ஐநா விசாரணை : இலங்கையைச் சாடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையர்

366

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரியபோதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐநாவின் புலன் விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது மற்றும் மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகள், ஐநா சாசனத்தை நிலைநிறுத்த விளையும் ஐநாவின் உறுப்பு நாடு என்ற வகையில் ஏற்க முடியாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதிப் போரில் இருதரப்பினரும் சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியதாக பரந்துபட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், இலங்கை அங்கு ஒரு சுயாதீனமான புலன் விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் சிவில் சமூக அமைப்புக்களும், மனித உரிமைக் காவலர்களும், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், ஏனைய வகையிலான மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார். ‘’ அங்கு உருவாக்கப்பட்டுள்ள பயத்தினாலான சுவரானது, ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மக்கள் சாட்சியமளிப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தடுக்கிறது என்றும் ஆணையர் கூறியுள்ளார்.

இந்த விசாரணை நேர்த்தியற்றது என்றும், பாரபட்சமானது என்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐநா ஆணையர் தவறு என்று கூறி நிராகரித்துள்ளார்.

ஆகவே இந்த விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தம்முடன் ஒத்துழைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

SHARE