ஏமனில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்: 67 பேர் பலி

387
ஏமன் நாட்டில் இன்று இரண்டு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 67 பேர் பலியாகியுள்ளனர்.

ஏமனில் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அரசு தலைமையகத்தை கைப்பற்றியதையடுத்து ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் முகமது பசிண்டாவா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் அகமது அவாத் பின் முபாரக்கையும் ஷியா கிளர்ச்சியாளர்கள் ஏற்க மறுத்து மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன் காரணமாக, புதிய பிரதமர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவர் ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் ஏமனில் மீண்டும் வன்முறை வெடித்தது. ஷியா ஹவுதி ஆதரவாளர்கள் இன்று தலைநகர் சனாவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் இன்று மிகப்பெரிய பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த தற்கொலைப்படை ஆசாமி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 4 குழந்தைகள் உள்பட 47 பேர் இறந்தனர். 75 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் தஹ்ரிர் சதுக்கத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

இதேபோல் அரேபிய தீபகற்பத்தின் அல்கொய்தா குழுவினர், ராணுவம் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தி வரும் கிழக்கு ஏமனிலும் இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. ராணுவ முகாம் மீது நடந்த இந்த தாக்குதலில் 20 வீரர்கள் இறந்ததாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE