ஐ.நா சபையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு காதில் பூவைத்துவிட்டு சென்ற சிறிலங்கா பிரதிநிதி.

412

 

sri-lankaதான் நாட்டின் தலைவராக இருக்கும் வரை இலங்கை படைவீரர்கள் எவரையும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேச நீதிமன்றிலோ, வெளிநாட்டு நீதிபதிகள் முன்னிலையிலோ அல்லது கலப்பு நீதிமன்றிலோ நிறுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை, மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால அண்மையில் கொழும்பு இராணுவ மருத்துவமனை அரங்கில், இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போது உறுதிமொழியை அளித்திருந்தார்.

இந்த நிலைப்பாட்டை தான் ஐநாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் இந்த அறிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை முற்றிலும் மீறுவதாகவே அமைந்திருந்தது.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நீதிபதிகளை உள்ளடக்கிய நம்பகமான விசாரணைப் பொறிமுறையை அமைக்க, 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்துக்கு சிறிலங்கா இணக்கம் தெரிவித்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது. ஐ.நாமனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளில் இத்தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இரண்டு ஆண்டுகள் கடந்தும் தீர்மானத்தில் சொல்லப்பட்ட பெரும்பாலான விடயங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் மேலும் இருவருட கால அவகாசத்தை சிறிலங்கா கேட்டு பெற்றுக்கொண்டது.

ஐ.நா.மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்பு கூறல் பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பகிரங்கமாக அறிவித்த சூழலிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்;டத்தொடரை சிறிலங்கா இம்முறை சந்தித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் வழமை போலவே ஏனைய உறுப்பு நாடுகளின் கேள்விகள் சந்தேகங்கள் கோரிக்கைகளுக்கு பொய்புரட்டுக்களையும் மழுப்பல் பதில்களையும் வழங்கி விட்டு சென்றிருக்கிறது சிறிலங்கா.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28ஆவது கூட்டத்தொடர் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி 17ஆம் திகதிவரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடர் அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய யூ.பி.ஆர். எனப்படும் ஐநாவின் பூகோள சுற்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படும் அமர்வாக அமைந்திருந்தது.

இக்கூட்டத்தொடரில் கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் 25பக்க அறிக்கையை இம்முறை சமர்ப்பித்திருந்தது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் இலங்கைக்கு சென்று அங்குள்ள நிலமைகள் பற்றி சேகரித்த தகவல்கள் அடங்கிய 12பக்கங்களை கொண்ட அறிக்கையும் ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை நிலவரங்கள் தொடர்பாக 22 பக்க அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.

கடந்த புதன்கிழமை பிற்பகல் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள 88 நாடுகள் தமது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தன. ஐநாவின் பூகோள சுற்று அறிக்கை ஒன்றின் மீது இம்முறை அதிக நாடுகள் பங்குபற்றியது இலங்கை தொடர்பான விவாத்தில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 3மணித்தியாலம் 10 நிமிடங்கள் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.

இதிலிருந்து இலங்கையின் மனித உரிமை விடயத்தில் பல நாடுகள் அக்கறையோடு செயற்படுகின்றன என்பதையும் இலங்கை காப்பாற்றுவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் என சில நாடுகள் உள்ளன என்பதையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையின் சார்பில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரத்துறை பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவாசம், பிரதி சட்டமா அதிபர் நரேன் புள்ளே, இலங்கைக்கான ஜெனிவா தூதுவர் கலாநிதி ரவிநாத் ஆரியசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடுகள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதியமைச்சர் ஷர்சா டி சில்வா மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவாசம், பிரதிசட்டமா அதிபர் நரேன் புள்ளே ஆகியோரும் பதிலளித்தனர்.

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே, டென்மார்க் உட்பட மேற்குலக நாடுகள் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல். நிலைமாறுகால நீதி செயற்பாடு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமை, போன்ற பல விடயங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியதுடன் இலங்கை இந்த விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டின.

யுத்தத்திற்கு பின்னர் குறிப்பாக மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கடும் அதிருப்தி வெளியிட்டன.

அண்மையில் படையினர் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆற்றிய உரை, இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னரும் கைதுகள், சித்திரவதைகள் தொடர்வதாக அண்மையில் வெளியான ஏபி செய்தி அறிக்கை, புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்திருந்தமை, ஐ.நா.மனித உரிமை பேரவையின் நிலைமாறு கால நீதி, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றாமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்குலக நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தின.

அமெரிக்காவுக்கான ஐ.நா. பிரதிநிதி ஜசொன் மார்க் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் செயல்படுத்த முன்வராமை குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

ஐநா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியதுடன் அதனை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதியும் வழங்கியிருந்தது. இந்நிலையில் அதனை நடைமுறைப்படுத்த பின்நிற்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என கூறிய அமெரிக்க பிரதிநிதி 30ஃ1 இலக்க தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்,

சிறுபான்மை இனங்களுக்கும் மதங்களுக்கும் அரசியல் யாப்பில் சமஉரிமை வழங்க வேண்டும் குறிப்பிட்டார்
பிரித்தானிய பிரதிநிதி மீரியம் செஜர்மான் இலங்கையில் இன்னமும் சித்திரவதைகளும் கைதுகளும் தொடர்வதாகவும், இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நீதி விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

போர் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் நிலையான வாழ்வையும் வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் முன்வைக்கப்பட்ட நிலைமாறு கால நீதி தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் திருப்தியானதாக இல்லை என அவர் குற்றம் சாட்டினார்

சுவிட்சர்லாந்து நாட்;டின் பிரதிநிதி லூக்காஸ் ஹைன்சர் உரையாற்றும் போது காணாமல் போனவர்கள் பற்றி கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை அமைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தரவாதத்தை வழங்கிய போதிலும் அது சரியாக செயற்படவில்லை என்றும் இப்போதும் கைதுகளும் சித்திரவதைகளும் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் சிறிலங்கா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் இலங்கையின் அரசமதமாக குறிப்பிடப்பட்டிருந்ததையும் ஏனைய மதங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டிய மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் இனநல்லிணக்கமும் அமைதியும் நிலவ வேண்டுமாக இருந்தால் மதங்களுக்கும் இனங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான நம்பகரமான சர்வதேச விசாரணை பொறிமுறையை எப்போது முன்வைக்கும்?
சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்­ளது? காணி திருப்பி அளிக்கப்படாத மக்களுக்கு எவ்வாறு நட்டஈடு வழங்கப்படும்?
ஐ.நா.மனித உரிமை பேரவையின் 2015 ஒக்டோபர் மாத தீர்மானத்தின் படி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறையை எப்போது முன்வைக்கும்?

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதில் அரசாங்கம் என்ன முன்­னேற்றம் அடைந்துள்ளது?
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்படும் புதிய சட்டம் சர்வதேச தரத்தை பிரதிபலிக்குமா?

இவ்வாறு பல கேள்விகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் எழுப்பியிந்தது.

இவை அனைத்திற்கும் இலங்கையின் அரச குழுவுக்கு தலைமை தாங்கிய பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா மழுப்பலான பதில்களையே வழங்கினார்.

இலங்கையில் மனித உரிமைகளை மீள் நிறுவ அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனினும் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேகமாக மீள் நிறுவ முடியாதுள்ளது என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

‘சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டுச் சட்டங்கள் முழுமையாக அமுல் ஆவதில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினாலும்கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அதைப் பாதுகாப்பதும் ஒரே நாளில் நடந்துவிடக் கூடியது அல்ல.
‘மனித உரிமைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த எமது முயற்சிகள் மீதான சர்வதேசத்தினது விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடவும் நாம் தயாராக உள்ளோம்.

‘ஆனால், எமது இந்த முயற்சியை சர்வதேசத் தலையீடுகளின் மூலம் குழப்புவதற்குச் சில சக்திகள் இயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பல நாடுகளும் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டுக்களில் ஒன்று இலங்கையில் சித்திரவதையும் கைதுகளும் இடம்பெறுகிறது என்பதாகும். இதற்கு பதிலளித்த பிரதி சட்டமா அதிபர் நரேன் புள்ளே சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், காவல்துறை அதிகாரிகள் 33 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

போர்க்குற்ற விசாரணை நடக்க அனுமதிக்க மாட்டேன் என நாட்டின் ஜனாதிபதி உறுதியாக கூற அந்நாட்டின் பிரதிநிதிகள் ஐ.நாசபையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என காதில் பூ வைத்து விட்டு சென்றிருக்கிறார்.

( இரா.துரைரத்தினம் )

SHARE