ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், குறித்த காலத்திற்குப் பின்னர் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என மனித உரிமைகள் ஆணையகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் பீரிஸ்,
இது ஒரு தரப்பினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானம்.
தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் பக்கச்சார்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் இந்த நடவடிக்கையினால், நீதி, நியாயம் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமை பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஐ..நா. மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றவரை கைது செய்துள்ளதாக தெரிவித்ததன் பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.