ஐந்து நட்சத்திர ஹோட்டலை வாங்கியுள்ளது பிரபலமான சிங்கள நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

480
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை வாங்கியுள்ளது பிரபலமான சிங்கள நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாத ராஜபக்ச, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என சகல வகையிலும் இப்போது தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இதெல்லாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. ஆனால் இன்று அதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முதன்மைக் குற்றவாளி ராஜபக்ச, தன் பினாமியை வைத்து நட்சத்திர ஓட்டலை நடத்தப் போகிறார்.

‘எயிட்கென் ஸ்பென்ஸ்’  இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல பிராண்ட் சொகுசு ஹோட்டல். பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்டு, இலங்கை, இந்தியா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளில் கிளைகளுடன் இயங்குகிறது.

இந்த ஹோட்டலை ஹரி ஜெயவர்த்தன என்பவருக்கு அந்த பிரிட்டன் தொழிலதிபர் விற்றுவிட்டார். அதாவது, ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் தலைவர், ஹரி ஜெயவர்த்தன.

இலங்கையின் முக்கியமான வர்த்தக முதலாளி! ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர். லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா டிஸ்டில்லரீஸ் (மதுபான) நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர், இவர்தான். இலங்கையின் மிகப் பெரிய வங்கியான ஹட்டன் நஷனல் வங்கியின் இயக்குநர்.

இவருக்கு சிலோன் பெற்றோலியம் கார்ப்பரேஷனின் தலைவர் பதவியை அளித்து, நாட்டின் பெருந்தலைகளுள் ஒருவராக இவரை வலம் வரவைத்தவர் யார் தெரியுமா… இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சதான். அந்த அளவு ராஜபக்சவுக்கு நெருங்கிய நண்பர், வர்த்தகக் கூட்டாளி.

ரெசேடா தி ஃபெர்ன் இந்த ஹரி ஜெயவர்த்தனேதான் இப்போது சென்னையை குறிவைத்து முதலீடுகளை இறக்க ஆரம்பித்துள்ளார்.

ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் பெருங்குடி அருகில் கட்டி முடித்த ரெசேடா தி ஃபெர்ன் (Reseda-The Fern) என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலை கடந்த ஜூன் மாதம் வாங்கியிருக்கிறார் ஜெயவர்த்தனே.  (எயிட்கென் ஸ்பென்ஸ் நிறுவனத்துக்கு ஏற்கனவே கோவையில் ஹோட்டல் அதிதி மற்றும் புதுச்சேரியில் ஹோட்டல் தமரா ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளன).

143 அறைகள் கொண்ட இந்த எட்டு மாடி ஹோட்டல் 25 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ 150 கோடி) க்கு கைமாறியுள்ளது. எயிட்கென் ஸ்பென்ஸ் என்ற பெயரிலேயே இயங்கவிருக்கும் இந்த ஹோட்டலின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.

ராஜபக்சவும் ஹரி ஜெயவர்தனாவும் 60:40 என்ற சதவீத அடிப்படையில் இந்த ஹோட்டலை நடத்தப் போவதாக பரபரப்பாக தகவல் பரவி வருகிறது. கொழும்பில் ஈழத் தமிழர்கள் நடத்திய ஹோட்டல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பறித்துக்கொண்ட, அதே ராஜபக்சதான் இப்போது தமிழகத்தில் நட்சத்திர ஹோட்டல் தொழில் நடத்தப் போகிறார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கே தெரியாமல் நடந்திருக்கிறது இந்த ரூ 150 கோடி பேரம், அதுவும் ராஜபக்சவை பின்னணியாகக் கொண்டு!

இந்த ஹோட்டல் வாங்கப்பட்டது மற்றும் அதில் ராஜபக்சவின் பின்னணி குறித்து தீவிரமாக தகவல் சேகரித்து வருகின்றன நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள்.

விரைவில் இந்த ஹோட்டலை திறக்கத் தடை கோரி போராட்டத்தில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

SHARE