23-வது நாளான இன்று காசா மீது இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலில் 68 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 110 பேர் காயமடைந்தாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்திருந்த ஐ.நா. பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் இறந்துள்ளனர். முன்னறிவிப்பு இன்றி இந்த தாக்குதல் நடந்ததாக ஐ.நா. நிவாரணப்பணிகள் நிறுவன இயக்குனர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் 4 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. இந்த போர் நிறுத்தம், சுரங்கப்பாதையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தேடுதல் வேட்டைக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்றுக்கொண்டதா இல்லையா? என்பது உறுதி செய்யப்படவில்லை.
எனினும், போர் நிறுத்தத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மீது காசா போராளி அமைப்புகள் தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஜூலை 8-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த போரில் காசா தரப்பில் இதுவரை 1283 பேர் பலியாகி உள்ளனர். 7100 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 53 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.