இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு இந்தியாவோ, தாய்லாந்தோ வீசா வழங்க மறுக்கவில்லை என்று அவர் உறுதிபடுத்தியிருக்கிறார்.
சில வாரங்களாக இந்த விவகாரம் ஊடகங்களில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. ஏனென்றால் இந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இத்தகைய நிலையில் இலங்கைக்கு வெளியில் இருந்தே விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விசாரணையின் முக்கிய பங்கு சாட்சியங்களைத் திரட்டுவதாகும்.
அதனை இலங்கைக்குள் இருந்து மேற்கொள்ள முடியாது போனால் அயல் நாடுகளில் இருந்து மேற்கொள்வதே சுலபமானது.
இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பாகிஸ்தானிய மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜகாங்கீர், சில வாரங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு விசாரணைக்கு அனுமதி மறுக்கப்படுவது ஒன்றும் தமக்குப் புதிய விடயம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தேவைப்பட்டால் சாட்சியங்களை அயல்நாடுகளுக்கு அழைத்து விசாரிப்போம், சிலவேளைகளில் ஜெனிவாவுக்கும் வரவழைப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் இருந்து சாட்சிகளை ஜெனிவாவுக்கு அழைத்து சாட்சியங்களைப் பெறுவது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதற்கு பெரும் செலவு ஏற்படும்.
எனவே அயல்நாடுகளுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பரவலாக நம்பப்பட்டது.
குறிப்பாக இந்தியாவில் அதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்பட்டது. காரணம் போரில் இருந்து தப்பியவர்கள் பலர் இந்தியாவில் கூட தங்கியுள்ளனர்.
எனவே ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவில் இருந்து விசாரணையை மேற்கொள்ளும், சாட்சியங்களைத் திரட்டும் என்ற பரவலான நம்பிக்கை காணப்பட்டது.
இத்தகைய கட்டத்தில் தான் இந்தியாவும் ஏனைய தெற்காசிய நாடுகளும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வீசா வழங்க மறுத்து விட்டதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
இந்தப் புரளியை முதலில் கிளப்பி விட்டது இலங்கை அரசாங்கம் தான்.
தெற்காசிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வீசா வழங்க மறுத்தமை இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார்.
இலங்கையில் மனித உரிமை ஆணைக்குழு எவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த ஒரு விடயமே வெளிப்படுத்தி நிற்கிறது.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் பரப்பப்பட்ட இந்தச் செய்திக்கு ஒரு அடிப்படை நோக்கம் இருந்துள்ளது என்பது தெளிவாகவே தெரிகிறது.
அதாவது இந்தியா வீசா வழங்கவில்லை என்று முன்னரே கூறியதன் மூலம் இந்தியாவுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்த முனைந்திருக்கிறது அரசாங்கம்.
இதனையும் மீறி வீசா வழங்கப்பட்டால் எதற்காக வழங்கப்பட்டது என்ற கேள்வி புதுடில்லியை நோக்கி எழுப்பப்படும்.
சாதாரணமாக ஐ.நா. விசாரணைக் குழு வீசா எடுத்துக் கொண்டு இந்தியா சென்றிருந்தால் அது சர்சசையாக உருவெடுக்காது.
இப்படியான செய்தி வெளியான நிலையில் ஐ.நா. குழுவுக்கு இந்தியா வீசா வழங்கினால் அது கேள்விகளை எழுப்பும். அதனால் இந்தியா வீசா வழங்கப் பின்னடிக்கும் அல்லது வழங்காமல் போகலாம். அவ்வாறு இந்தியா எந்த நகர்வை மேற்கொண்டாலும் அது இலங்கைக்கு சாதகமான விடயமாகும்.
எனவே தான் புதுடில்லியை இக்கட்டில் மாட்டி விடுவதற்காக திட்டமிட்டுக் காயை நகர்த்தியது கொழும்பு.
இதனால் தான் புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீனிடம் இதுபற்றி ஒவ்வொரு முறை வினவப்பட்ட போதும் சரியாகப் பதிலளிக்காமல் நழுவினார்.
ஒருபோதும் அவர் ஐ.நா. விசாரணைக் குழு வீசாவுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை, நாம் மறுக்கவுமில்லை என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பதிலளித்திருக்கவில்லை.
அவ்வாறு அவர் கூறியிருந்தால் இந்த விவகாரம் இந்தளவுக்கு நீண்டிருக்காது.
இந்திய ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகாத நிலையில் அதுபற்றித் தம்மால் கருத்து வெளியிட முடியாது என்று தொடங்கி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வெளிப்படுத்திய நிலைப்பாடு என்ன என்று விபரித்து ஐ.நா. குழு வீசாவுக்கு விண்ணப்பித்தால் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்று பூடகமாக குறிப்பிட்டிருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன்.
அதாவது வெளிப்படையாக பதிலை அளிக்காமல் அவர் நீட்டி முழக்கியது, இந்தியாவும் எதையோ வெளிப்படுத்தத் தயங்குகிறது என்ற உண்மையை புலப்படுத்தியிருந்தது.
உண்மையில் இந்தியா கூட இந்த விவகாரத்தில் ஒரு மயக்க நிலை நீடிப்பதையே விரும்பியது காணலாம்.
ஆனால் இப்போது நவநீதம்பிள்ளை இந்த கேள்விகளுக்கு முடிவு கட்டியிருக்கிறார்.
அதாவது ஐ.நா. நிபுணர் குழுவினர் எந்தவொரு நாட்டுக்கும் செல்வதற்கு வீசா கோரி விண்ணப்பிக்கவில்லை என்று அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இத்தகைய நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த விவகாரத்தில் குழப்பத்தை விளைவிக்க முயன்றிருப்பதும் இந்திய அரசாங்கம் அதனைத் தொடர விரும்பியிருப்பதும் வெளிப்படையாகியிருக்கிறது.
இந்தியாவின் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள கருத்துகள் ஐ.நா. விசாரணைக் குழுவை அது வரவேற்காது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்ற நிலையில் ஐ.நா. குழு இந்தியாவிடம் வீசா கோரும் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கைக்கு வெளியில் உள்ள ஆதாரங்களை ஒன்று திரட்டி போர்க்குற்றங்களை நிரூபிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் நவநீதம்பிள்ளை.
அதாவது ஐ.நா. விசாரணை என்பது குறித்த ஒரு நாட்டுக்குச் சென்று தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் அவ்வாறு அனுமதிக்கப்படாத சந்தர்ப்பங்களிலும் கூட வெற்றிகரமான விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதை வட கொரியா, சிரியா விவகாரங்களை வைத்து உதாரணம் காட்டியிருக்கிறார் அவர்.
தற்போதுள்ள நவீன தொடர்பாடல் வசதிகளை ஐ.நா. அதிகம் நம்புவதாகவும் தெரிகிறது.
நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்து இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதென்பதால் தான் அவர் முன்கூட்டியே தீர்மானம் எடுத்துச் செயற்படுவதாகவும், பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் அரசாங்கம் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை, ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவிடம் வீசாவுக்கு விண்ணப்பித்து அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் இந்தியாவின் நடுநிலைமையும் கூட கேள்விக்குள்ளாக்கப்படும்.
ஏனென்றால் இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இந்தியா.
ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஆதரவளித்தது.
எனவே ஒரு விசாரணைக் குழுவை நியாயமானது என்று கூறி வாக்களித்த இந்தியாவினால் இன்னொரு விசாரணைக் குழுவை நியாயமற்றது என்று நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பது சிக்கலானது.
அவ்வாறானதொரு சங்கட நிலை இந்தியாவுக்கு உருவாகுமா? இல்லையா? என்பது ஐ.நா. விசாரணைக் குழுவின் அடுத்தகட்ட நகர்வுகளில் தான் தங்கியுள்ளது.
சுபத்ரா