு
மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் கீழேயே நடாத்தப்பட வேண்டும். ஜனாதிபதியினதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் நிலைப்பாடு இதுவே என்று அமைச்சர் பைசர் முஸ்தபா உறுதியாக தொடர்ந்து கூறி வந்தார் அத்தோடு அவர் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பழைய முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று போராடி வந்ததை கொச்சைப்படுத்தினார். அக்கட்சிகள் சுயநல அரசியல் செய்வதாக சாடினார். முஸ்லிம் அரசியல் கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளின் மிதிபலகையில் பயணிப்பதாக குற்றம் சாட்டினார்.
என்றாலும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தார்.
“ எல்லை நிர்ணய அறிக்கையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமான பல் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட வில்லை அதனாலே நான் எல்லை நிர்ணய அறிக்கையை எதிர்த்து வாக்களித்தேன். நான் புதிய தேர்தல் முறையை எதிர்க்க வில்லை. எல்லை நிர்ணய அறிக்கையையே எதிர்க்கிறேன் இந்த அறிக்கை என்னாலோ, எனது அமைச்சினாலோ தயாரிக்கப்படவில்லை. ஒரு சுயாதீன குழுவினாலே தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதியே இக்குழுவினை நியமித்தார். சட்டத்தின் விதிகளுக்கமைய என்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நான் பாராளுமன்றில் சமர்ப்பித்தேன். அத்துடன் எனது கடமை முடிந்து விட்டது” என்று அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். குறைகள் காணப்படுகின்றன என்பதற்காக ஊழல் நிறைந்த விருப்பு வாக்கு முறைமையான பழைய முறைக்கு பச்சை கொடி காட்டுவது ஆபத்தானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். பழைய தேர்தல் முறைக்குச் சென்றால் 25% பெண் பிரதிநிதித்துவத்திற்கும் வாய்ப்பில்லாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சிறுபான்மை சமூகத்துக்குப் பாதகமான விடயங்கள் அகற்றப்பட வேண்டும். முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எல்லை நிர்ணய அறிக்கை
மீளாய்வுக் குழு
எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாததையடுத்து 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை திருத்த சட்ட மூலத்தின் 4 (12) ஷரத்தின்படி சபாநாயகர் ஐவர் கொண்ட எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வுக் குழுவொன்றினை நியமிக்க வேண்டும். குழுவின் தலைவராக பிரதமரே நியமிக்கப்படவும் வேண்டும். அதன் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐவர் கொண்ட குழுவினை நியமித்தார். குழுவின் அங்கத்தவர்களாக ஆர்.எஸ்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரிர் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி ஏ.எச்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபை திருத்த சட்ட மூலத்தின் 4 (12) ஷரத்தின் படி இக்குழு எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்து மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும். அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதும் அவர் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவார். அறிக்கை இரு மாதங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் மீளாய்வுக்குழு எந்தெந்த விடயங்களில் மாற்றங்களைச் செய்துள்ளது என்பதை நோக்கவேண்டும். சிறுபான்மைக் கட்சிகள் அறிக்கையில் தமது சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நிச்சயம் சுட்டிக்காட்டும். அவ்வாறான முறைப்பாடுகளை மீளாய்வுக்குழு எவ்வாறு கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மீளாய்வுக் குழுவின் அறிக்கையையும் ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டால் அந்த அறிக்கைக்கும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பழைய தேர்தல் முறைக்கே செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்திலே 2/3 பெரும்பான்மை பெற்றே ஆகவேண்டும்.
தவலிங்கம் தலைமையிலான
எல்லை நிர்ணயக் குழு
கே. தவலிங்கம் தலைமையிலான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் பலமாக எதிர்த்துள்ளன. பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட முன்பே முஸ்லிம் அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாமை தொடர்பில் குழுவின் தலைவர் கே.தவலிங்கம் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்கு சாதகமாக தொகுதி எல்லை நிர்ணயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அறிக்கையை பாராளுமன்றத்தில் அங்கீகரித்துக் கொள்வதற்கு சிங்கள மக்களைப் பிரநிதிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை ஆச்சரியமளிக்கிறது.
எல்லை நிர்ணய அறிக்கையில் குறைகள் அல்லது அநீதிகள் காணப்பட்டால் அது தொடர்பில் எந்தவொரு நபருடனோ அல்லது குழுவுடனோ பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன், சவால் விடுகிறேன்.
எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அநீதியாக தொகுதி எல்லை நிர்ணயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சிங்கள சமூகத்துக்கு சாதகமாக எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறெனில் எல்லை நிர்ணய அறிக்கையை ஏன் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் எதிர்த்தன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்கு சாதகமாக எல்லைகள் வகுக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டுமல்லவா?
பல்தொகுதி கவனத்திற் கொள்ளப்படாது மாகாண சபைத் தொகுதி எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. அவ்வாறான பிரதேசங்கள் இரண்டு தொகுதிகளாக வகுக்கப்பட்டே எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதனால் சிறுபான்மை மக்களுக்கு அப் பிரதேசத்தில் வாழும் ஏனைய இனமக்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து அவற்றின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்பே அறிக்கை தயாரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்பு முஸ்லிம் அரசியல் கட்சிகள் பரிந்துரைகளை வழங்குவதில் கரிசனை செலுத்தவில்லையா? என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கையில் முதன் முதல் தேர்தல் தொகுதி பிரிக்கப்பட்ட போதும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. எல்லை நிர்ணயம் என்பது இலகுவான காரியமல்ல என்றும் தெரிவித்துள்ளார் தவலிங்கம் எனவே எல்லை நிர்ணயத்தில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்பது தெளிவாகிறது.
மீளாய்வு குழு உறுப்பினர்
கலாநிதி நௌபல்
மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மை சமூகத்துக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை மீளாய்வுக் குழுவின் உறுப்பினர் கலாநிதி ஏ.எஸ்.எம்.நௌபல் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தினால் முஸ்லிம் சமூகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் மீளாய்வு செய்து தீர்வுகளை முன்வைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
கே.தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் அங்கத்தவராக இருந்து செயற்பட்ட பேராசிரியர் மர்ஹூம் ஹஸ்புல்லாஹ்வும் தனது பணியின் போது சமூகத்தின் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இன்று அவர் எம்முடன் இல்லை என்றாலும் அவரது சமூகப்பற்று நினைவு கூறப்படுகிறது.
மர்ஹூம் ஹஸ்புல்லாஹ் தனது சமூகத்துக்காக வாதிப்பட்டமையை ஒருபோதும் தான் பிழையாகக் கருதவில்லை. அது அவரது கடமை என கே.தவலிங்கமும் தெரிவித்துள்ளார்.
கலாநிதி எ.எஸ்.எம்.நௌபலும் மர்ஹூம் ஹஸ்புல்லாஹ்வின் சமூகத்தின் மீதான பற்றுதலைப் பாராட்டியுள்ளார். எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஹஸ்புல்லாஹ் பகிரங்கப்படுத்தினார். அவர் உள்ளிட்ட குழு தயாரித்த எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதையறிந்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்றும் நெளபல் எம்மிடம் தெரிவித்தார். அந்த மகிழ்ச்சியுடனே அவர் மறுதினம் எம்மை விட்டுச் சென்று விட்டார்.
அறிக்கை மீளாய்வு
எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது. மீளாய்வுக்குழு அறிக்கையை பலகோணங்களில் ஆராயவுள்ளது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை சுட்டிக்காட்டுவதற்கு அரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது.
எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சுயநலநோக்கினைத் தவிர்த்து சமூக நோக்கோடு இவ்விவகாரத்தைக் கையாள ஒன்றுபட வேண்டும்.