2004 ஆம் ஆண்டு தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய துரோகம் நிகழப்பெற்ற ஆண்டாகும். அந்தத் துரோகமானது சிங்கள தேசத்துக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சூத்திரதாரியென இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவைத் தமிழர் தரப்பு எண்ணியிருந்தது.
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதி என அழைக்கப்பட்ட மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த கருணாஅம்மான் என அழைக்கப்பட்டு வரும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துரோகச் செயல்களும் அவர் மேற்கொண்டிருந்த படுகொலைகளும் உலகத் தமிழர்களால் மறக்க முடியாததும் மன்னிக்க முடியாததும் ஆகும்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களால் ஒதுக்கப்பட்டவரான முரளிதரன் பத்தாண்டு காலத்தில் அவரது அரசியல் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழினத்தால் வெறுக்கப்பட்ட, அருவருக்கப்பட்ட ஒரு பிரகிருதியாக வேறுபடுத்திப் பார்க்கின்றனர். மகிந்த அரசால் ஆசீர்வதிக்கப்பட்டு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கருணா அம்மானின் துரோகமும், ஈனச்செயல்களும் அவரது அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதுகின்ற காலம் மகிந்தவின் வீழ்ச்சியோடு தொடங்கி விட்டது.
கருணா அம்மான் அரசினது அடிவருடியாக மாறியது மட்டுமல்லாமல் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும் துணை போனவர். விடுதலைப் புலிகளிடமிருந்து தந்திரமாக வெளியேறிய கருணா 5000 புலிப்போராளிகள் தன்னோடு உள்ளனர் என்று கதை விட்டிருந்தார். சகோதரத்துவப் படுகொலைகளை ஈவிரக்கமின்றிக் கிழக்கு மாகாணத்தில் செய்து முடித்தார்.
2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல்களையும், இடையூறுகளையும் செய்து வந்தார். தான் ஏன் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தேன் என்பதற்கு தமிழ்மக்கள் நம்ப முடியாதவாறு பல்வேறு கதைகளை ஊடகங்கள் மூலம் வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஒருவாறு நாட்டிலிருந்து தப்பி வெளிநாடு சென்றிருந்தார். புலம்பெயர் தமிழ்மக்களின் பலத்த எதிர்ப்பால் மீண்டும் நாடு திரும்பினார்.
அரசுடன் சேர்ந்து தமிழினத் துரோகத்தனத்தை தொடர்ந்தும் தன் வாழ்நாள் முழுவதும் அரங்கேற்ற முடிவு செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சையாகவோ, சிங்கள தேசியக் கட்சி சார்பிலோ வேட்பாளராக நின்று போட்டியிட்டு வெற்றியீட்டக்கூடிய சக்தியற்ற ஒருவராக கருணா இருந்த நிலையில் மகிந்தவின் தீவிரவிசுவாசியாக உருவெடுத்தார். மகிந்த சரணம் கச்சாமி, துரோகமே சரணம் கச்சாமி எம்.பி பதவி வேண்டும் சரணம் ஞகச்சாமி என எண்ணியவாறு மகிந்தவுக்கு அடிமையானார்.
தமிழினத்தின் போராட்டத்தை அழிக்க தேசியப் பட்டியல்ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் விடுதலைப்புலிகளையும் அழித்தொழித்த பின்பு பிரதியமைச்சர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.
கருணா அம்மானைப் பாதுகாத்து கொழும்பு வரை அழைத்துச் சென்றவர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரான அலிசாஹிர் மெளலானா என்பவர் என்பதை அப்போது கிழக்கு மாகாணத் தமிழ்மக்கள் அறிந்து கொண்டனர். அவரது ஆதரவும், உபசரிப்புமே கருணா அம்மானை சிங்கள அரசியலுக்குள் மூழ்குவதற்குக் காரணமாயிருந்தன.
மகிந்தவின் தீவிர விசுவாசியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கருணா அம்மான் தமிழ் மக்கள் மத்தியில் நிரந்தரமான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை. தமிழ் மக்களும் அதற்கான அங்கீகாரத்தை வழங்க மறுத்தனர் என்பதே உண்மையாகும். 2012 இல் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் கருணா அம்மானின் சகோதரி போட்டியிட்டபோது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அவருக்குச் சொற்ப வாக்குகளை மட்டுமே வழங்கியிருந்தனர். மக்கள் அவரை முற்றுமுழுதாக நிராகரித்திருந்தனர்.
பிரதியமைச்சராகக் கொழும்பில் நடைபெற்றதொரு களியாட்ட நிகழ்வின்போது தனது செயலாளருடன் சேர்ந்து நடனமாடிய சம்பவம் தமிழ் மக்களை விசனத்துக்குள்ளாக்கியது. களியாட்டங்களிலும், ஆடம்பரங்களிலும் அதிகம் பிரியம் கொண்டவர், தனது பதவிக்காலத்தைக் கொழும்பிலேயே கழித்தவராவார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சொல்லும் படியான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவில்லை. கருணாவைப் பிள்ளையான் பெரிதளவில் அரசியலில் முன்னிலைப்படுத்த விரும்பவேயில்லை. இருவருக்கும் எப்போதுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் முறுகல் நிலை காணப்பட்டது.
கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகியபோது பிள்ளையான், இனியபாரதி என சிலரும் இவருடன் சேர்ந்து விலகியிருந்தனர். தமிழினத்தை ஏமாற்றித் தனது அரசியல் பிழைப்பைப் பிள்ளையான் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார். தற்போது யோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக இருக்கலாமென சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணாவின் வீழ்ச்சியானது மகிந்தவின் தோல்வியுடன் ஆரம்பமாகியது. தனது ஆதரவுத் தளத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை கருணாவுக்கும் தேவையாக இருந்தது.பிள்ளையானின் ஓரளவு ஆதரவையேனும் வைத்துக் கொள்ளாதவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமின்றி தேசியப் பட்டியலூடாக வரவே முயன்று கொண்டிருந்தார். சுதந்திரக் கட்சியில் ஒற்றுமையின்மை, போட்டிகள், நெருக்கடிகள் ஒன்றாக இருந்தமையால் மைத்திரி-மகிந்த அணியினர் கருணாவைக் கணக்கிலெடுக்கவில்லை. மகிந்தவுடனா? மைத்திரியுடனா? என்ற கேள்வியோடு மகிந்தவுடனே ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மகிந்தவுக்கே அடிமையானார்.
தேசியப்பட்டியலூடாக மீண்டும் மூன்றாவது தடவையாக நுழைந்துவிட வேண்டும் என்ற அவாவில் அதற்கான காய்களை நகர்த்தினார். மகிந்த அணியினரும் தேசியப் பட்டியலுக்குள் கருணாவைச் சேர்ப்பதற்கு முடிவு செய்தனர். தேர்தலும் முடிந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேசியப் பட்டியலூடாக நியமிக்கப்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளிவந்தபோது கருணாவின் பெயர் இருக்கவில்லை. கருணா அம்மான் திட்டினார், துவண்டார். இனிமேல் அரசியலில் இடமில்லை. மகிந்த இப்படித் துரோகம் செய்துவிட்டாரே எனக் கொதித்தார்.
ஊடகவியலாளர்களைக் கூட்டித் தனது நிலைப்பாட்டை எடுத்துக்கூறி ஒப்பாரி வைத்தார். ஐயகோ நான் யாரிடம் போய் சொல்லுவேன் எனக்கு இப்படி ஒரு கொடுமையா இது நீதியா மகிந்த, சுசில், அநுரா ஆகியோர் இப்படித் துரோகம் செய்யலாமா என புலம்பினார். ஒரேயடியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கருணாவை தூக்கி எறிந்துவிட்டது. தான் செய்த துரோகத்தனங்களையும் கழுத்தறுப்புக்களையும் நாகூசாமல் வெட்கமில்லாமல் ஊடகவியலாளர் கண்முன் ஒப்புவித்தார். இறுதிப்போரின்போது மகிந்த அரசுக்கு விடுதலைப் புலிகளையும், போராட்டத்தையும், ஓரளவு மக்களையும் அழித்தொழிப்பதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்து கொடுத்து துரோகத்தனத்துக்குப் பரிசாக பல வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டார். உண்மைகளைத் தானாகவே முன்வந்து வெளிப்படுத்தியிருந்தார்.
பொதுத்தேர்தலுக்கு முன்னர் ஜூலை மாதம் அளவில் உயிருடன் கைது செய்யப்பட்டே பிரபாகரன் மகிந்த ராஜபக்சவிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பிரபாகரனை மகிந்த கடுமையாகத் தாக்கியதாகவும் மகிந்தவின் ஆட்சியிலிருந்த இரண்டு முக்கிய அமைச்சர்கள் இருவர்தன்னிடம் அப்போது கூறியதாகவும் இதுபற்றி மகிந்தவிடம் தான் கேட்டதாகவும் தன்னைப் பார்த்து சிறிதாக புன்முறுவல் செய்துவிட்டு வேறு விடயத்தை பேசினார் எனக் கூறிய கருணா பிரபாகரனைக் கைது செய்தவிடயம் நூற்றுக்கு நூறுவீதம் உண்மைதான் என உறுதிப்படுத்தித் தெரிவித்திருந்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு தனது புழுகைக் கூறி பெருமைப்பட்டிருந்தார்.
ஓகஸ்ட் மாதம் இதே கருணா இந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தபோது வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரில் பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டாரெனவும் அவரது மனைவி, மகள் ஆகியோர் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் பொட்டம்மானும் குண்டுகளை வெடிக்கவைத்துத் தன்னைத்தானே அழித்துக் கொண்டதாகவும் மேலும் தெரிவித்திருந்தார்.
கருணா கூறியவைகளிலிருந்து தமிழ் மக்கள் அவரின் துரோகத்தனத்தையும் இரட்டை வேடங்களையும் புரிந்து கொள்வதோடு மனநோயாளி ஒருவர் கூறுவதுபோல் பிரபாகரன் பற்றிய விடயங்கள் இருப்பதாகவுமே கருதுகின்றனர். தனக்கு தேசியப்பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகிடைக்காத நிலையில் தனது எண்ணத்துக்கு அமைந்தாற்பேசவும், தேர்தலுக்குமுன் ஒரு கருத்தையும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் கூறிப் புலம்புகின்ற நிலைக்குத் தரம் குறைந்த ஓர் அரசியல்வாதியாகிவிட்டார்.
கருணா அம்மானை எப்படி விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் இருந்து பிரித்தது பற்றிய முழுவிவரங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மெளலான சிலோன் ருடே பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். கருணா அம்மானுடன் நட்புறவுகளை வளர்த்து அரசியல் ரீதியில் ஒன்றாகிவிட்டதாகக் கூறினார். ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களையும் எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கருணாவையும் அவரது குழுவினரையும் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாகவும் தம்புள்ளவில் இராப்போசனம் அருந்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
கருணாவின் காட்டிக்கொடுப்புக்கள் துரோக்கத்தனங்கள் தமிழினத்தின் போராட்டத்தை எப்படி அழித்தது என்பதும் மைத்திரி நல்லாட்சியில் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்தாலும் இதற்குப் பின்புலமாக இருந்தவரான இன்றைய பிரதமரான ரணிலும் மகிந்த ஆட்சியில் முக்கிய அமைச்சர் பதவியை வகித்து மகிந்தவுக்கே சவால் விட்டு ஒரு அப்பத்துடன் கதையை முடித்துவிட்டு இன்று ஜனாதிபதியாக பதவியிலிருப்பவரான மைத்திரிபால சிறிசேனவும் அப்போது மகிந்த ஆட்சியிலிருந்தபோதும் கருணா அம்மான் வேண்டப்பட்டவராகவேயிருந்தார். ஆனால் இன்று தூக்கி எறியப்பட்டுள்ளார். தமிழ் மக்களின் அவமானச் சின்னமாகவே கருணா என்ற நாமம் இருக்கும் என்ற உண்மை யாவருக்கும் புரியும்.
மு. ஈழத்தமிழ்மணி