யுத்தகுற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வெளியாகியுள்ள அறிக்கையில் உள்ளக விசாரணை பொறிமுறையே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. உள்ளக விசாரணை பொறிமுறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது தீர்வாக அமையாது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் ,தனை தெரிவித்தார்.
ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கை என சனல் 4 வெளியிட்ட அறிக்கை புனையப்பட்ட ஆவணமோ கசியவிடப்பட்ட ஆவணமோ ,ல்லை. அது உன்மையான ஆவணமாகும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்கம் பேசியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பிரதமரின் அக்கூற்றை முற்றாக மறுத்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அவ்வாறான பேச்சுக்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதுடன் ஐ.நாவுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆவணம் தொடர்பாக எம்மோடு பேசவேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.