1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் – அது பனிப்போர் காலம் – முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருந்தி கொண்டிருந்த காலம்.
தம் இறைமைக்காக போராடியவர்கள் பலரும் சோசலிசவாதிகள் என அடையாளம் காணப்பட்டதும் இரு பகுதியில் ஒருவரின் ஆதரவைப் பெற்றே விடுதலைப் போராட்ட களங்கள் நகர்ந்த காலம் அது.
இவ்விரு பகுதியினரையும் கடந்து அணிசேராக் கொள்ளை கொண்ட கூட்டமைப்பை நகர்த்த தொடர்ந்தும் முனைப்புக்கள் அதிகரித்திருந்த காலமும் கூட. இச்சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் யூகோசெலவாக்கியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகாணோ ஈகிப்தின் நாசர் ஆகியோர் இவ்வாறான காலப்பகுதியில் தான் ஈழவிடுதலைப்போரும் வீச்சாகிறது. உலகத்தின் கவனத்திற்கு வருகிறது.
அதிலும் விடுதலைப்புலிகள் என்ற விடுதலை இயக்கம் தமிழரின் தலைமை சக்தியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது. இவர்கள் யார்? இவர்கள் எந்தத்தரப்பைச் சார்ந்தவர்கள்? அல்லது ஆதரவைப் பெற்றவர்கள்? இவர்களின் கொள்கை என்ன? என்ற வாதப்பிரதிவாதங்களும் அதிகரித்திருந்த காலம் அது.
இக்கேள்விகளுக்கான சரியான பதில்கள் அல்லது தெளிவான பார்வை இன்றுவரை தமிழர்களிடமே கிடையாது என்பதே யதார்த்தமான உண்மை. விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் விடுதலை இயக்கங்கள் அதிகமாக சோசலிசத்தையும் அதன் பின்புல ஆதரவையும் வெளிப்படையாக நாடி நின்றமை அதே போன்ற தோற்றப்பாட்டை விடுதலைப்புலிகள் மீதும் ஏற்படுத்தியிருந்தமை தவிர்க்க முடியாத களச்சூழலாக அமைந்தது.
சரி உண்மைதான் என்ன? மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள் தான் என்ன? விடைகளைத்தாங்கி வந்தது. 1986 நவம்பர் வெளிவந்த விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப்புலிகள். அதில் பின்வருமாறு அமைந்தது ஆசிரியத் தலையங்கம்.
‘சனநாயகம் என்றால் என்ன? சோசலிசம் என்றால் என்ன? இந்த இரண்டு அரசியல் கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாணவையா? இக் கோட்பாடுகள் இரு முரண்பாடான அரசியல் அமைப்புக்களை குறித்து நிற்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் காண்பதுடன் எமது அரசியல் நிலைப்பாட்டையும் இங்கு எடுத்து விளக்க விரும்புகின்றோம்.”
இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திய விடுதலைப் புலிகளின் ஆசியத்தலையங்கம் சனநாயகம் குறித்தும் சோசலிசம் குறித்தும் தனது ஆழமான பார்வையை அடுத்து வைக்கிறது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்த காலத்தில் இப்பார்வை மிகமுக்கியமானது. அன்று இது பலருக்கும் புரியவில்லை என்பதே உண்மை, ஆனால் இன்றைய யதார்த்த புறநிலையில் விளங்கிக் கொள்வது சற்று இலகு. முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் வாசியுங்கள் புரியும்.
‘சனநாயகமும் சோசலிசமும் இரு முரண்பட்ட அரசியல் இலட்சியங்களை குறித்து நிற்பதாக பலர் கருதக்கூடும். இது தவறான கண்ணோட்டமாகும். மூல அர்த்தத்தில் இக்கோட்பாடுகள் முரண்பட்டவையல்ல. மாறாக இவை சமூக நீதியையும் தர்மத்தையும் தழுவிக் கொள்ளும் ஒரு அரசியல் சமுதாயத்தை குறிக்கின்றன.
இந்த சமுதாயத்தில் தமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு உண்டு என்பதை இக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.
அப்படியிருக்கும் பொழுது இந்த தவறான கண்ணோட்டம் எவ்விதம் தோற்றம் கொண்டது? இந்த அரசியல் கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக கொள்ளப்படுவது ஏன்?
மேற்கத்தைய முதலாளித்துவ உலகில் சனநாயகம் என்ற போர்வையில் ஒரு அரசியல் அமைப்பு நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதேவேளை கம்மியூனிச உலகில் சோசலிசம் என்ற கருத்துருவில் ஒரு அரசியல் முறை செயலாகிறது.
இவ்விதம் இந்த இரு உலகிலும் செயற்படுத்தப்பட்டு வரும் அரசியல் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்விரு கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்ற தவறான கண்ணோட்டம் எழுந்திருக்கலாம்.
இதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
கிரேக்க மொழியின் மூல அர்த்தத்தில் சனநாயகம் என்ற சொல் மக்கள் களத்திலிருந்து பிரவாகமெடுக்கும் அரச அதிகாரத்தை அதாவது மக்கள் ஆட்சியை குறிக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான நீண்ட அரசியல் வரலாற்றுப் பயணத்தில் இந்தக் கோட்பாடானது பல அர்த்த பரிணாமங்களை கொண்டதாக செழுமை பெற்றுள்ளது. இக் கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கத்தைய முதலாளிய சமூகங்களில் ஒரு திட்டவட்டமான அரசியல் ஆட்சி வடிவமும் உருவகம் கொண்டுள்ளது. இன்று சனநாயகம் என்ற சொல் பல்வேறு மனித சுதந்திரங்களையும் உரிமைகளையும் குறிப்பிடுகிறது.
சமுதாயத்தை நிர்மாணம் செய்யும் பெரும் பணியில் ஒவ்வொரு பிரசைக்கும் உரிமையும் பங்கும் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. சிந்தனைச் சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரம் வழிபாட்டுச் சுதந்திரம் இப்படியான பல்வேறு சுதந்திரங்கள் மக்களின் சனநாயக சுதந்திரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
தேர்தல் முறையும் தெரிவு செய்யும் முறையும் அரசியல் பன்மை முறையும் சனநாயகப் பண்புகளாகப் பேணப்படுகிறது. சுதந்திரம் சமத்துவம் தர்மம் ஆகிய உன்னத இலட்சியங்களை சனநாயகம் மேன்மைப்படுத்துவதோடு மக்களின் இறைமையில் மக்களின் தீர்ப்பில் மக்களால் மக்களுக்காக கட்டியெழுப்பப்படும் ஒரு அரச ஆட்சிமுறையை வலியுறுத்துகிறது.
இவ்வாறு சனநாயகத்தின் உச்ச பண்புகளை பட்டியலிட்ட அவர்கள் அதன் செயற்பாட்டு நிலையையும் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். கொள்கை அடிப்படையில் கோட்பாடு ரீதியில் கருத்துருவ அர்த்தத்தில் சனநாயகமானது ஒரு மகத்துவமான அரசியல் ஆட்சி வடிவத்தை இலட்சியமாக கொண்டிருக்கிறது என்பது உண்மை தான்.
ஆனால் நடைமுறை யதார்த்தமோ வேறு. மேற்கத்தைய முதலாளித்துவ சமுதாயங்களிலும் மற்றும் சில நாடுகளிலும் நிலவும் ஆட்சி அமைப்பு முறையில் சனநாயக தத்துவம் பேணப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நாடுகளின் அரசியல் யாப்புகளில் மட்டும் சனநாயக இலட்சியங்கள் உரிமைகள் சுதந்திரங்கள் எல்லாம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் சனநாயகத்தின் பேரால் நடைபெறும் ஆட்சியோ வேறு. மனிதாபிமானற்ற சுரண்டல் முறையும் சமூக அநீதிகள் நிறைந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுடைய ஒடுக்கு முறையுமே இந்த ஆட்சி அமைப்பில் காணக்கூடியதாக இருக்கிறது.
அரசியல் சுதந்திரம் என்றும் தனி மனித உரிமை என்றும் பல கட்சிப் போட்டி என்றும் நடைபெறும் இந்த சனநாயக சதுரங்க விளையாட்டில் ஆட்சிப்பீடம் எறுவதும் அதிகாரம் செலுத்துவதும் முதலாளி வர்க்கமே. காலத்திற்கு காலம் மக்கள் தேர்தல் என்று ஓட்டுப் பதிவெடுக்கும் செப்படி வித்தைகாட்டி பணம் படைத்த வர்க்கமே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்கிறது.
இன்று உலகப்பொருளாதார மயமாக்கம் என்ற போர்வையில் மேற்கண்ட நிலை மேற்கத்தைய உலகில் வியாபித்து நிற்பதவன் விளைவே இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான வெளியேற்றமும் டொனால்ட் ரம்ப் பேணி சான்டர்ஸ் பின்னால் அமெரிக்காவில் அணிதிரளும் மக்கள் கூட்டமும் என்றால் யார் மறுப்பீர்கள். சனநாயகத்தில் களையப்படவேண்டிய குறைபாடுகள் என்பதை 30 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக அடையாளம் காட்டினர் புலிகள். அதாவது சனநாயகத்தை பணநாயகம் வெல்லும் என்பதை அன்றே அடித்துக் கூறினர்.
இன்று அமெரிக்க சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்றால் ஒரு பில்லியன் டொலர்கள் தேவை என்பதும் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து எழுந்த பெரும் கூக்குரல்களும் 78 சதவீத தி.மு.க வேட்பாளர்களும் 72 சதவீத அதிமுக வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் என்பதும் சொல்லும் கதையும் இதுதான். இத்துடன் அவர்கள் நின்றுவிடவில்லை. சோசலிசம் குறித்தும் தமது பார்வையை ஆழமாக பகிர்ந்து கொண்டனர்.
‘இன்றைய சோசலிச முகாம் நாடுகளில் சனநாயகம் பேணப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது. மாபெரும் யுகப் புரட்சிகளையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமுதாய மாற்ற பரிசோதனைகளையும் நடத்தி பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டிய இந்நாடுகளில் சனநாயகக் கோட்பாடுகளை முதலாளித்துவத்தின் சித்தாந்தக் குப்பைகள் என உதாசீனம் செய்யும் போக்கு காணப்படுகிறது.
இந்த நிராகரிப்பு காரணமாக சனநாயக சுதந்திரங்கள் இங்கு பேணப்படுவதில்லை. முதலாளிய சனநாயகத்திற்கும் உண்மையான சோசலிச சனநாயகத்திற்கும் மத்தியிலான வேறுபாடுகளை கண்டு கொள்ளாததால் எழுந்த தவறான பார்வையே இந்த நிலைப்பாட்டிற்கு காரணமாக இருக்கலாம்.
மார்க்சியமானது முதலாளிய சனநாயகத்தை கண்டிக்கிறது. சுரண்டல் முறை தாண்டவமாடும் முதலாளிய பொருள் உற்பத்தி சமூகங்களில் கடைப்பிடிக்கப்படும் போலி சனநாயகத்தை மார்க்சும் லெனினும் வன்மையாக விமர்சித்தனர். சமூக அநீதியை அடிப்படையாகக் கொண்ட முதலாளிய அமைப்பில் சனநாயகம் சாத்தியமாகாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்களே அன்றி சனநாயகத்தின் சாராம்சத்தை நிராகரிக்கவில்லை.
அதாவது மக்களாட்சியை மக்களே தமது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை அவர்கள் நிராகரிக்கவில்லை. இந்த உண்மையான சனநாயக இலட்சியம் சோசலிச சமுதாயத்தில் நடைமுறைப்படுத்த முடியும் எனக் கருதினர்.
ஆகவே மார்க்சியமானது முதலாளிய சனநாயகத்தை நிராகரிக்கும் அதேவேளை சோசலிச சனநாயக்தை வலியுறுத்துகிறது. அரசு என்ற எல்லாம் வல்ல சக்திக்கு மனிதன் அடிமையாகி அரச உடைமையாகி வெறும் உற்பத்தி இயந்திரமாக இயங்குவதென்பது சோசலிச இலட்சியத்திற்கு முரணானது.
சமூக உறவுகளை சிறப்பாக அமைத்து மனித சுதந்திரத்திற்கு உத்திரவாதமளித்து மனிதனின் அதியுன்னத வளர்ச்சிக்கு வழிகோலுவதுதான் சோசலிசத்தின் குறிக்கோள்.
மனிதாபிமானத்தையும் மனித விடுதலையையும் இலக்காக் கொண்ட சனநாயகப் பண்புகளால் சோசலிசம் செழுமைப்படுத்தப்பட வேண்டும். அல்லாவிடில் அரச பயங்கரவாதமும் சர்வாதிகாரமும் இயந்திரமயமான வாழ்வும் தழைத்தோங்க அது வழிகோலும்.”
சோசலிசம் என்றால் என்ன? அதன் நடைமுறைக் குறையாடுகள் என்ன என யாரும் அதைவிட சிறப்பாக விளக்க முடியாது. இக்குறைபாடுகளே சோசலிச நாடுகளை 90களில் இல்லா தொழித்து விட்டதை நாம் பார்த்தோம். இன்றும் சோசலிசம் என்று கூறிக்கொள்ளும் நாடுகளில் இக்குறைகள் வியாபித்து நிற்பதை நாம் வெளிப்படையாகப் பார்க்கலாம்.
அவ்வாறாயின் எது சிறந்த ஆட்சிமுறைமை என்ற உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. அதற்கும் அவர்களே விடுதலைப்புலிகளே பதில் தருகின்றார்கள்.
‘ஒரு புதுமையான புரட்சிகரமான சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே எமது விடுதலை இயக்கத்தின் இலட்சியம். நாம் நிர்மாணிக்கத் திட்டமிடும் சோசலிச சமூக வடிவமானது மக்களின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்வை மேம்படுத்துவதாக அமையும்.
சனநாயக சுதந்திரமும் சமூக தர்மமும் பேணப்படும் ஒரு உன்னத சமுதாயக்கட்டுமானமாக அது விளங்கும். வர்க்கம் சாதி என்ற சுரண்டல் முறைகள் ஒழிக்கப்பட்டு பெண் ஒடுக்குமுறை போன்ற சமூக அநீதிகள் அழிக்கப்பட்டு உழைக்கும் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக சோசலிச தமிழீழம் திகழும்.
மக்களின் அடிப்படை உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுவதோடு மக்களே தமது அரசியல் சமூக பொருளாதார வாழ்வை நிர்ணயிக்கக்கூடியதான ஒரு உண்மையான மக்கள் அரசை உருவாக்குவதே எமது இலட்சியம்.
நாம் நிர்மாணிக்க விரும்பும் புரட்சிகர சோசலிச வடிவமானது எவ்வித பாணியிலும் அமையாது. எமக்கே உரித்தான தனித்துவமான பண்புகளைக் கொண்டதாகவும் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவும் உருவாக்கப்படும்.
இப்படியான ஒரு புரட்சிகரமான மக்களாட்சியை கட்டி எழுப்புவதாயின் அது ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்தப் புரட்சிகர இயக்கத்தை மக்களே தெரிவு செய்யவேண்டும்.
இவ்வியக்கம் மக்கள் இயக்கமாக மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் இயக்கமாக மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக அமையும்போது தமிழீழத்தில் ஒரு புதுமையான சனநாயக சோசலிச அரசை கட்டியெழுப்ப முடியும்.
இவ்வாறு ஒரு உயரிய மக்களாட்சியின் வடிவத்தை விடுதலை முன்னெடுப்பில் அணிசேராக் கொள்கையை இந்தியாவின் பிராந்திய நலன்களை ஏற்று மதிக்கும் உயரிய பார்வையுடன் பயணித்த ஒரு உன்னத விடுதலை அமைப்பை அது பின்னர் தன் நிலங்களை கட்டுக்குள் கொண்டு வந்தபோது மேற்கண்ட உயரிய சிந்தனைகளுக்கு ஒரு நிழல் அரசினூடாக வடிவம் கொடுத்தமையும் அந்த அரசில் நள்ளிரவில் கூட ஒரு பெண் துணிவுடன் நடமாடும் காலம் கனிந்ததும் இன்று வெறும் கதைகளாகிப் போனமைக்கு தன்னை குருடாக வைத்து நகரும் இன்றைய உலகமே காரணம்.
இவ்வுலகம் தன் தவறுகளுக்கு இன்று விலை கொடுக்க முனைந்து நிற்கிறது. ஆனால் வரலாற்றுப் பாடமாக அது எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தவகையில் உலகளாவிய தமிழர்கள் ஒரு பெரும் வரலாற்றின் சொந்தக்காரர்கள் என்பதில் பெருமை கொள்ளலாம். அதை தந்தவர்கள் விடுதலைப்புலிகள்.
ஏகாதிபத்தியத்தின் பூகோளமயமாதல் சந்தைப் பொருளாதார போட்டியிலிருந்து வெளிப்படையாக யுத்த நிகழ்ச்சி நிரலை அறிமுகம் செய்த சம்பவமே யூகோஸ்லாவியாவில் அமெரிக்கப் படைகளும், அதன் மேற்கு நாடுகளின் சினேகிதப் படைகளும் இராணுவ ஆக்கிரமிப்பைச் செய்து சேர்பியாவை துண்டாடி கொசோவாவை உருவாக்கியதாகும். அதே வேளை ஏகாதிபத்திய பூகோளமயமாதல் தேசிய அரசு, தேசிய பொருளாதாரம், தேசிய விடுதலை போன்றவற்றுக்கு எதிரானது ஆகும்.
இந்த நிலையில் ஏகாதிபத்திய பூகோளமயமாதலை முன்னெடுக்கும் ‘சர்வதேச சமூகத்தை” இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவும்படி வேண்டுகோள் விடுப்பது எவ்வகையில் நியாயமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
பூகோளமயமாதல் என்றால் என்ன?
கொலனியாதிக்கம் தேசிய விடுதலைப் போராட்டங்களினாலும் தேசிய பொருளாதாரம் தேசியப் பண்பாடு போன்றவற்றினால் பின்னடைவை சந்தித்த பிறகு ஏகாதிபத்திய சர்வதேச மூலதனம் பல வகைகளில் தேசிய மூலதனத்துடன் முரண்பட்ட நிலைகளிலேயே செயற்பட்டு வந்தது. திறந்த தாராள பொருளாதார நடவடிக்கைகளின் ஊ}டாகத் தேசிய பொருளாதாரம் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டது. இவற்றுக்கு ஊடாக ஏகாதிபத்திய சர்வதேச மூலதனம் தன்னை தகவமைத்துக் கொண்டு மூலதனத்தினை உலகமயமாக்கும் அல்லது பூகோள மயமாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்வைத்துச் செயற் பட்டது. அது உலக வர்த்த நிறுவனத்தின் அறிக்கையாக 1995 இல் முன்வைக்கப் பட்டது.
அதன் படி தேசிய அரசுகளிடமிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு பன்னாட்டு மூலதனத்தை கொண்ட பன்னாட்டுக் கம்பனிகளிடம் செல்வதற்கும் அடிப்படை வகுக்கப்பட்டது. இதன் மூலம் கொனியதிக்கத்தின் நேரடியான பிடியிலிருந்து விலக்கப் பட்டிருந்த தேசியப் பொருளாதாரத்தையும் ஓரளவு சுயேச்சையாகச் செயற்பட முனைந்த தேசிய மூலதனத்தையும் மீண்டும் ஏகாதிபத்திய-சர்வதேச மூலதனத்தின் பிடிக்குள் கொண்டு செல்ல வழி வகுத்தது.
உலக மயமாதல் அல்லது பூகோள மயமாதல் பற்றிய சரியான புரிதல் மக்களிடம் சென்றடையாமல் குழப்பும் பிரசாரங்களைச் செய்வதிலும் ஏகாதிபத்திய சக்திகள் கவனமாக இருந்து வருகின்றன. அதனாற், பூகோள மயமாதல் என்றால் என்ன என்ற கேள்விக்கு கண்பார்வை இல்லாதவர் யானையை பார்த்த கதையை ஞபாகப் படுத்தும் விதத்திலேயே பலர் பதிலளித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வியாக்கியானம் செய்து வருகின்றனர். இதனால் இளந் தலைமுறையினர் அதிகமாகவே குழப்பப் பட்டுள்ளனர். அவர்கள் பூகோளமயமாதல் மனித சமூகத்திற்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளதாக நம்புகின்றனர். இதனால் விஞ்ஞானம், தொழில் நுட்பம், குறிப்பாகத் தகவல் தொழில் நுட்பம் எட்ட முடியாத வறிய நாடுகளையும் எட்டி உள்ளதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப நிபுணத்துவம் வளர்ச்சி அடையவும் பூகோள மயம் காரணம் என்கின்றனர். இவ் வாதங்கள் கொலனித்துவம் எமது நாடுகளை ஆக்கிரமிக்காதிருந்தால், பாதைகள், புகையிரதப் பாதைகள் போன்றவற்றை நாம் கண்டே இருக்க மாட்டோம் என்றும் நாம் இந் நூற்றாண்டில் வாழும் தகுதியை பெற்றிருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்க மாட்டாது என்ற வாதத்தையே நினைவூட்டுகிறது.
கொலனி ஆதிக்கம் அன்று எவ்வாறு சர்வதேச மூலதனத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்ததோ அது போன்றே 1990களிலிருந்து சர்வதேச மூலதனத்தின் இன்னொரு நிகழ்ச்சி நிரலாக பூகோள மயமாதல் முன்னெடுக்கப் படுகிறது. அதாவது அது சர்வதேச மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பொருளாதார வலைப் பின்னலாகும்.
பொருளுட்பத்தியின் சாதனங்களைத் தொடர்ந்தும் மூலதனத்திற்கு அடிமைப் படுத்தப் பட்டிருக்கும் உற்பத்தி முறையில் எவ்வித மாற்றத்தையும் பூகோள மயம் செய்யவில்லை. உற்பத்தி சாதனங்கள் மூலதனங்களால் மேலும் அடிமைப் படுத்தப் பட்டுள்ளன.
சர்வதேச மூலதனத்தின் உற்பத்திப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சந்தை தேடும் போட்டியே பூகோள மயமாதலாகும். அதில் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் நிலை நிறுத்தப் படுகிறது. இதனை முன்னெடுக்கும் தலைமை சக்தியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் விளங்குகிறது. அதனுடைய இராணுவ, மூலதன ஆதிக்கம் அதனை சாத்தியமாக்கி உள்ளது. பூகோள மயத்திற்கு தனியொரு நாட்டின் மேலாதிக்கம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் ஏகாதிபத்திய மேலாதிக்க அரசியல் வலைப் பின்னலின்றி அதைச் செயற் படுத்த முடியாது. அது ஒரே வடிவத்தில் இருக்காமல் காலத்திற்கு காலம் மாறுபடலாம். தற்போது அமெரிக்காவை தலைமையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என்பவற்றை அணியாகக் கொண்ட ரஸ்யா, சீனா இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளையும் பக்க பலமாகவும் கொண்டு முன்னெடுக்கப் படுகிறது. இந்த ஓட்டத்தில் முன்னாள் ‘ஆசியாவின் பொருளாதாரப் புலிகள்” என்று வர்ணிக்கப்பட்ட தென் கொரியா, தாய்வான், ஹொங் கொங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் உள்வாங்கிக் கொண்டு இயங்குகிறது.
சோசலிஸ நாடுகளின் தோற்றமும் வளர்ச்சியும், கொலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகளின் வளர்ச்சியும் ஏகாதிபத்தியத்தை சர்வதேச மூலதனத்தை ஆட்டங் காண வைத்தது. அதிலிருந்து மீள்வதற்கான சர்வதேச மூலதனம் சோசலிஸ நாடுகளைச் சிதைப்பதற்குத் திட்டமிட்டுச் செயற்பட்டது. அது சாத்தியமான நிலையிலேயே பூகோள மயமாதல் சர்வதேச நிகழ்ச்சி நிரலானது.
அரசியல் ஆள்புல எல்லை அற்றுச் சர்வதேச மூலதனம் செயற்படலாயிற்று. கொலனி ஆதிக்கத்தின் தோல்வியுடன் வளர்ச்சி அடைந்த தேசிய அரசுகள் பலம் இழந்தன. பொருளாதாரக் கட்டுப்பாடு தேசிய அரசுகளிலிருந்து பன்னாட்டுக் கம்பெனிகளிடம் சென்றது. அரசாங்கத்திடம் இருந்தும் அமைச்சரவையிடம் இருந்தும் பொருளாதாரம் கம்பெனிகளின் இயக்குநர் சபை அறைகளுக்கு மாறியது. அதாவது கம்பெனிகளின் உலகளாவிய அதிகாரம் நிலைநாட்டப் பட்டது. வா~pங்டனிலுள்ள கொள்கைகளுக்கான கற்கை நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி உலகத்தின் நூறு முக்கிய பொருளாதாரங்களில் 51 கம்பெனிகளினதாகவே இருந்தன. அதற்கு முதல், நூறு பொருளாதாரங்களும் தேச அரச கட்டுப்பாட்டிலே இருந்தன. தற்போது டென்மார்க்கின் பொருளாதார பலத்தை விட அதிக பலம் ஜெனரல் மோட்டாஸ் கோப்பரேசனிடம் இருக்கிறது. ஐ.பி.எம்யின் பொருளாதாரம் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை விடப் பெரியது. சோனி கம்பெனியின் பொருளாதாரம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விடப் பெரியதாகும்.
இலங்கையின் பல பொருளாதாரங்களின் ஏகபோகம் பன்னாட்டு கம்பெனிகளிடம் சென்றுள்ளன. அரசிடமிருந்து பெற்றோலியம் இந்தியன் ஒயில் கம்பெனிக்கு தாரை வார்க்கப் பட்டுள்ளது. இலங்கை தகவல் தொடர்பு தொலைபேசி சேவையில் மலேசிய கம்பெனி ஆதிக்கம் செலுத்துகிறது. டயலொக், கொக்கா கோலா, பெப்சி போன்றனவும் செல்வாக்குச் செலுத்துகின்றன. மருத்துவ உபகரணங்களை வழங்குதலில் அமெரிக்க கம்பெனியொன்று ஏகபோகம் செலுத்துகிறது. இவ்வாறு அரசிடமிருந்து கோதுமை மா வர்த்தகத்தில் பிரிமா கம்பெனி ஏகபோகம் செலுத்துகிறது. இதே போன்று சமையல் எரிவாயு n~ல் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு உள்ளும் சீமெந்து மிற்ஸ_யி கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு உள்ளும் சென்றுள்ளன. அரசுரிமையில் இருந்த பல முக்கிய கைத்தொழில்களும் பன்னாட்டு கம்பெனிகளிடம் சென்று விட்டன. இவ்வாறு முன்பு பிரிட்டிஸ்; கம்பெனிகள் என்று வெளியேற்றப் பட்ட சர்வதேச மூலதன ஆதிக்கம் இப்போது பன்னாட்டுக் கம்பெனிகளினூடாக மீண்டும் வரவேற்கப் பட்டுள்ளன.
ஒருங்கிணைக்கப் பட்ட உலகச் சந்தை என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத நியதி என்று மாக்சிய மூலவர் கார்ல் மார்க்ஸ் கூறியமையை நினைவு கூரத் தக்கதாகும் கொலனித்துவம், நவ கொலனித்துவம், நவ தாராளவாதம், பூகோளமயமாதல் போன்றவற்றில் எல்லை கடந்த பொருளாதார இயக்கத்தையும் சந்தையையும் அவதானிக்க முடிகிறது.
பூகோள மயமாதல் என்பது எல்லை கடந்த பன்னாட்டு மூலதனத்தை கொண்ட சர்வதேச மூலதனத்தைப் பலமான கம்பெனி நிதி நிறுவனங்கள் தனிப்பட்ட செல்வந்தர்களை உலகளாவிய ரீதியில் தேசிய அரச கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வலுப் படுத்தும் பொருளாதார வலைப் பின்னலாகும். சர்வதேச மூலதனத்தில் இருந்த மேற்கு-கிழக்கு, வடக்கு-தெற்கு என்ற முரண்பாடுகள் குறைக்கப் பட்டுள்ளன. இன்று கிழக்கும் தெற்கும், வடக்கு-மேற்கு மூலதனத்தால் உள்வாங்கப் பட்டுள்ளன. மக்களைப் பொறுத்தவரையில் பூகோள சந்தையில் நுகர்வோர்களாக மாட்டப் பட்டுள்ளனர். மாற்றமடைந்த நுகர்வோர் பண்பாட்டுடன் பொது நோக்கினின்று விலகிய பழைய தனிநபர் வாதம், தப்பிப் பிழைக்கும் வாதம் போன்றன உள்வாங்கியதாகவே பூகோள மயமாக்கப்பட்ட மூலதனம் இயங்குகிறது. பூகோள சந்தையில் அதிகமாக நுகர்வோராக வளர்ச்சி அடையாத நாடுகளின் மக்களும் நுகர்வோராக இணைக்கப் பட்டுள்ளனர். உதாரணமாக இந்தியாவிலுள்ள 200 மில்லியன் மத்தியதர வர்க்கத்தினரும் சீனாவில் அதிக பெரும்பான்மையான மத்தியதர வகுப்பினரும் பூகோள சந்தையின் பங்கு தாரர்களாக, நுகர்வோராக மாற்றப் பட்டுள்ளனர்.
இந்த மத்தியதர வர்க்கத்தினர் பூகோள மயமாக்கலின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவும் வகுப்பினராக – அதற்காக உழைப்பவர்களாகவும் – மாற்றப் பட்டுள்ளனர். ‘வளர்ச்சி அடையாமை” என்பதைத் தந்த கொலனியாதிக்கம் நவ தாராளவாதம் போன்றவற்றைத் தேசிய அரசுகள் மீது சுமத்தின. அந் நிலையில் ஏற்படும் மாற்றங்கள், நகர்வுகள் பூகோள மயமாதலால் ஏற்பட்டுள்ளன. அவை வர்க்கங்களின் ஒன்றினைவுகள், ஆதிக்க உறவுகள் சமூக சமத்துவமின்மை போன்றவற்றை உதாசீனம் செய்கின்றன.
மூலதனம் பற்றிய வரலாற்று அவதானிப்புகள்
கைத்தொழிற் புரட்சியுடன் 1500-1800 கால கட்டத்தில் வியாபார மூலதனம் ஆதிக்கத்தை பெற்றது. இது அத்திலாந்திக் பகுதியை மையமாகக் கொண்டு செயற் பட்டது. அதிலிருந்து அம் மூலதன ஆதிக்கம் விரிவடைய அந் நிலைமை மாறியது.
இது பின்னர் மூலதனம் ஓர் ஒழுங்கைமைப்புக்குள் வருகிறது. அக் காலகட்டம் 1800-1945 ஆகும். இது கைத்தொழில் மயமாக்கலால் ஏற்பட்ட விளைவாகும். ஜப்பானைத் தவிர ஆசிய நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் கிராமியத் தன்மை கொண்ட கைத் தொழில் இல்லாத உலகத் தொழிற் பிரிப்பில் விவசாயத் தொழிலில் ஈடுபடுவனவாகவும் மூலப் பொருட்களை விநியோகிப்பனவாகவுமே விடப்பட்டன. நவீனத்துவ சிந்தனையின் வளர்ச்சியுடன் இந்தக் கால கட்டத்தில் தேசிய விடுதலை அபிவிருத்தி என்பவற்றை கொண்ட தேசிய அரசுகள் கட்டமைக்கப் படலாயின. இக் கட்டம் சாஸ்திரிய மூலதன காலகட்டம் எனப்படுகிறது.
இதற்கு பிறகான காலகட்டம் 1945-1990 என அடையாளம் காணப்பட்டுப் யுத்த்திற்குப் பின்பான கால கட்டம் என அழைக்கப் படுகிறது. இக் காலகட்டத்தில் கைத்தொழில் ஒரு மையத்திலிருந்து விளிம்புகளுக்கு கொண்டு செல்லப் பட்டது. இதனால் ஆசிய, லத்தீன்
அமெரிக்க நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்றதுடன் தேசிய அரசுகள் தேசியப் பொருளாதார அடித் தளத்துடன் கட்டமைக்கப்பட்டன. இதனால் மூலதன மைய ஆதிக்கம் சிதைக்கப் பட்டது.
கொலனித்துவத்திற்கு மாற்றீடாக தேசிய முதலாளியம் தகவமைக்கப் பட்டது. இக் கால கட்டத்தில் ஒன்று கலந்த உலக உற்பத்தி முறை ஒன்றிணைந்த உலக உற்பத்தி முறையாக மாறியது.
இக் கால கட்டத்தில் சோசலிஸ நாடுகளினதும் கொலனியாதிக்கப் பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளினதும் தேசிய பொருளாதார கட்டமைப்பு வலுவடைந்தது. இதனாற் சர்வதேச மூலதன ஆதிக்கம் செயலிழந்தது. இதில் சோசலிஸ நாடுகளில் பல பரீட்சார்த்தங்கள் முன்னெடுக்கப் பட்டாலும் அப் பொருளியல் முறை உழைப்பிற்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதன் மூலம் உற்பத்தி சாதனங்களை விடுதலை செய்து சமத்துவமான உற்பத்தி உறவுகளை நிலை நாட்டவும் உற்பத்திகளை சமமாகப் பகிர்ந்தளித்து, வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளித்து, வருமான ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் சமூகத்தை கட்டும் அடிப்படையில் செயற் பட்டது. ஆனால் இதற்கு ஆரோக்கியமான பூகோள வலைப் பின்னல் இருக்கவில்லை. இதனைச் சர்வதேச மூலதனம் பயன் படுத்திக் கொண்டது. சோசலிஸ பொருளாதாரத்திற்கு சர்வதேச சவால்களை ஏற்படுத்தியது. இதன் உச்சக்கட்டத்தில் சோசலிஸ அரசுகள் வீழ்ந்தன. 1989இல் சோவியத் யூனியன் முற்றாகச் சிதைந்தது. இதற்குப் பிறகு ஏற்பட்ட நகர்வின் வளர்ச்சியுடன் 1995இல் ஏகோபித்த நிகழ்ச்சி நிரலுடன் பூகோள மயம் எழுந்தது. அதாவது மூலதனத்தை பூகோள மயமாக்கி உற்பத்தி முறையிலும் விநியோகித்தலும் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தது. இந்த நிலையில் தேசிய அரசை மையமாகக் கொண்ட சமூகக் கட்டுப்பாட்டைக் கொண்ட உற்பத்தி முறை பலவீனப் படுத்தப் பட்டது. கைத் தொழில் நாடுகள் கைத் தொழில் இல்லாத நாடுகள் என்ற வித்தியாசம் மூலதனச் செயற்பாட்டிற்கும் மாற்றப்பட்டது. அதன் செயற்பாடு பரவலானது.
இதனால் தேசிய அரசு எல்லை பலவீனம் அடைந்ததுடன், அபிவிருத்திகளையும், முன்னேற்றங்களையும் பரவலாக்கி இருப்பதாகப் பிரசாரம் செய்யப் படுகிறது.
நாடுகளின் பஞ்சநிலை
1961க்கும் 1973க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் 6.1 சதவீதமாக இருந்தது 1973 முதல் 1990 வரை 2.8 சதவீதமாக இருந்தது 1990களுக்குப் பிறகு 1.1 சதவீதமாக அல்லது அதிலுங் குறைவடைந்து வருகிறது.
1961-1973 காலகட்டத்தில் வளர்முக நாடுகளின் தலா வருமான வளர்ச்சி 3.3 சதவீதமாக இருந்தது. 1990 களுக்குப் பிறகு 0.1 சதவீதமாகக் குறைந்தது.
பண வீக்கம் மிகவும் அதிகரித்துக் காணப் படுகிறது. இலங்கையில் உண்மையான பண வீக்கம் 24 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் 6 சதவீதமாக அறிக்கை செய்யப் பட்டுள்ள போதும், இது உண்மையான பணவீக்கமல்ல. மறைமுக பணவீக்கத்தை மதிப்பிட்டால் அதுவும் உயர்ந்தே இருக்கும்.
இலவசமாக இருந்த கல்வி, சுகாதாரம் என்பன பறிக்கப் பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளாக இருந்த போக்கு வரத்துப் போன்றன மாற்றப் பட்டன. மானிய அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலை பரிபாலனம் செய்யப்பட்ட முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. வருமான மதிப்பீட்டுக் கோட்டின் இடைவெளி அதிகரித்துள்ளது. அதாவது அதிக கூடிய பட்ச வருமானத்திற்கும் குறைந்த பட்ச வருமானத்திற்கு மிடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.
இவை பூகோளமயமாதல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட விளைவுகளாகும்.
உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி உயிர் வாழும் உரிமை போன்றன இல்லாத நிலைமையே வறுமைக் கோட்டிற்கு கீழான நிலைமை எனப்படும். இலங்கையில் மாதாந்தம் ரூ. 4000விற்குங் குறைவான வருமானம் பெறுபவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாக இலங்கை மத்திய வங்கி வரைவிலக்கணம் செய்துள்ளது. அவ்வாறான குடும்பங்கள் இலங்கையில் வாழும் குடும்பங்களின் 23 சதவீதமாக இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் 4 அங்கத்தினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு உயிர் வாழ்வதற்கே மாதாதந்தம் 25 ஆயிரம் ரூபாவாவது தேவை என்ற நிலைமை இருக்கிறது. பூகோள மயமாதலினால் இலங்கை நன்மை அடைந்திருந்தால் இந் நிலைமை மாறி இருக்க வேண்டும். மின்சாரம், நீர், தொலைபேசி போன்றவற்றிக்கு ஒரு குடும்பம் ஆகக் குறைந்தது மாதாந்தம் 5 தொடக்கம் 7 ஆயிரம் செலவழிக்க வேண்டி இருக்கிறது.
பூகோளமயமாதலின் கீழும் 70 சதவீதமான வளங்களை 30 சதவீதமானவர்கள் அனுபவிக்கன்றனர். உலக சனத் தொகையில் 70 சதவீதமானவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு குடிப்பதற்கான சுத்தமான நீரே கிடைப்பதில்லை.
ஒரு சிறு எண்ணிக்கையினரின் ஆடம்பரங்களுக்காக பெரும் எண்ணிக்கையானவர்களை மேலும் வறுமைக்கும் பொருளாதார கடன் சுமைகளுக்கும் தள்ளுவதை அடிப்படையாகக் கொண்ட நிலைமையிலேயே பூகோளமயமாதல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப் படுகிறது.
சர்வதேச மூலதனம் செயற் படுவது போன்று தேசிய மூலதனம் செயற்பட முடியாது. உழைப்பு உலக மயமாக்கப் படவில்லை. உழைப்பிற்கு ஒப்பீட்டுரீதியாக விடுதலை கிடைக்கவில்லை. நுகர்வுச் சந்தைக்குள் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளனரே அன்றி அபிவிருத்தி அடையவில்லை.
சர்வதேச மூலதனத்திற்கு பதீலிடாகத் தேசிய மூலதனம் வைக்கப் பட்டதிலிருந்து மூலதன ஆதிக்கம் பலவீனமடைவதற்குப் பதிலாக மீண்டும் சர்வதேச மூலதனம் தகவமைத்துக் கொண்டது. அதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களினூடாக முன்னெடுக்கப் பட்ட வேலைத் திட்டங்களினால் தேசியப் பொருளாதாரம் சிதைக்கப் பட்டது. தேசிய அரசக் கட்டமைப்பு, இறைமை, சுயாதிபத்தியம், சுதந்திரம் போன்ற கருத்தியல்களும் பலவீனப் படுத்தப்பட்டன.
தேசிய அரசுகளுக்கு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்த அதன் எல்லைகளிலும், எல்லைக்கு உள்ளும் முரண்பாடுகள் ஏற்படுத்தப் பட்டன. இருந்த முரண்பாடுகள் கூர்மைப் படுத்தப் பட்டன. அவை ஆயுத முரண்பாடுகள் ஆக்கப் பட்டன. (இலங்கையில் இன முரண்பாடு ஆயுத நடவடிக்கைக்குள் தள்ளப் பட்டு பொருளாதாரம் சிதைக்கப் பட்டது. யுத்த நடவடிக்கைகள் அதிகரிக்க பூகோளமயமாதலின் பொருளாதார நிகழ்ச்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப் பட்டன.
ஆயுத முரண்பாடுகளின் ஊடாகப் பூகோளமயமாதல் யுத்தங்களை ஏற்படுத்தவும், நீடிக்கவும் வகை செய்தது.
யுத்தங்கள்
1995இல் உலக வர்த்தக நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பூகோள மயமாதல் நிகழ்ச்சி நிரல் ஏற்படுத்திய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று வழிகளைத் தேடிக் கிளர்ந்து எழுந்தனர். நாடுகளுக்குள்ளும், எல்லை கடந்தும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன் வளர்ச்சியாக பூகோளமயமாதலுக்கு பதிலாக இன்னொரு உலகம் சாத்தியம் என்ற அடிப்படையில் மில்லியன் கணக்கான உலக மக்கள் 1999 நவம்பரில் அமெரிக்காவிலுள்ள சியாட்டிலில் ஒன்று கூடிக் கிளர்ச்சியில் ஈடு பட்டனர். இது பூகோள மயமாதலுக்குப் பெரும் சவாலானது.
இரண்டு மாதங்களின் பின்னர் யூகோஸ்லாவியாவில் நேட்டோ படைகள் குண்டு வீசின. அங்கு யுத்தம் வேகமாக முன்னெடுக்கப் பட்டது. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு யூகோஸ்லாவியா பலமாகவும் சுதந்திரமாகவும் இருந்தது. இது அமெரிக்காவுக்கு ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது இன்னொரு ‘உலகம் சாத்தியம்” என்ற போராட்டத்திற்கு யூகோஸ்லாவியா தளமாகவும், பலமாகவும் இருந்து விடலாம் என்பதால்
அங்கிருந்த இன முரண்பாடு கூர்மைப் படுத்தப் பட்டு, அங்கிருந்த ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கும் இன ஒதுக்கல் நடவடிக்கைகளுக்கும் பதிலடி என்று கூறி நேட்டோ படைகள் ஆக்கிரமித்தன. அந்நாட்டைப் பிளவு படுத்தின. கோசோவாவை உருவாக்குவதாக இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன. கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக அன்றித், தேசியங்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே கொசோவோ மீது இராணுவ ஆக்கிரமிப்பு நடை பெற்றது.
இன்னும் கொசோவோ பிரச்சினை தீரவில்லை. அதனை உதாரணம் காட்டி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பூகோளமயமாதல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் ‘சர்வதேச சமூகத்தை” வரவழைப்பது எந்தளவிற்கு சரியானது?
தேசிய அரசு தேசிய பொருளாதாரம், தேசிய ஜனநாயகம், தேசியப் பண்பாடு என்பவற்றிற்கு எதிராகவே ஆயுத முரண்பாடுகளை ஊக்குவித்து யுத்தங்களை நடத்தும் பூகோள மயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை உறுதி செய்யப்பட மாட்டாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக தேசியம் என்ற கருத்தியல் பலமானது. இன மேலாதிக்கங்களைப் போதியளவு பயன்படுத்தும் அந்த ஏகாதிபத்தியத்திடம், சுயநிர்ணய உரிமைப் போராட்டம் நீதியைத் தேடமுடியுமா? சர்வதேச மூலதனமான ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் தேசிய விடுதலையைப் பெற முடியுமா? அதே போன்று ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டை கொண்ட போராட்டம் எதுவுமே தேசிய விடுதலைப் போராட்டமாகாது.
1991ஆம் ஆண்டு வளைகுடா யுத்தம் தொடக்கம் 1999 ஆப்கானிஸ்தானில் இராணுவ தலையீடு ஈராக்கில் இராணுவ தலையீடு எல்லாவற்றிலும் அமெரிக்காவின் மூலதன ஆதிக்கமும் சந்தையுமே அடிப்படை. குர்திய விடுதலைப் போராட்டம் உட்பட 710 காரணங்கள் இருப்பதாலேயே அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தது என்று கேலியாகச் சொல்லப் பட்டது. அந்த 710ஐத் தலைகீழாக (அதாவது oil) மாற்றிப் பார்க்கும் போது தெரியும் எண்ணெய் என்பதே சரியான காரணமாகும். தேசிய அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் போன்ற எரிபொருள் பொருளாதாரத்தை பன்நாட்டு கம்பெனி வியாபாரமாக்குவதும் அதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் இராணுவ ரீதியாக தகர்க்கும், யுத்த வக்கிரங்கள் பூகோளமயமாதலின் இன்னொரு நிகழ்ச்சியானது.
1989ஆம் ஆண்டு பேர்லின் சுவர் வீழ்ந்ததுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ‘சமாதான” இயக்கங்கள் நிசப்தமாயின. அதற்குப் பிறகு (பிழையான செயல்களைச் செய்யும் ‘பிழையானவர்களுக்கு எதிரான போர்” என்பது தாரக மந்திரமாகியது. இதனைக் கொண்டே, நட்சத்திரப் போர் என்ற அமெரிக்க யுத்த தந்திரோபாயம், ஐ.நா. சபைகளின் ஒப்புதலும் இல்லாமல் இறைமை கொண்ட சேர்பியாவில் இராணுவ ஆக்கிரமிப்பைச் செய்தது. (சேர்பிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான சரியான போரல்ல).
சமாதான இலாபப் பங்குகளுக்கான காலம் முடிவடைந்து விட்டது. ஆனால் நிரந்தர சமாதானம் என்பது எங்குமில்லை. ஐரோப்பாவில் எங்குமில்லை என்று நேட்டோ செயலாளர் 1999 டிசம்பரில் தெரிவித்தார். 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி உலக வர்த்த நிலையக் கோபுரங்கள் தாக்கப்பட்ட பிறகு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கை” என்ற தீர்மானத்தை அமெரிக்கா எடுத்தது. அதனை உலக நாடுகள் மீதும் திணித்தது.
தேசிய அரசுகள் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அதனால் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது ஜனநாயக விரோத மனித உரிமைகள் விரோத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வந்தன. அதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் போராட்டங்கள் எல்லாவற்றையும் பயங்கரவாத நடவடிக்கைகளாகக் கொண்டு அடக்குவதற்கு பயங்கர வாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கை நிகழ்ச்சி நிரல் தேசிய அரசுகளுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தன. அதனை பயன் படுத்தி சர்வதேச மூலதனத்தின் பூகோள மயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு தலைமையாக இருக்கும் அமெரிக்கா தேசிய அரசுகளை முற்றாக பூகோள மயமாதலுக்குள் தள்ளியது. அதற்கு இணங்கி செயற்படும் தேசிய அரசுகளுக்கு ஆதரவளித்து ‘சமாதான நடவடிக்கைகள் என்ற பேரிலும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற பேரிலும்” ஜனநாயக மனித உரிமைகளுக்கான போராட்டங்களையும் விடுதலைப் போராட்டங்களையும் ஒடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது. அதற்கு மனித உரிமைகள் மனிதாபிமானம் போன்றவற்றை துணைக்கு எடுத்துக் கொள்கிறது.
தேசிய அரசுகளை மடக்கவும் விடுதலைப் போராட்டங்களையும் ஒடுக்கவும் மனித உரிமை மீறல்கள் ஜனநாயக மீறல்களை வசதியாக அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகள் பயன் படுத்திக் கொள்கின்றன. தேசிய அரசுகள் ஏறக்குறைய முழுமையாகவே ஏகாதிபத்திய சக்திகள் நிறுவனங்கள் சில வேளைகளில் தனிப்பட்ட செல்வந்தர்களின் வாடிக்கையாளர்கள் ஆகி உள்ளன. இந்த நிலைமையில் பல புதிய வர்க்கங்கள் தோன்றி பூகோள மயமாதலை இயக்கும் ஏகாதிபத்திய சக்திகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அணி சேர்ந்துள்ளன.
அதிகாரத்துவ முதலாளித்துவ வர்க்கங்கள், அதிகாரத்துவ தனியார் முதலாளித்துவ சக்திகள் தேசிய சர்வதேசிய தன்னார்வ உதிரிகள், எல்லைகளற்ற ரீதியில் செயற்படும் புலமை சார்ந்தவர்கள், வர்த்தகமாகியுள்ள பொழுது போக்குத் துறைகளிலும் கலை இலக்கியத் துறையிலும் ஈடுபட்டு உள்ளவர்கள், நீதி, சட்ட முறைமைகளுக்கு அப்பாற் செயற்படும் மாஃபியாக்கள், புலம் பெயர்ந்தவர்களில் ஏற்றத் தாழ்வான வர்க்கங்கள் போன்றவர்களும் குறிப்பிடக் கூடிய வர்க்கங்களாகும். சர்வதேச ரீதியாக இயங்கும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் போன்று எல்லா உறவுகளையும் சர்வதேச மூலதனம் உருவாக்கி உள்ளது.
இந்தப் பின்புலத்தில் உலக நாடுகளில் மேலாதிக்கங்களுக்கும் சமூக நீதிக்காகவும் போராடுகின்ற எல்லாச் சக்திகளையும் ஒடுக்குவதற்கு பூகோள மயமாதல் நிகழ்ச்சி நிரல் அடக்குமுறைத் தேசிய அரசுகளுக்கு கை கொடுப்பதாக இருக்கிறது. நேபாள மாவோயிஸ்ட்டுகள், இலங்கையில் தமிழர் விடுதலை போராட்டம், ஐரிஸ் போராட்டம் போன்றவற்றுக்கும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் போன்றவற்றிற்கும் ஏற்பட்டுள்ள பாதகமான சர்வதேச நிர்ப்பந்தங்களை அவதானிக்காது இருக்க முடியாது. அதே வேளை தேசிய அரசுகளின் அரசாங்க ஆளும் சக்திகளின் மீதும் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவினதும் பிரிட்டனினதும்; ஐப்பானினதும் இராணுவ நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு 1990களுக்கு பிறகு பல மடங்காக அதிகரித்து உள்ளது. நோட்டோவிற்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப் பட்டுள்ளது. இராணுவ ஒத்துழைப்பு என்ற ரீதியில் சர்வதேச ரீதியாக பிராந்திய ரீதியாக முன்னெடுக்கப் படும் நடவடிக்கைகளும் உடன்படிக்கைகளும் அணு ஆயுதப் பரிகரணம் என்ற பேரில் இந்தியா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் மீது நிலைநாட்டப் படும் மேலாதிக்கமும் புதிய சர்வதேச இராணுவ பாதுகாப்பு ஒழுங்கை நிலைநாட்டுவனவாக இருக்கின்றன.
இவற்றின் விளைவாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், இலங்கை, இந்தியா போன்ற
நாடுகளில் இராணுவத் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும், நாளாந்த நிகழ்வுகளாகி உள்ளன, சூடான், கொலம்பியா, எத்தியோப்பியா, உகண்டா, கொங்கோ போன்ற நாடுகளில் யுத்தமும், வறுமையும் மிகவும் உக்கிரமாக இருக்கின்றன.
இதனால் வறுமையின் கொடுமையும் யுத்த வக்கிரமும் தான் ஏகாதிபத்திய பூகோள மயமாதலின் இரண்டு பக்கங்களாக இருந்து அதனை செயற் படுத்துகின்றன. இது தவிர்க்க முடியாத உலக ஒழுங்காக நிலைநிறுத்தப் படுகிறது.
இதற்கு மாறாக புதிய உலகம் இருக்கிறது. அதனை சர்வதேச மூலதன ஆதிக்கத்தால் உருவாக்க முடியும் என்பதற்கான விஞ்ஞான பூர்வமான முடிவுகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. சர்வதேச மூலதன ஆதிக்கத்தை தேசிய மூலத்தனத்தால் மாற்ற முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதனை முறியடித்து புதிய பொருளாதார ஒழுங்கை சோசலிஸத்தால் மட்டுமே முடியும்.
அந்த சோசலிஸமானது பூகோள ரீதியான வலைப் பின்னலைக் கொண்டதாக இருக்க வேண்டியதுடன் அதன் ஆதிக்கம் நிலை நாட்டப் பட வேண்டும். ஒரு ஒருங்கிணைப்பு அற்ற சோ~லிஸ தேசிய திட்டங்களால் அதனை நிலை நாட்ட முடியாது. சர்வதேச ரீதியாக உழைப்பு அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒருங்கிணைக்கப் பட வேண்டும். 1917-1989 வரையும் சோசலிஸத்தில் ஏற்பட்ட எதிர்மறையான விடயங்களைப் பாடங்களாகக் கொள்ள வேண்டும். குறுகிய தேசிய நிலைப்பாட்டை கொண்ட சோசலிஸ கட்டுமானங்களால் ஏகாதிபத்திய பூகோள மயமாதலைத் தோற்கடிக்க முடியாது. அதே வேளை ஏகாதிபத்திய பூகோள மயமாதலுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் சோசலிஸ கட்டுமான முயற்சிகளுடன் இருக்கும். கியூபா, வட கொரியா போன்ற தேசிய அரசுகளையும் ஈரான் போன்ற மத்திய ஆசிய அரசுகள் தென் ஆபிரிக்கா, சிம்பாவே, போன்ற ஆபிரிக் நாடுகளும், வெனசுவேலா, ஆர்ஜன்டீனா, பொலிவியா போன்ற நாட்டு அரசாங்கங்களையும் ஏகாதிபத்திய எதிர் நிலைப்பாட்டைக் கொண்ட சீனா, வியட்நாம் போன்ற அரசுகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பான லத்தீன் அமெரிக்காவினதும் ஆபிரிக்காவினதும் ஒத்துழைப்பையும் ஏகாதிபத்திய எதிர்ப்பை கொண்ட சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள், வர்க்க விடுதலைப் போராட்டங்கள், மாற்று அபிவிருத்தி, கலை-இலக்கிய சர்வதேச ஒத்துழைப்பு போன்றவற்றைச் சாதகமானவையாக கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஏகாதிபத்திய பூகோளமயமாதலுக்கு இருக்கும் அனைத்து எதிர்ப்பு நிலைப்பாடுகள், உடனடியான இடைக்கால ஏகாதிபத்திய பூகோளமயமாதலுக்கான மாற்று உலக ஒழுங்கு, நீண்டகால சர்வதேச பாட்டாளிவர்க்க அல்லது சர்வதேச சோசலிஸ ஒழுங்கு என மூன்று கட்டங்களாக ஏகாதிபத்திய பூகோளமயமாதலை வெற்றி கொள்வதற்கான கட்டங்களாகப் பார்க்கலாம். இவற்றை திட்டமிட்ட ரீதியான தேசிய பிராந்திய, சர்வதேச வலைப் பின்னல்களுடன் முன்னெடுக்க ஏகாதிபத்திய பூகோள மயமாதலின் ஏகபோகங்களை அறிந்து மாற்ற வேண்டும்.
ஐந்து ஏகபோகங்கள்
தொழில் நுட்ப வளர்ச்சி பரவலாக்கல் என்ற ரீதியில் உலகளாவிய ரீதியில் ஏகாதிபத்திய நாடுகள் செல்வந்த நாடுகள் பன்னாட்டு கம்பெனிகள் செலுத்தும் ஏகபோகத்தையும் மேலாதிக்கத்தையும் அபிவிருத்தியென கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்துச் செயற்பட வேண்டும். இதன் அர்த்தம் தொழில் நுட்ப வளர்ச்சியை நிராகரிப்பதல்ல. அதன் மீதான மேலாதிக்கத்தை நிராகரிப்பதாகும்.
உலகளாவிய ரீதியிலான நிதிச் சந்தையின் நிதி மேலாதிக்கம். மிகை ஏற்றுமதியை கொண்டிருக்காத நாடுகளின் (ஜப்பானில் மிகை உற்பத்தி இருந்தும் நிதிச் சந்தைக் கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை) நாணயம் எல்லை கடந்த ரீதியில் செயற்பட முடியாது. யூரோவும், பவுணும் பெறுமதி கூடி இருப்பினும் அமெரிக்க டொலரே பூகோள மயப்பட்டதாக இருக்கிறது. அமெரிக்க கட்டுப்பாட்டில் இன்றைய ஐ.நா. சபை இருப்பது போன்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக நிறுவனம் போன்றன அதன் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும் இன்று அதிகமாக நிதிச் சந்தையை தீர்மானிக்கின்றன. நாடுகளின் அபிவிருத்திக்கான நிதியை கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் பெற்றுக் கொள்ள முடியாது.
விண்வெளி ஆய்வு அணுவாயுத ஆய்வு போன்றவற்றிலும் பூமிக்கு வெளியிலான வளங்களை ஆக்கிரமிப்பதிலும் அவற்றை சுரண்டுவதிலும் ஏகாதிபத்தியம் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. இதிலும் சர்வதேச மூலதனத்தை ஆளும் சக்திகளே ஏகபோகம் கொண்டுள்ளன.
ஊடக தகவல் தொடர்பு ஏகபோகமானது ஜனநாயகத்தை அழித்து அரசியலில் பல விடயங்களை போலியாகத் தோற்றுவிக்கிறது. பி.பி.ஸி., சி.என்.என்., ரொய்ட்டர்ஸ் போன்றனவே இன்று அபிப்பராயங்களை உருவாக்கி ஆதிக்கம் செலுத்துகின்றன. பொய்களை உண்மையாகக் காட்டுகின்றன.
மனித குலத்திற்கு அழிவான ஆயுதங்களிலும் இராணுவ விவகாரங்களிலும் அமெரிக்காவே ஏகபோகத்தை கொண்டுள்ளது. இது சர்வதேச ஜனநாயக பிரமானங்கள் அழிக்கப்பட்ட நிலையிலேயே சாத்தியமாகியுள்ளது. இதனால் சர்வதேச மூலதனத்திற்கு தலைமை சக்தியாக அமெரிக்கா செயற்படுவதை சாத்தியமாக்கியுள்ளது.
இந்த ஐந்து விதமான ஏகபோகங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பாரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய அரசுகள் தேசிய பொருளாதாரம் ஒப்பீட்டுரீதியில் கூட சுதந்திரமாக செயற்பட முடியாத நிலையை தோற்றுவித்து உள்ளது. நாடுகளுக்கு இடையேயும் நாட்டு மக்களிடையேயும் வளர்ச்சியில் இடைவெளிகள் அதிகரித்து உள்ளன.
பின் நவீனத்துவமும் என். ஜி. ஓக்களும்
நவீனத்துவ கருத்துக்களுடன் வளர்ச்சியடைந்த போக்குகள் தேசங்களின் விடுதலைக்கு
அடிகோலின. இதற்கு மாறாக பின் நவீனத்துவக் கருத்துக்கள் அதாவது முரண்பாடுகளை அடிப்படையானது பிரதானமானது உப முரண்பாடுகள் போன்று பிரித்தறிந்து அவற்றிடையே தொடர்பை ஏற்படுத்தி அடிப்படை பிரதான முரணப்பாட்டிற்கு எதிரான பெரிய அளவிலான மையத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதை நிராகரித்துக் கொள்வது. பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் தனித் தனியாகப் பிரித்து பிரதான முரண்பாட்டுடன் தொடர்பு படுத்தாது பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் அணுகும் பின்நவீனத்துவ கருத்துக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பேரண்ட செயற்பாட்டைத் தடுத்தன. சிற்றண்ட நடவடிக்கைகளை பேரண்ட மாற்றத்துக் கானவையாகவும் பேரண்ட மாற்றத்தை சிற்றண்ட மாற்றத்திற் கானவையாகவும் கொள்ளவில்லை. இவை போராட்டங்களை பிளவு படுத்தின. வர்க்கப் போராட்டமே விடுதலையின் அடிப்படை என்பதைத் திசை திருப்பின. இத்தகைய கருத்துக்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் பழைய இடதுசாரிகளாகவும் வெறுமனே மாக்சியத்தை முணுமுணுப்பவர்களாகவும் இருந்ததுடன் முதலாளித்துவத்திற்கும் சோசலிஸத்திற்கும் இடை நடுவில் ஒரு உலகத்தை காண வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்களாகவே இருந்தனர்.
இவர்களை உள்வாங்கியதாகவே தன்னார்வ அல்லது அரசசார்பற்ற (NGO) நிறுவனங்கள் இயங்கின இவை பெரும்பாலும் ஏகாதிபத்திய நிதியைக் கொண்டே இயங்குகின்றன. இவர்கள் பூகோள மயமாதலை எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு அதில் சீர்திருத்தங்களை கொண்ட ‘இன்னொரு சிறந்த உலகம் சாத்தியம்” என்ற அடிப்படையில் செயற் படுகின்றனர். அரசின் சமூக நலன்புரிக்கான கடமைகள் பொறுப்புகள் குறைக்கப்பட்டு இந்த தன்னார்வ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டன. இதன் நோக்கம் மக்களின் நலன்சார்ந்த அரச கட்டமைப்பை மாற்றுவதாகும். அது பெரும்பாலும் இன்று உலக நாடுகளில் சாத்தியமாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய அரசுகள் சிக்கல்களுக்கு உள்ளாகிப் பூகோள மயமாதல் நிகழ்ச்சி நிரலை ஏற்க நிற்பந்திக்கப் பட்டுள்ளன. பின்நவீனத்துவ கருத்துக்களும், என்.ஜி.ஓக்களும் ஏகாதிபத்திய பூகோள மயமாதலுக்கான கருத்தியல் அடித்தளத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக ஆகின. பூகோள மயமாதலுக்கு எதிராகக் கட்டப்பட்ட உலக சமூக மாற்றம் (World Social Forum)தோல்வி கண்டமைக்கு என்.ஜீ.ஓக்களின் பித்தலாட்டங்களும் காரணமாயின.
ஐ.நா. சபை
இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து உலக மீட்பதில் பாரிய பங்கை வகித்தது சோவியத் யூனியனாகும். 1917 ஒக்டோபர் புரட்சிக்கு மனித வாழ்க்கை முறைக்கு சோவியத் யூனியன் பல பண்பாடுகளை தந்தது. அவற்றில் தொழிலாளர் விவசாய வர்க்க விடுதலை உழைப்பின் தலைமையிலான உற்பத்தி முறையும் உறவுகளும் பால் சமத்துவம் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை போன்றன குறிப்பிடத் தக்கன.
ஐ.நா. சபை உருவாகவும், ஐ.நா. சபைகளின் சாசனம் உருவாகவும் சர்வதேச மனித உரிமைகள் சாசனம் உருவாகவும் சோவியத் யூனியன் நிறையவே பங்களித்;தது. சோவியத் யூனியனின் அரசியல் யாப்பிலுள்ள பல விடயங்கள், ஐ.நா. சாசனம், சர்வதேச மனித உரிமைகள் சாசனம், என்பவற்றில் உள்வாங்கப் பட்டன. அதில் நாடுகளின் சுதந்திரம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, பால் சமத்துவம் போன்றன குறிப்பிடத் தக்கன.
எனினும் நாளடைவில் ஐ.நா., குறிப்பாக 1980 களில், ஏகாதிபத்தியங்களின் கைகளுக்கு மாறியது. சர்வதேச மூலதனத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஐ.நா. பாரபட்சமாகச் செயற்பட லாயிற்று. மனித உரிமைகளை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அப்பட்டமாக மீறும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சுதந்திரமான நாடுகளில் தலையிடவும் விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாதமென ஒடுக்கவும் மனித உரிமைகள் மனிதாபிமானம் போன்றவற்றை சாதகமாக கொண்டு செயற்பட லாயிற்று. 1990களில் சோவியத் யூனியனின் சிதைவு அணிசேரா நாடுகளின் இயக்கத்தின் முக்கிய சக்தியாக விளங்கிய யூகோஸ்லாவியா மீதான ஆக்கிரமிப்பு என்பவற்றுக்குப் பின்னரும் எண்ணெய் வள நாடுகள் மீது இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான போர் முடுக்கப்பட்டு பலவீனப் படுத்தப் பட்ட பிறகு அமெரிக்காவே இன்றைய உலக ஒழுங்கின் ஆதிக்க சக்தியாய் இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம், ரஸ்யா, சீனா, ஜப்பான் போன்ற வல்லாதிக்க சக்திகள் இருந்தபோதும், அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முரண்பாடுகளை கொண்டதாக இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான பூகோள மயமாதலை எதிர்ப்பதாகவோ அதற்கு மாறான உலக ஒழுங்கை கட்டுவதாகவோ இல்லை.
ஐ.நாவிற்கு மேலாக உலக நாடுகளை ஆக்கிரமிக்கும், அடிமைப்படுத்துப் நியாயப்பாடுகளை அமெரிக்க கொண்டுள்ளது. இதனால் அமெரிக்காவை மையப் படுத்தியதாகவே இன்றைய பூகோள மயமாதல் இயக்கப்படுகிறது. சுனாமி போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் ஏற்படும் அழிவுகளில் கூட மேலாதிக்கம் நிலைநாட்டப் படுகிறது.
விடுதலைப் போராட்டங்கள்
1945 முதல் 1990கள் வரை இருந்த உலக ஒழுங்கு விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவே இருந்தன. அதற்கு காரணம் உலக சமநிலை இரண்டு சக்திகளினால் தீர்மானிக்கப் பட்டது. இடை நடுவே சில சக்திகளும் சம நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமையை கொண்டு இருந்தன.
இன்றைய உலக ஒழுங்கில் எல்லா விடுதலை இயக்கங்களும் பயங்கரவாத இயக்கங்கள் ஆக்கப் பட்டுள்ளன. விடுதலையை அடிப்படையாகக் கொண்;ட அரசுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரசுகளும் பயங்கரவாதமாகப் பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளன.
எதிர்ப்பு இயக்கங்களும் விடுதலைப் போராட்டங்களும் இச் சூழ்நிலையை நன்கு மதிப்பிட்டுப் பின் வாங்க வேண்டிய இடத்தில் பின் வாங்கிச் செயற்பட வேண்டி உள்ளது. பிரதான எதிரி அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதைக் கணிப்பிடாமல் ‘நடுநிலை நாடுகளை” எதிரிகளாக காணும் சித்தப் பிரமை விடுதலை இயக்கங்களுக்கும் எதிர்ப்பு இயக்கங்களுக்கும் இருக்கக் கூடாது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் இந்திய ஆளும் வர்க்கங்களினதும் (தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை) ஏகாதிபத்திய மேலாதிக்க அக்கறைகளை புரிந்து அவற்றிற்கு எதிராக வியூகம் வகுப்பது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தின் அடிப்படை ஆகிறது.
அதைவிடுத்து சீனப் பூச்சாண்டி, ரஸ்யப் பூச்சாண்டி காட்டி நிலைமைகளைத் திரிபு படுத்துவது உண்மையை மறைத்து மக்களை அடிமைப் படுத்தும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைப்பதாகும். அது ‘வட்டுக்கோட்டைக்குப் போக வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” என்று பதிலிறுத்ததைப் போன்றதாகும்.
இன்றைய சூழ்நிலையில் பூகோள மயமாதலுக்கு எதிரான சர்வதேச வலை பின்னலை கொண்டே விடுதலை இயக்கங்களும், எதிர்ப்பியக்கங்களும் இயங்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி உள்ளது முதலாளித்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டு எழுந்த போராட்டங்கள் முதலாளித்துவத்தை மாற்றுவதை அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் அவை முழுமையாகா.
புதிய பிரச்சினைகளும் சர்வதேச உழைக்கும் வர்க்கங்களும்
பூகோள மயமாதல் புதிய பல பிரச்சினைகளைத் தோற்றுவித்து உள்ளன. தேசிய மூலதனத்தை சர்வதேச மூலதனத்திடம் சரணடைய வைத்துள்ளது. இதனால் தேசிய அரசுகள் சிக்கல்களுக்கு ஆளாகி உள்ளன யுத்தங்களையும் வறுமையையும் வைத்துக் கொண்டு சர்வதேச மூலதனம் தற்காலிக வெற்றியை கண்டாலும் நீண்ட காலத்தில் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
பொருள் உற்பத்தியும் சேவையும் மனிதகுலம் இருக்கும் வரை தொடர்ந்து அவசியமாகிறது. அதில் உழைப்பின் முக்கியத்துவம் அற்றுப் போக முடியாது. மூலதனம் பூகோள மயமாகிய சூழலில் உழைப்பு பூகோள மயமாகாமல் உற்பத்தி முறை சுமுகமாகத் தொடர முடியாது.
சர்வதேசப் பொருளாதாரத்தின் தொழிற் சாலைகள், பண்ணைகள் காரியாலயங்கள் போன்றவற்றைச் சர்வதேச உழைக்கும் வர்க்கங்கள் நடத்துகின்றன. ஆனால் அவை உள்ளக ரீதியில் தேசியம், இனம், பால், சாதி போன்ற பலவாறு பிரிக்கப்பட்டுப் பலவீனமாக இருக்கின்றன. தேசிய அரசுகளின் நீடித்த இறுக்கமான இருப்பு உழைக்கும் வர்க்கங்களின் உணர்வையும் பட்டறிவையும் திரிபுபடுத்தி விட்டன. மாறாக பன்னாட்டு முதலாளி வர்க்கங்கள் அவற்றின் அக்கறைக்கான உணர்வை ஒருமைப்பாட்டை தொடர்ந்து பேணி வளர்த்து வந்துள்ளன. அவை பன்னாட்டு முதலாளித்துவ வர்க்க உணர்வை ஒருமைப்பாட்டுடன் வளர்த்து கொண்டிருக்கின்றன.
சர்வ தேச உழைக்கும் வர்க்கங்கள் உழைக்கும் வர்க்கங்களாக இருக்கின்ற போதும் அவை இன்னும் அவற்றுக்கான அக்கறைகளுக்கான வர்க்கமாக மாறவில்லை. அவ்வாறு மாற்றமடைந்து தேசிய சர்வதேச நிலைமைகளை கிட்டும் போது சர்வதே மூலதனத்தின் ஏகபோகம் தகர்க்கப் படும். ஏற்றத் தாழ்வு நீங்கி சமத்துவமான உற்பத்தி உறவுகள் ஏற்பட்டு உற்பத்தி சாதனங்கள் விடுதலை அடையும். மக்களுக்கான சமமான விநியோக வளப்பகிர்வு உறுதி செய்யப்பட்;டு மக்களுக்கு மேலாதிக்கங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
முடிவுரை
எனவே பூகோள மயமாதல் என்பது புரியாத புதிரல்ல. ஏகாதிபத்தியத்தின் சர்வதேச மூலதன ஆதிக்கத்தின் அடிப்படையான உற்பத்தி முறையினை கொண்ட பொருளாதார நிகழ்ச்சி நிரலே ஆகும். அதன் இரண்டு பக்கங்கள் யுத்த வக்கிரமும் வறுமையின் கொடுமையும் ஆகும். இது சோசலிஸத்தின் பிரச்சினைகளை தீர்க்காது. முதலாளித்துவத்தின் சர்ச்சைகளை அதிகரிக்கும் முறையாகும். இதற்கு தீர்வுகள் பூகோளமயமாதலில் இல்லை.
ஏகாதிபத்திய பூகோள மயமாதலுக்கு சோசலிஸத்தை அடிப்படையாகக் கொண்ட உழைப்பின் பூகோளமயமாலே மாற்றாகும். சோசலிஸத்தின் பிரச்சினைகளை சவால்களை சோசலிஸத்தின் உயர்ந்த (கம்யூனிஸம்) அணுகு முறைகளாலேயே தீர்க்கப்பட வேண்டும். ஆனால் முதலாளித்துவத்தின் சர்ச்சைகள் முதலாளித்துவத்தின் உயர்ந்த அணுகு முறைகளால் (ஏகாதிபத்தியச், பூகோள மயமாதலால்) தீர்க்க முடியாது.
அதனால் பூகோள மயமாதலினால் தேசிய அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த (கொஞ்சமாவது சமூக நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியிருந்தது) பொருளாதார இயக்கம் பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதனால் மக்களுக்காக நுகர்வன்றி, நுகர்வுக்காக மக்களும் என்ற சந்தைப்போட்டி நிலவுகிறது. இதனால் சாதாதரண மக்களுக்கும், வளர்முக நாடுகளுக்கும் வறுமையும் யுத்தமே மீதமாக்கப் பட்டுள்ளன.
இது மாறாத, மாற்றமுடியாத ஒழுங்கல்ல. இதனை தோற்கடித்து வென்றெடுப்பதற்கான பாதை சோசலிஸப் பாதையாகும். அதற்கான சோசலிஸ உலகம் ஒன்று இருக்கவே செய்கிறது.