“ஒரு நாடு ஒரு சட்டம்” என்றால் இரு முறை ஆயுதக் கிளர்ச்சி

519

 

ஜேவிபி யின் அதி முக்கியஸ்த்தர் மொகமட்  நிஷ்மியின் நினைவாக, பெரெதெனியாவில் “நிஷ்மி ஹோல்”  மரணித்தவர்களின் நினைவாக – பெரதெனியா –  ஸ்ரீ ஜெயவர்த்தனபுர – வயம்பவில் நினைவு சின்னங்கள்… யாழ் பல்கலையில் மட்டும்  நினைவழிப்பா?

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் நினைவாக கட்டி எழுப்பப்பட்ட நினைவுத் தூபி நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. யுத்தத்தின் கோர நினைவுகளை, அனுபவங்களாக சுமப்பதற்கும், உணர்வுகளை மீட்பதற்குமான உரிமைகளும் மறுக்கப்படுவதனால் சாதிக்கப்போவது என்ன என்ற கேள்விகள் அனைவரையும் துளைத்துக்கொண்டு இருக்கின்றன.

உலகப் போர்கள் நினைவுகொள்ளப்படுகின்றன. நாடுகளின் சுதந்திர விடுதலைப் போராட்டங்கள் நினைவுகூரப்படுகின்றன. விடுதலைப் போர்களிலும், யுத்தங்களிலும் மரணித்தவர்கள் காவு கொள்ளப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் நினைவு கொள்ளப்படுகிறார்கள்.

“80களில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் என் சகோதரர் காணாமல் போனார். அவரை தேடி அலைந்த என் அம்மாவின் சோகம் கொடியது. அப்படித்தான் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மாரின் வேதனையும் இருக்கும் என்பதனை நான் அறிவேன். காணாமல் போன உறவுகளை தேடுவதற்கும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கேட்பதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது” என J.V.Pயின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க ஒரு முறை கூறியிருந்தார்.

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்றால் இரு முறை ஆயுதக் கிளர்ச்சியை மேற்கொண்ட, தடைக்கு உள்ளாகி இருந்த ஜேவிபிக்கு இருக்கின்ற உரிமைகள் மற்றய சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இல்லையா?  என்ற கேள்விகள் இலங்கையை ஆண்ட, ஆளுகின்ற அரசாங்கங்களை நோக்கி எழுகின்றன.

இங்குதான் ஒரு முக்கியமானதும், பேசப்பட வேண்டியதுமான சில விடயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியான 1971லும், 80களின் பிற்பகுதியில் இடம்பெற்ற 2ஆவது கிளர்ச்சியின் போதும், பிரதான பங்கினை வகித்தவர்கள் JVPயின் பல்கலைக்களக மாணவர் அமைப்புகளில் இருந்தவர்கள்.

குறிப்பாக 1977ல் ஆரம்பிக்கப்பட்டு 1978ல்  Inter University Students’ Federation ஆக விரிவாக்கிய  (IUSF) வில் 70 மாணவர் அமைப்புகள் அங்கம் விகிக்கின்றன. இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பக் கல்லுரிகள் உள்ளிட்ட 15 உயர்கல்வி நிறுவனங்களில் அமைப்புகளை கொண்டிருக்கும் JVPயின் மாணவர் அமைப்பே இலங்கையின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக விளங்குகின்றது.

1990 ஜனவரியில் தனது 39 ஆவது வயதில் கொல்லப்பட்ட சாந்தா பண்டாரா அல்லது மகாநாம பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் (IUSF ) முதல் தலைவராகவும், இலங்கையில் மார்க்சிச-லெனினிச அரசியல் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் முக்கிய தலைவராகவும்  மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

முன்னிலை சோசலிச சட்சியின் தலைவரும், முன்னாள் ஜேவிபியின் மத்திய குழு உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக மாணவருமான குமார் குணரட்ணத்தின் அண்ணா ரஞ்சிதம் குணரத்னம் – IUSFன் மற்றுமொரு முன்னாள் தலைவராக இருந்தவர்.  இவரும் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன்.  1985 ஆம் ஆண்டில் பேராதெனிய பகுதியில் நடவடிக்கை குழுவின் தலைவராகவும்  இருந்தவர். (Peradeniya AC (Action Committee)  தலைவராகவும், ஜேவிபி மத்திய குழு உறுப்பினராகவும், அதன் குருனாகல் மாவட்டத் தலைவராகவும் இருந்தார். இவர்  1989 டிசம்பர் இல் கடத்தப்பட்டு, குருனாகல வெஹெராவில் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

1987ல் பேராதெனிய பல்கலைக்களகத்தினதும், பேராதெனியபகுதியினதும் ஜேவிபியின் IUSF  மாணவர் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ‘மோட்டா’ ‘கமல்’ என்ற பெயர்களில் தொழிற்பட்ட பொறியியல் பீட மாணவர்,  தோழர் மொகமட்  நிஷ்மி JVPயின மத்தியகுழு உறுப்பினராக இருந்தவர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தை, ஜேவிபியின் முழுமையான கட்டுக்குள் கொண்டு வந்தவராகவும், மாணவர்களை ஜேவிபி மயப்படுத்தியவராகவும், மாணர்களின் நாயகனாகவும் (Hero) இன்றளவும் நினைவுகூரப்படும்  தோழர் மொகமட்  நிஷ்மியின் பெயரில் அஹ்பர் ஹோலின் பின்புறமாக உள்ள  நிஷ்மி ஹோல் விளங்குகிறது. மாணவர் விடுதியாக விளங்கும் இந்த ஹோல்,  தோழர் மொகமட்  நிஷ்மியின் ஞாபகார்த்தமாக “நிஷ்மி ஹோல்” என அழைக்கப்படுகிறது.

ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில், பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டபோது, ஜேவிபியின் மாணவர் இயக்கம் இலங்கை முழுவதும் வெகுஜன அமைப்புகளுடன் செயல்படுவதற்கான மூளையாக தொழிற்பட்டவர் மொகமட்  நிஷ்மி. ஜேவிபியின் மக்கள் அமைப்புகளை அமைத்தல், மக்கள் குழுக்களை ஒழுங்குபடுத்தல், தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மனித உரிமை அமைப்புகளை கட்டியமைத்தல் பணிகளில் ஈடுபட்டவர்.

தோழர் நிஷ்மி, பொலன்னறுவை, அனுராதபுர மாவட்டங்களின்  மாணவர் அமைப்புகளுக்கு  தலைவராகவும் செயற்பட்டவர். கெகல்லே, ரத்னபுரா, கண்டி, மாதலே, நுவரா எலியா மற்றும் வட மத்திய மாவட்டங்களிலும் பணியாற்றினார். இறுதியாக 1990ல் அவர் கடத்தப்பட்டு கொல்லப்படும் வரை, ஜேவிபியின்   அவர் கொழும்பு மாவட்ட முக்கியஸ்த்தராக விளங்கியவர்.

1989 – 90களில் வட மத்திய மாகாணத்தில் இளைஞர்கள் யுவதிகளை கடத்தி சித்திரவதை செய்து கொல்லும் பிரதி காவற்துறைமா அதிபராக இருந்த உடுகம்பொலவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய, தோழர் மொகமட்  நிஷ்மியின் ஞாபகார்த்தமாக பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் மாணவர் விடுதி ஒன்று “நிஷ்மி ஹோல்” என இன்றளவும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறே பொதுவெளியில் அறியப்பட்டவர்களாகவும், போராட்டங்களோடு தொடர்புபட்டவர்களாகவும், பின்னர் இலங்கை அரசியலில் பிரவேசித்த சிலராகவும் விளங்குகின்ற, சுனில் ஹண்டுன்னெட்டி, Ravindra Mudalige, Chameera Koswatta, Duminda Nagamuwa,  Udul Premaratne –  Sanjeewa Bandara –  Najith Indika, Lahiru Weerasekara ஆகியோரும் JVPயின் புரட்சிகர மாணவர் அமைப்பான IUSFன் தலைவர்கள்.

இந்த IUSFன் தலைவர்களாகவும், செயற்பாட்டாளர்களாகவும், ஆதரவாளர்களாவும்க இருந்து, 80களில், 90களில் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 IUSF தலைவர்கள், 627 பல்கலைக்கழக மாணவர்கள், 5000யிரத்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நினைவாக, பேராதனை, வயம்ப, மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவிரவும் ஜேவிபியின் ISUF பல்கலைக்கழகங்களில் நடாத்தும் கலாசார விழாக்களில், (Kala Ulela venture) தனியாக உருவாக்கப்படும்,  மாணவர் வீரர்களின் அல்லது மாவீரர்களின் அறை (“Sisu Viru Kutiya”) (The Chamber of the Student Heroes). 1987-1990 களில் கொல்லப்பட்ட மாணவர்களின் வரலாறுகள், படங்கள், அவர்களின் தியாகங்கள் குறித்த குறிப்புகள் காட்சிப் படுத்தப்படுகின்றன.

இவையாவும், உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின், ஜனாதிபதியின், அரசாங்கத்தின், அமைச்சரவையின், பல்கலைக்கழக பேரவைகளின், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடனா மேற்கொள்ளப்படுகின்றன? அனுமதி பெறப்படாவிடின் இவை யாவும் இல்லாது ஒழிக்கப்படுமா? இங்கே ஒருநாடு ஒரு சட்டம் என்பது பின்பற்றப்படுமா?

குறிப்பு – இந்தப்பதிவின் நோக்கம் – ஜேவிபி கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள், போராளிகளை அவர்கள் நினைவு கூருவது தவறு என்று சொல்வதற்கானது அல்ல. இலங்கையர்கள் என்ற வகையில், தமது இழப்புகளை நினைவு கொள்வதற்கு, அந்த இழப்புகளுக்கான நினைவுச் சின்னங்களை பேணுவதற்கு அனைவருக்கும் உரிமை என்பதனை உரத்துக் கூறுவதற்கே.

நடராஜா குருபரன்:

SHARE