ஏ.டி.எம் : தெரியும்.. ஆனா, தெரியாது

260

எப்படா பேங்க் திறக்கும் பணம் எடுக்கலாம் என காத்திருந்த காலங்கள் மலையேறிவிட்டன. பணம் எடுப்பதற்காக அரை நாள் ஆபீஸுக்கு லீவ் போட்டு வங்கியில் கியூ கட்டி நின்றதெல்லாம் நம் அப்பாக்களின் காலம். இப்போதைய ஏ.டி.எம் வசதி அதையெல்லாம் நிறுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

எப்போது வேண்டுமானாலும் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனும் வசதி ஏ.டி.எம் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் பெரிய அளவிலான பரிமாற்றம், அல்லது வேறு ஏதாவது தேவைகளுக்காக மட்டுமே வங்கிப் படி ஏறினால் போதும் என்பதே இன்றைய நிலமை.

பெரும்பாலான வங்கிப் பரிவர்த்தனைகள் இணையத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது. இப்போது அது அப்படியே மொபைலுக்கும் தாவியிருக்கிறது. இதனால் “விர்ச்சுவல் பேங்க்” எனும் கான்சப்ட் பரவலாகத் துவங்கியிருக்கிறது.

விர்ச்சுவல் வங்கியை “இருக்கும், ஆனால் இருக்காது” என்று சொல்லலாம். அதாவது ஒரு வங்கி இருக்கும் ஆனால் அதற்கென தனியே கட்டிடங்கள் ஏதும் இருக்காது. எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் இணையம் மூலமாகவோ, ஏ.டி.எம் மூலமாகவோ தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

சரி, நாம் ஏ.டி.எம் க்கு வருவோம். உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. நல்ல  குளு குளு ஏடிஎம் அறைகளுக்குள் நுழைந்து கார்ட் போடுகிறீர்கள். கடவுச் சொல் டைப் செய்கிறீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமென தட்டுகிறீர்கள். பணம் கொட்டுகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு சைலன்டாகப் போய் விடுகிறீர்கள் !

“எப்படித் தான் இந்த சாதனம் இயங்குகிறது? “ என எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா ? கொஞ்சம் சிம்பிளான வகையில் அதை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா ?

ஏ.டி.எம் என்பதன் விரிவாக்கம் “ஆட்டோமேட்டர் டெல்லர் மெஷின்” என்பது தான். அதை கனடாவில் ஏ.பி.எம் “ஆட்டோமேட்டட்  பேங்கிங் மெஷின்” என்கிறார்கள் கனடாவில். “எனி டைம் மணி” என்பதெல்லாம் ‘எப்பவும் பணம் கிடைக்கும்’ எனும் பொருளில் சும்மா சொல்வது ! மற்றபடி அதல்ல ஏடிஎம்மின் விரிவாக்கம்.

ஏடிஎம் போல ஒரு மெஷின் தயாரிக்க வேண்டும் என ஜப்பான், ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு முயன்றன. இருந்தாலும் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனது “லூத்தர் ஜார்ஜ் சிம்ஜியன்” என்பவர் தான். 1939 களுக்கு முன்பே அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கான காப்புரிமையை 1963ல் தான் பெற்றார் !

1939 ம் ஆண்டு நியூயார்க்கில் “சிட்டி பேங்க் ஆஃப் நியூயார்க்” ஒரு மெஷினை வைத்தது. அதை “பேங்கோகிராஃப்” என்று அழைத்தார்கள். நமது ஏ.டி.எம் களின் முன்னோடி என்று அதைச் சொல்லலாம். ஆனாலும் அதில் பணம் பட்டுவாடா செய்யும் வசதி இருக்கவில்லை. டெபாசிட் செய்யும் வசதி மட்டுமே இருந்தது. ஆனாலும் இதை மக்கள் விரும்பவில்லை. எனவே ஆறே மாதத்தில் மூட்டையில் கட்டி பரணில் போட்டார்கள்.

பணம் பட்டுவாடா செய்யும் மெஷின் தனது கணக்கைத் துவங்கியது 1966ம் ஆண்டு, டோக்கியோவில். அதற்கு அடுத்த வருஷம் அது ஸ்வீடனிலும் சுவடை எடுத்து வைத்தது !  1967ம் ஆண்டு இங்கிலாந்தில் இன்னொரு வகையான ஏடிஎம் மெஷினை உருவாக்கினார்கள். அப்போதைய ஏடிஎம் மெஷினுக்கும் இப்போதைய மெஷினுக்கும் ஏணி என்ன ? ராக்கெட் விட்டால் கூட எட்டாத அளவுக்கு இடைவெளி இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1972ம் ஆண்டு யூகேவில் அறிமுகமான ஏ.டி.எம் தான் இன்றைய நவீன ஏடிஎம் களின் ஒத்த ஸ்டைல் பணிகளைச் செய்தது எனலாம்.

உங்களுக்கு முன்னால் இருக்கும் ஏ.டி.எம் மெஷின் கணினியோ, ஒரு மாயாஜாலம் செய்யும் கருவியோ கிடையாது. வருகின்ற தகவல்கள் அடிப்படையில் பணிபுரிகின்ற ஒரு கருவி அவ்வளவு தான். அதற்கான தகவல்கள் தருகின்ற மென்பொருள் கட்டமைப்பை “சுவிட்ச்” என்பார்கள். இந்த சுவிட்ச் மென்பொருள் ஏதோ தொலை தூரத்தில் இருக்கும்.

இதை இரண்டு விதமாக கணினியுடன் இணைக்கலாம். ஒன்று லீஸ்ட் லைன் எனப்படுவது நேரடியாக ஏ.டி.எம்மையும் கணினியையும் இணைப்பது. நான்கு வயர்கள், அதற்கான தனியான போன்லைன், பாயின்ட் டு பாயின்ட் என இது இருக்கும். இன்னொரு வகை “டயல் அப்” கனெக்‌ஷன். இதில் உண்மையான நேரடிக் கம்பித் தொடர்பு இருக்காது. மோடம் வழியாக, பொதுவான போன் தொடர்பு மூலம் இணைப்பு உருவாக்கப்படும்.

தேவைக்கு ஏற்ப எது வேண்டுமோ அதைத் தெரிவு செய்து கொள்ளலாம்., முதலாவது வகை ரொம்பக் காஸ்ட்லி. ஆனால் வேகம் அதிகம், தொடர்ந்து அதிக திறனுடன் செயல்படும். இரண்டாவது ரொம்ப சீப். அதற்கேற்பவே பணிகளின் வேகமும் இருக்கும்.

உங்கள் ஏடிஎம் கார்டை கொஞ்சம் பாருங்கள். ஏதோ ஒரு பதினாறு இலக்க எண் இருக்கிறது என்று நினைப்பீர்கள். சில கார்ட்களில் அதிகமாகவே உண்டு இப்போது. ஆனால் அந்த எண்ணுக்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டு. உங்கள் கையிலிருக்கும் கார்ட் எந்த கார்ட் என்பதை முதல் எண் சொல்லிவிடும். 4ல் ஆரம்பித்தால் விசா கார்ட், 5ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்ட், 6ல் ஆரம்பித்தால் டிஸ்கவர் என ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு சேவை வழங்குபவரைக் குறிக்கும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் சேவை வழங்குபவர், வங்கி அடையாளம், அக்கவுண்ட் நம்பர், என எல்லாவற்றின் கலவையுமாகவே அந்த கார்ட் எண் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கார்டின் பின்னால் ஒரு கருப்பு பட்டை போல ஒரு பகுதி உண்டு. அந்தப் பகுதியைத் தான் ஏ.டி.எம்மில் உள்ள “கார்ட் ரீடர்” வாசிக்கும். அது தான் முதல் படி. வாசித்த தகவலை அது முதல் கட்ட பரிசோதனைக்கு அனுப்பும். அந்த முதல் கட்ட பரிசோதனைத் தகவல்கள் ரொம்பச் சின்னவை. ஆனால் அதை ஏ.டி.எம் ஃபைலே சரிபார்க்கும்.

கார்டைப் போட்டபிறகு நீங்கள் கடவுச் சொல் கொடுப்பீர்கள். “வெல்கம்” என அது அழைக்கும். பிறகு ஏதேனும் பரிமாற்றம் நடத்த நீங்கள் முயலும் போது தான் கார்ட் ரீடர் வாசித்த தகவல் உங்கள் வங்கிக்குப் போகும்.

ஏடிஎம் பின்னால் ரொம்பவே பாதுகாப்பாக பணத்தை அடுக்கி வைக்கும் அறைகள் இருக்கும். பணத்தை அதன் எடையை வைத்து தான் ஏடிஎம் எண்ணும். அப்போது நோட்டுகள் ஒட்டிவந்தால் கண்டுபிடித்துவிடும். அப்படியே தனியே வைக்கும். கூடவே ஒரு “எலக்ட்ரானிக் ஐ” எனும் சென்சாரும் உண்டு. அது பணப்பெட்டியிலிருந்து ஒரு நோட்டு வெளியே வந்தாலும் கணக்கப் பிள்ளை போல குறித்து வைத்துக் கொள்ளும். அந்தத் தகவல் பல ஆண்டுகள் சேமிக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டால் உங்களுக்குப் பணம் கிடைக்கிறது அல்லவா ? அதற்கு ஏ.டி.எம் நிறைய வேலைகளைச் செய்யும். முதலில் உங்களுடைய தகவலை சுவிட்ச்க்கு அனுப்பும். சுவிட்ச் அதைக் கொண்டு உங்களுடைய வங்கியைத் தேடும். பிறகு உங்கள் பைலைத் தேடும். வந்திருப்பது சரியான ஆள் தானா என்பதைப் பார்க்கும்.

கார்ட் சரியானது என்பதைச் சோதித்தபின். உங்கள் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதைப் பார்க்கும். அதைப் பார்த்தபின் உங்களுடைய “ஒரு நாள் லிமிட்” தொகையைத் தாண்டி விட்டீர்களா என்று பார்க்கும். எல்லாம் பார்த்து பணம் கொடுக்கலாம் என முடிவு செய்த பின் ஏ.டி.எம் க்கு ஒரு தகவலை அனுப்பும். “ஆள் சரியான பார்ட்டி தான், பணம் கொடுத்துவிடு” ! அப்போது தான் ஏ.டி.எம் தனது சுருக்குப் பையைத் திறந்து பணத்தைத் தரும்.

இந்த எல்லா வேலைகளையும் ஏடிஎம் சில வினாடிகளுக்குள் செய்து முடிக்கும். ஒரு நாலு வினாடி தாமதம் ஆனால் உள்ளே நிற்கும் நமக்கு எவ்வளவு டென்ஷனாகும் இல்லையா ?

சொல்ல மறந்துட்டேன். தகவல்களை ஏ.டி.எம் கணினிக்கு அனுப்பும் போது அப்படியே அனுப்பாது. அதை குறியீடுகளாக மாற்றித் தான் அனுப்பும். அப்போது தான் வழியில் யாராவது வந்து தகவலைத் திருடினால் கூட பயன்படுத்த முடியாது. உதாரணமாக நீங்கள் “123456” எனும் கடவுச் சொல்லை பயன்படுத்தினால் அது “முனுசாமி” எனவும் போகலாம். அல்லது 7877786 என போகலாம். அது பயன்படுத்தப்படும் “என்கிரிப்ஷன்” மென்பொருளைப் பொறுத்தது.

ஸ்டேட்பேங்க், இந்தியன் வங்கி என ஏகப்பட்ட வங்கிகள் உண்டு இல்லையா ? இவை விசா, மாஸ்டர்கார்ட் என யாருடைய சேவையை நாடுகிறார்களோ அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இதை “செட்டில்மென்ட்” என்பார்கள். ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ல் நீங்கள் சிட்டி பேங்க் கார்ட் போட்டு பணம் எடுக்கும் போது வங்கிகளுக்கு இடையேயான செட்டில்மென்டும் நடைபெறும் ! இவையெல்லாம் உடனுக்குடன் நடப்பதில்லை. பெரும்பாலும் தினசரி இரவில் நடக்கும்.

இப்படி மின் தகவல் மூலம் பண பரிமாற்றம் செய்வதி எலக்ட்ரானிக் ஃபண்ட்ஸ் டிரான்ஸ்பர் என்பார்கள். இங்கே மென்பொருளைத் தயாரிப்பவர்கள் சாஃப்ட்வேர் எஞ்ஞினீர்கள். இவர்கள் தயாராக்கும் சுவிட்ச் வழியாகத் தான் எல்லா தகவலும் வரும், போகும். இந்த சுவிட்சுக்குள் வந்து போகும் ஒவ்வோர் தகவலுக்கும் இவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும். நாள் தோறும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து போகின்றன. சிறு துளிப் பெருவெள்ளம் போல மென்பொருள் நிறுவனங்கள் அள்ளிக் கொட்டுவது இப்படித் தான் !

இனிமேல் ஏடிஎம் மெஷின் முன்னால் நிற்கும்போது இந்த விஷயங்களெல்லாம் மனசுக்குள் வரும் தானே ?

SHARE