“ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்…” இப்படி நாங்கள் பலரைப் பார்த்துச் சொல்வதுண்டு.
செல்வந்தர்களாக இருக்கட்டும், கல்விமான்களாக இருக்கட்டும், அரசியல்வாதிகளாக இருக்கட்டும் இப்படி பலருக்கு இந்த வார்த்தை ஏக பொருத்தமாய் அமையும்.
அப்படி ஒருவர் தான், சமகால இலங்கை அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி..(Maithripala Sirisena)
செயல் வீரன் மைத்திரி
அநேகமாக, தேர்தல்கள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகள் துயில் எழுவதுண்டு.
இது பல நாடுகளிலும் நடக்கும் ஒரு சாதாரண விடயம் தான், ஏன் இலங்கையில் கூட வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளிலும் தென்னிலங்கை உள்ளிட்ட சிங்கள பகுதிகளிலும் உள்ள மகா கணம் பொருந்திய அரசியல் தலைவர்களின் தேர்தல் கால நகர்வுகளும் இதுதான்.
குறிப்பாகச் சொல்லப்போனால், உண்மையைச் சொல்வதில் தவறொன்றும் இல்லை… வடக்கு, கிழக்கைப் பொறுத்தமட்டில், குறிப்பாக வடக்கில் தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளுடைய பெயரையும், யுத்தத்தையும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தையும் கையில் எடுப்பதுண்டு.
அதேசமயம், தென்னிலங்கையை பொறுத்தமட்டில் ஒரு சாரார் யுத்த வெற்றி, மற்றுமொரு சாரார் பொருளாதார வளர்ச்சி, இவை அனைத்தையும் தாண்டி தற்போதைய தேர்தலுக்கும், கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதன் பின்னரான பொதுத் தேர்தலின் வெற்றிக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் போன்றவை அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்களாக மாறுவதுண்டு.
அதுபோன்ற ஒரு அரசியல் நகர்வுக்கு அடி எடுத்து வைத்த மைத்திரியின் பேச்சு இன்று அவரையே ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கின்றது.
2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அந்த வெற்றியை வைத்து அரியணை ஏறிய ராஜபக்ச(Rajapaksa family) குடும்பத்தை, 2015இல் மக்களுக்கு அப்போது ராஜபக்சர்கள் மீதிருந்த வெறுப்பை பயன்படுத்தி, ராஜபக்சக்களுடனேயே இருந்து கொண்டு இறுதியில் ரணில் உள்ளிட்டோருன் கூட்டுச் சேர்ந்து அதிர்ஷ்டவசமாக நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் மைத்திரி. ராஜபக்சக்களையும் வீழ்த்தி நாட்டின் தலைவரானார்.
அதன் பின்னர் அவரது அரசியல் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்தன.
அது பெரும்பலம் பொருந்திய ராஜபக்சக்களையே வீழ்த்திய பெருமையை மைத்திரி தன்னகத்தே கொண்டிருந்ததால் இருக்கலாம்.
அது மாத்திரம் இன்றி மத்திய வங்கி பிணை முறி மோசடியும் அப்போது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த மோசடியுடன் தொடர்புடைய அனைவரும் எனது வாளுக்கு இலக்காவார்கள் என்று அப்போது அடிக்கடி மைத்திரி கூறி வந்த வார்த்தைகள் மைத்திரியை அப்போதைய செயல் வீரனாகவே மக்கள் மத்தியில் காட்டியது.
இப்போது யோசித்தால் அவர் வாளைக் கொண்டு பூச்சாண்டிக் காட்டியதாகத் தோன்றும்..!!
செல்லாக் காசாய் ஆன மைத்திரி
ஆனாலும், ராஜபக்சக்களுக்கு எதிராக ரணிலோடு(Ranil Wickremesinghe) கூட்டுச் சேர்ந்தவர், ஒட்டாத திருமணம் போல 2018 இல் அப்போதைய பிரதமர் ரணிலுடன் முறைத்துக் கொண்டு யாரும் எதிர்பாரா நேரத்தில் மகிந்த ராஜபக்சதான் பிரதமர் என்று அறிவிக்க அடுத்த மூன்று மாதங்கள் இலங்கை அரசியல் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்றது.
நான் தான் பிரதமர், நானும் தான் பிரதமர் என்று ரணிலும் மகிந்தவும் நீதிமன்றை நாட சர்வதேசம் இலங்கையை உற்று நோக்க, சர்வதேச ஊடகங்களிலும் மைத்திரியே தலைப்புச் செய்தியாய் மாற.. சத்தமே இல்லாது அத்தனை குழப்பத்திற்கும் வழி வகுத்தவராய் மைத்திரி உருவானார்..
என்னதான் இருந்தாலும், அதே அரசியல் பரபரப்போடு அடுத்த வருடம் மைத்திரியின் தலையில் பேரிடியாய் விழுந்தது தான் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல். ராஜபக்சக்களின் அடுத்த அரசியல் அத்தியாயத்திற்கும், மைத்திரியின் வீழ்ச்சிக்கும் வித்திட்ட தாக்குதல் என்றும் சொல்லாம்.
அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உள்ளிட்டவற்றில் ராஜபக்சக்கள் அபார வெற்றியைக் கண்டனர், ஜனாதிபதித் தேர்தலில் 69 சதவீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிய ராஜபக்ச சகோதரர்களுக்கு தனது ஆதரவை வாரி வழங்கினார் மைத்திரி.
ஆனால், காலப் போக்கில் செல்லாக் காசாய் ஆனதுதான் துயரம்.
ஒரு ஜனாதிபதியாக நான்கு வருட காலங்கள் நாட்டை ஆட்சி செய்த, உயர் இடத்தில் இருந்த மைத்திரிக்கு ராஜபக்சக்களின் ஆட்சிக்குள் ஒரு தூசு அளவுக் கூட முக்கியத்துவமோ, இடமோ கிடைக்கவில்லை. மைத்திரியும் மௌனம் காக்க ஆரம்பித்தார்.
அதன் பின்னர் நாட்டை சீரழித்த பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட போராட்டங்களும், வன்முறைகளும் அரியாசணத்தில் இருந்து ராஜபக்சக்களை விரட்டியடித்தது. அந்த சமயம் தனது ஆட்சியைப் பற்றி பெருமை பேசியதுடன் ஊடகங்களிலும், ஆங்காங்கே நடந்த அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் நான் இன்னும் அரசியலில் தான் இருக்கின்றேன் என்ற வகையில் தனது இருப்பை நாட்டு மக்களுக்கு மைத்திரி உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், நாட்டின் அடுத்த ஆட்சி அதிகாரம் ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக வந்த ரணிலின் கைவசம் சென்றது. போராட்டம் அடங்கியது. கிட்டத்தட்ட ஓரளவு வெளிப்படையாக பொதுமக்களால் உணரக் கூடிய வகையிலான பொருளாதார தீர்வுகளும் வழங்கப்பட்டன.
இதன் காரணமாக மீண்டும் தன் இருப்பை மறந்து மைத்திரி அமைதி காத்த நிலையில், கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு மைத்திரியின் உறக்கத்தை கலைத்தது.
சனல் 4 வெளியிட்ட காணொளி இலங்கை அரசியல் பரப்பில் பேசு பொருளாக சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவே காணப்பட்டது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மைத்திரி மீதும் சுமத்தப்பட்டன. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே சர்வதேச புலனாய்வுத் தகவல்கள் மைத்திரிக்கு வழங்கப்பட்டதாகவும், அதனை பொறுப்பற்ற முறையில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரி கண்டுகொள்ளாமல் விட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மைத்திரி மீது சுமத்தப்பட்டிருந்தன.
இப்படியானதொரு பின்னணியில் தான் இலங்கையில் இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்படவுள்ள ஆண்டாக 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஐந்து வருடங்களை அண்மித்துள்ள நிலையில், இதுவரையான நாட்களில் தனக்கு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உண்மை தெரியும் என்றோ, அது தொடர்பான நடவடிக்கைகளையோ எடுக்கத் தவறிய மைத்திரி அண்மையில் தனக்கு ஒரு மர்ம நபரிடம் இருந்து தகவல் கிடைத்ததாகவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் உண்மை தெரியும் என்றும் ஒரு தீப்பொறியை பற்ற வைத்திருக்கின்றார்.
இது மிகவும் பாரதூரமான கருத்தாக அவதானிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்களாக இது தொடர்பில் மைத்திரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கவும் நேர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் மைத்திரியால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதுடன், பலர் மைத்திரியை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மைதான்.
தனது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள மைத்திரியின் ஒரு அரசியல் நகர்வு இது என்று பலரும் கருதினாலும், மைத்திரி கூறுவதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்துச் சென்று விட முடியாது என்ற கோணத்தில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் அவதானிகள் உள்ளிட்ட பலர் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.
எனினும், தனக்கு தெரிந்த உண்மைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தும் தற்துணிவு மைத்திரிக்கு கிடையாது என்று பல அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுடன் மைத்திரிக்கு வாய் கட்டுப்பாடு அவசியம் என்று பலர் கிண்டலான தொணியில் அறிவுரை வழங்கிவருதும் உண்டு.
ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவில் காட்டப்படுவது போல, ஏனைய நாடுகளைப் போல, ஏன் இலங்கையின் ஏனைய அரசியல் தலைவர்களையும் போல மைத்திரியும் தேர்தல் கால வாய் ஜம்பங்களை காட்ட ஆரம்பித்திருக்கிறார்..
ஆரம்பத்தில் கூறியது போன்று, “ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்…” என்ற வசனம் மைத்திரிக்கு ஏகப் பொருத்தம்!!