“ஐயா.. எங்கள் பிள்ளைகளை மீட்டு கொடுங்கள்” எனக்கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்தவாறு கண்ணீர்மல்க கதறியழுத சம்பவம் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சர்வதேச விசாரணை பொறிமுறையினை கோரி கிளிநொச்சி நகரில் ஆரம்பமான நடைபயணம் இன்று நிறைவுக்கு வந்த நிலையில், குறித்த நடை பயணத்தில் பங்கெடுத்த காணாமல்போனவர்களின் உறவினர்களை முதலமைச்சர் சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போதே காணாமல்போனவர்களின் உறவினர்கள் இவ்வாறு கதறியழுதனர்
குறித்த சந்திப்புக்காக முதலமைச்சர் காணாமல்போனவர்களின் உறவுகளை அழைத்த நிலையில், அவரை சந்திக்க வந்த உறவுகள் வாசலிலேயே அழுதவாறு வந்து முதலமைச்சரின் கால்களை பிடித்தவாறு கதறியழுதனர்.
இந்நிலையில் முதலமைச்சர் அழுதவர்களுக்கு ஆறுதல் கூற முடியாத நிலையில் தளதளத்த குரலில் முதலமைச்சர் அவர்களை ஆறுதல் படுத்தினார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
இலங்கையின் ஆட்சியாளர்களும், சர்வதேசமும் அரசியல்வாதிகள் போன்று செயற்படுகின்றன. இதனாலேயே பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
அண்மையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் நிஷா பிஷ்வாலை சந்தித்த போது அவர்கள் சார்பில் உள்ளக விசாரணைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நாம் சர்வதேச கண்காணிப்புடன் அது நடக்கவேண்டும் என கேட்டிருந்தோம் ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில். இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்கள் கொடுத்த வெற்றிக்கு பதிலாக செய்ய முடிந்தவற்றையும் கூட செய்யவில்லை.
குறிப்பாக காணமல்போனவர்கள் விடயம், படைக்குறைப்பு, அரசியல் கைதிகள் விடயம், காணி விடயம் உள்ளிட்டவை அவ்வாறே. எனவே நாம் எமக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களுடைய பிரச்சினைகளை உணர்ந்துள்ளோம். இதனாலேயே இரு தீர்மானங்களை மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளோம் என கருத்து கூறினார்.