ஐக்கிய அரபில் முதல் இந்து கோவில் ; ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்

59

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கோயில் நிர்வாகத்தினர் இது குறித்து கூறுகையில், கோயில் நடை திறக்கப்பட்ட உடனேயே பேருந்துகள் மற்றும் வாகனங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தடைந்தனர் என்றும், மாலையிலும் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர் எனவும் தெரிவித்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், எந்தவித இடையூறும் இன்றி, தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர்களும், எந்த விதமான பிரச்சனையும் இன்றி, கூட்டம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு, நல்ல முறையில் தரிசனம் செய்ய முடிந்ததாக குறிப்பிட்டனர்.

அபுதாபியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, லண்டன், அமெரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்தும் பலர் தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

கோயிலுக்கு வந்த பக்தர்களில் பலர், இந்த தருணத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் அபுதாபி இந்து கோயில் தங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி அற்புதமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதை பாக்கியமாக கருதுகிறோம் என்றும் குறிப்பிட்டனர்.

முன்னதாக அபுதாபி இந்து கோயில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மக்களுக்காக திறந்திருக்கும் என்று போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா அமைப்பு கூறியிருந்தது. மேலும் கோயிலுக்கு வருபவர்கள் பின்பற்ற வெண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வெளியிட்டிருந்தது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடலை மூடும்படியான உடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொப்பிகள், பிறர் மனதை புண்படுத்தும் வடிவமைப்பு கொண்ட பிற ஆடைகள் அனுமதிக்கப்படாது எனவும் கூறியிருந்தது.

மேலும் ஒளிஊடுருவக்கூடிய அல்லது இறுக்கமான உடைகளுக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டது. கவனத்தை சிதறடிக்கும் சத்தம் அல்லது பிரதிபலிப்பை ஏற்படுத்தும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கோவிலின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளன.

SHARE