ஐநா உள்ளக அறிக்கையின்படி 70,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வகைதொகையின்றி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

382

ஐநா உள்ளக அறிக்கையின்படி 70,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வகைதொகையின்றி 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.





இதற்கு முன் ஐநா பொதுச் செயலாளர் பான்கீமுன் நியமித்த நிபுணர் குழு அறிக்கையில் 40,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள போதிலும் பின்பு மேற்படி ஐநா உள்ளக விசாரணைக் குழு அறிக்கையில் இத்தொகை 70,000க்கும் மேலென உயர்ந்திருப்பது கவனத்திற்குரியது. ஆனால் தமிழ் மக்கள் தரப்பில் உள்ள மனிதஉரிமையாளர்களின் தகவல்களின் படி இத்தொகை 1,50,000 வரையென தெரிவிக்கப்படுகிறது. இதைத்தவிர காணமல் ஆக்கப்பட்டோர் தொகை 21,000க்கும் மேலெனவும், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டோர் தொகை கண்டறியப்படாத நிலையில் அதுவும் பெருந்தொகையில் உண்டெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தம் 90,000க்கும் மேலான இளம்விதவைகள் உண்டு என்பது சந்தேகத்திற்கு இடமற்ற தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், பொது இடங்கள், கிராமங்கள், நகரங்கள், காடுகள், பயிர்கள் என்பன திட்டமிடப்பட்ட வகையில் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஒரு மொத்த மனித இனப்படுகொலையும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் தெளிவாக அரங்கேறிவருகின்ற ஒரு நாடாக இலங்கைத் தீவு காணப்படுகிறது. பொதுவாக தமிழருக்கும் அவர்களது தேசிய பண்பாட்டு அம்சங்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு என்பதே இலங்கையில் இல்லை.

ஆனாலும் சா;வதேச அழுத்தங்களுக்கு அஞ்சி கண்துடைப்பாக சிங்கள அரசு சில விடயங்களில் செயற்பட்டாலும் அது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்னும் நிகழ்ச்சி நிரலில் இருந்து சிறிதும் வழுவவில்லை. தமிழ் மண் முற்றிலும் சிங்கள இராணுவ, சிங்கள பொலீஸ், சிங்கள புலனாய்வு வலைப்பின்னலுக்குள்ளால் இராணுவ-பொலீஸ் மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் என்கின்ற முற்றிலும் இராணுவ ஆட்சி சட்டத்தின் கீழ் இதுவரை தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்ற போதிலும் இந்த இராணுவ சட்டத்தின் கீழ்தான் தொடர்ந்தும் தமிழ் மண் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களுக்கான நீதி பற்றி பேச உலகில் எந்த அரசும் இல்லை. அரசுகள் தமது தேசிய நலன்களுக்காகவும், இராணுவ மூலோபாய நலன்களுக்காகவும் மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்காகவும்தான் செயற்படுகின்றனவே தவிர நீதிக்காக அல்ல.

இலங்கை அரசுடனான தமது நலன்களை காக்கவிரும்பும் உலக நாடுகள் அதிகம் அரச சார்பு நிலைப்பாட்டைத்தான் கொள்கின்றனவே தவிர தமிழ் மக்களுக்கான நீதிசார் நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை. இது ஒரு வெளிப்படையான பெரும் துயரம். துமிழ் மக்களை சா;வதேச சமூகம் கைவிட்டுள்ளது என்ற வேதனை தமிழ் மக்களிடம் உண்டு. இதனால் சர்வதேச நிறுவனங்கள் மீதும், ஐநா மீதும் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலத்திற்குக் காலம் ஐநா மனிதஉரிமை நிறுவனமும் மற்றும் உலகில் உள்ள முக்கிய அரசுகளும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று மேம்போக்காக கூறினாலும் நடைமுறையில் அவை சிங்கள அரசை சார்ந்துதான் செயற்படுகின்றவே தவிர தமிழ் மக்களுக்கான நீதிசார் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இது ஒரு துயரம்தான். இதுதான் உலக நீதியோ என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதாய் எழுந்துள்ளது.

ஆயினும் தமிழ் மக்கள் ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தை நோக்கி தம் குரல்களை எழுப்ப வேண்டிய யதார்த்தம் ஒன்று இருக்கிறது. ஐநா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை பொதுவாக தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.

ஆயினும் நீதி கோரி போராடுவதற்கும் உலக அரங்கில் எடுத்துச் சொல்வதற்கும் அதனை ஒரு களமாக பயன்படுத்த வேண்டிய அவசியமுண்டு. இங்குள்ள வேதனை என்னவெனில் இனஅழிப்பிற்கு உள்ளாகி இன்னலுற்றிருக்கும் தமிழ் மக்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையான ஆட்சிமாற்றத்தை செய்த அரசுகள் தமிழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டன. இத்துயரமும் மேற்படி அரசுகளின் ஏமாற்றும் வெளிப்படையானதாக தெரிகின்ற போதிலும் உலக அரங்கில் தமிழருக்கு எதிரான அநீதியை எடுத்துச் செல்ல இந்த ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் முன் நீதிகோரும் படலத்தை தொடர வேண்டியுள்ளது.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு என்கின்ற ஓர் உலகளாவிய சட்ட ஒழுங்குமுறையை அமெரிக்கா சர்வதேச அமைப்புகள் ஊடாக பிறப்பித்தது. இன்று சட்டமாகவும், நடைமுறையாகவும், ஒரு மரபாகவும் அது மாறிவிட்டது. இதற்குக் கீழ்பட்டுத்தான் இந்த உலக ஒழுங்கு இயங்குகிறது.

இதனால் உலகில் நீதிக்காக போராடவல்ல ஏனைய போராட்டங்களும் கூடவே சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு என்னும் ஒரு நடைமுறைக்கு தள்ளப்பட்டுவிட்டன.

இப்பின்னணியில் காணப்படும் உலகளாவிய சட்ட ஒழுங்கின்கீழ் தமிழ் மக்கள் தமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அந்த வெளியில் நின்று தம் பிரச்சினைகளை முன்வைக்கவும், நீதி கோரவும் வேண்டிய அவசியம் உண்டு.
சிங்கள அரசு முற்றிலும் தந்திரமானது. கடந்த செப்டம்பர் மாதம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையம் கூடிய வேளையில்தான் காணாமல் போனோரை தேடுவதற்கான அமைப்பிற்கான விதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்தார்.

அதுவரை அவர் அமைதியாகவே இருந்தார். ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தை ஏமாற்றுவதற்காகவும், சமாளிப்பதற்காகவும் அப்போது அதனைச் செய்தார். இதைக்கண்டு மனிதஉரிமைகள் ஆணையர் சையது ஹுசைன் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். அது இலங்கை அரசின் உண்மைக்கு புறம்பான ஏமாற்று நாடகம் என்பதில் சந்தேகமில்லை. அதன்பின்பு தற்போது நிகழயிருக்கும் ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் மார்ச் மாத அமர்வையொட்டி மார்ச் 1ஆம் தேதி காணமல் போனோரை கண்டறிவதற்கான ஆணையக்குழுவிற்கு தலைவராக சாலிய பீரீஸ் என்பவரை நியமித்துள்ளார்.

இதுவரைநாளும் தூங்கிக் கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மார்ச் மாத அமர்வை முன்னிட்டு கண்விழித்து அந்த ஆணையத்திற்கு ஒரு தலைவரை நியமித்துள்ளார் என்பது இராஜதந்திர ரீதியில் ஒரு வேடிக்கையான உண்மையாகும். எனினும் இதனைக்கண்டு வரவேற்பும், பாராட்டுக்களும் தெரிவிக்க உலகில் பல அரசுகள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.
அப்படியிருந்தாலும் தமிழ் மக்களுக்குள்ள ஒரேயொரு வழி இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரி சர்வதேச மன்றங்கள் முன்னும், சர்வதேச சமூகத்தின் முன்னும் செல்வதுதான். இது ஒரு பரப்புரைமுறை என்ற வகையில் இதனை கூடியபட்சம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உண்டு.

நாடுதழுவிய ரீதியில் இலங்கை கடந்த பிப்ரவரி மாதம் நடந்தேறியுள்ள 340 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களில் 234 சபைகளை மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தாமரைமொட்டு சின்னத்தின் கீழ் போட்டியிட்ட கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

இப்பின்னணியில் ராஜபக்ஸவின் பலம் உயர்வதைக்கண்டு அவரை விரும்பாத மேற்குலம் தற்போது ஈழத்தமிழர் பிரச்சனையை அவருக்கு எதிரான ஒரு அழுத்த தந்திரத்தை பிரயோகிக்க முற்படுவது இயல்பு. ஆயினும் தமக்கு வேண்டிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் நிலைக்க வேண்டுமென விரும்பி அவரை சிங்கள மக்கள் மத்தியில் தக்கவைக்கப்பதற்குப் பொருத்தமான வகையில்தான் தமிழ் மக்களின் பிரச்சனையை இந்த நாடுகள் கையாளும்.

இதில் ஓர் இரட்டைத்தன்மை இருக்கும். எப்படியாயினும் இந்த சூழலில் சிங்கள அரசினதும், சிங்கள இராணுவத்தினதும், சிங்களத் தலைவர்களினதும் இனப்படுகொலை கலாச்சாரத்தையும், தமிழ் மக்களுக்கான நீதியையும் கோரி ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தின் முன் பலமாக செயற்படுவது அவசியமாக உள்ளது. இதனால் பரப்புரை ரீதியான ஒரு வெற்றியை ஓரளவு பெறமுடியும். தமிழ் மக்கள் தமக்கான நீதியை நிலைநாட்டத் தேவையான சர்வதேச அபிப்ராயத்தை உருவாக்க இது ஓரளவு உதவக்கூடும். எனவே கையில் இருக்கக்கூடிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கூடியபட்சம் ஆதாரபூர்வமாகவும், ஆவண ரீதியாகவும் தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இங்கு முன்னெடுக்க வேண்டிய அவசியம் உண்டு.

இதில் ஆர்வமும், அதற்கான ஆற்றலும் கொண்ட அனைவரும் ஒருமனதாக இணைந்து செயற்பட்டு ஒரு சர்வதேச அழுத்தத்தை உருவாக்க பாடுபட வேண்டும். இதுதான் இதனால் கிடைக்கக்கூடிய கைமேல் பலனாகும்.

SHARE