ஒற்றையாட்சியும் சமஸ்டியும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அல்ல!

568

 

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின் குடியரசு அரசியல் யாப்பு ஏற்பட்ட போதும்..,

1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் நிறைவேற்று ஜனாதிபதி முறை கொண்ட அரசியல் யாப்பு ஏற்பட்ட போதும் இத்தகைய ஆரவாரங்கள் இருக்கத்தான் செய்தன.

1972, 1978 அரசியல் யாப்புகள் உருவாக்கப்பட்ட போது, அந்த அரசியல் யாப்புகள் இலங்கையின் புரையோடிப்போன இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு நாட்டை சுபீட்சப்பாதையில் கொண்டு செல்லப்போவதாகத்தான் அதை வகுத்தவர்கள் கூறினர்.

ஆனால் நடைமுறையில் நடந்தது வேறு. 1972 அரசியல் யாப்பில் பல முற்போக்கான அம்சங்கள் இருந்தாலும், இனப் பிரச்சினையை அது கூர்மைப்படுத்தியது.

1978 அரசியல் யாப்பில் முன்னர் இருந்த அரைகுறை ஜனநாயக அம்சங்களும் இல்லாதொழிக்கப்பட்டதுடன், இனப் பிரச்சினையையும் யுத்தமாக மாற்றியது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தற்போது வரையப்படவுள்ள அரசியல் யாப்பு எத்தகைய தன்மை வாய்ந்ததாக இருக்கப் போகிறது, அது நடைமுறைக்கு வந்தால் என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்ற கேள்விகள் எழுவது இயல்பானது.

இலங்கையில் மற்றைய எல்லா முரண்பாடுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இனப் பிரச்சினைதான் முன்னுக்கு வந்து நிற்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

அதனால்தான் இடதுசாரிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பியினர் 1971இலும் 1988-89 காலகட்டத்திலும் முன்னெடுத்த ‘வர்க்கரீதியிலான’ ஆயுதப் போராட்டம் குறுகிய காலத்தில் ஒடுக்கப்பட்டுவிட, தமிழீழம் என்ற தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நீண்டகாலம் நிலைத்து நின்றதுடன், தனியான ஆட்சிப் பிரதேசத்தையும் நீண்டகாலம் வைத்திருந்தது.

ஆனாலும், தனிநாட்டுத் தீர்வு என்பது அரசியல் ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் தமிழ் மக்களுக்கு பொருத்தப்பாடு இல்லாத ஒன்று என்றபடியால், அந்தப் போராட்டமும் இறுதியில் தோல்வியில் முடிவடைந்தது.

ஆனால் தனிநாட்டுத் தீர்வு தமிழ் மக்களுக்குப் பொருத்தப்பாடு இல்லாவிட்டாலும், அவர்களுக்கு தேசிய இனப் பிரச்சினை ஒன்று உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அதனால்தான், புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் நேரங்களிலெல்லாம், அதில் இனப் பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களுக்கு ஏற்படுவது ஒரு வழமையாக இருந்து வருகிறது.

தற்போது இன்னொரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட இருக்கிறது என்றதும் தமிழ் மக்களுக்கு மீண்டும் அப்படியான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இதுவரை காலமும், இன்றும் நிலவும் யதார்த்தம்தான் என்ன?

தென்னிலங்கையைப் பொறுத்தவரை, ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. போன்ற பிரதான கட்சிகள் உட்பட, இடதுசாரிக் கட்சிகளைத் தவிர ஏனைய அத்தனை கட்சிகளும் இலங்கை இறுக்கமான ஒற்றையாட்சி கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.

sac-580x330  ஒற்றையாட்சியும் சமஸ்டியும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அல்ல! sacஇன்று ஆட்சியில் இருக்கும் மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று சொன்னாலும் கூட, அந்தத் தீர்வு ஒற்றையாட்சிக்குள் உட்பட்டதாகவே இருக்கும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள்.

மறுபக்கத்தில், தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் மூத்த தமிழ் கட்சியான தமிழ் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பதையும், பின்னர் தமிழரசுக் கட்சி சமஸ்டிக் கொள்கையையும், பின்னர் இரு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கொள்கையையும் முன்வைத்தார்கள்.

ஆனால் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் ஒன்று 30 வருட காலம் நடந்து தோல்வியிலும் பாரிய அழிவிலும் முடிந்த பின்னர், இன்று ஏறக்குறைய அனைத்துத் தமிழர் தரப்புகளும் மீண்டும் சமஸ்டி என்ற கொள்கைக்கு வந்திருக்கின்றன.

அதாவது இன்றைய யதார்த்தம் என்னவென்று பார்த்தால், சிங்களப் தரப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்தும் நிலையும், தமிழர் தரப்பு சமஸ்டி கொள்கையை வலியுறுத்தும் நிலையுமே காணப்படுகிறது.

அதாவது இருதரப்பினரும் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இனப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட போது என்ன நிலைப்பாட்டில் இருந்தனரோ, அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கின்றனர். இந்த எதிரும் புதிருமான நிலை இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு ஒருபோதும் உதவாது.

முதலில் அரச தரப்பை அல்லது சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முழுத்தரப்பையும் எடுத்துக் கொண்டால், அவர்கள் ஒற்றையாட்சியைத் தொடர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பது தவறானது.

அப்படி அவர்கள் இருப்பது மனித நீதிக்கு அப்பாற்பட்டது என்பது மாத்திரமல்ல, மீண்டும் இலங்கையில் இனப் பிரச்சினையை உக்கிரப்படுத்தவே உதவும்.

அதுவும் இலங்கை இனப் பிரச்சினையில் சர்வதேச சக்திகள் என்றழைக்கப்படும் வல்லாதிக்க சக்திகளின் ஆதிக்கம் நேரடியாக ஏற்பட்டு, இலங்கையில் அவர்களுக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றும் ஏற்பட்ட பின்னர், சிங்களத் தரப்பினர் தொடர்ந்தும் பேரினவாதக் கொள்கையில் விடாப்பிடியாக நின்றால், அது இலங்கையில் பங்களாதேஸ், சைப்பிரஸ், கிழக்கு திமோர், எரித்திரியா, சூடான் போன்ற பிரச்சினைகளில் இந்த வல்லாதிக்க சக்திகள் தலையிட்டு தமக்குச் சார்பாகத் தீர்வு கண்டது போன்ற நிலையைத்தான் உருவாக்கும்.

மறுபக்கத்தில், தமிழர் தரப்பு காலத்துக்காலம் பல தீர்வுகளை முன்வைத்து இன்று மீண்டும் சமஸ்டிக் கொள்கையை வந்தடைந்திருப்பது, அவர்கள் இலங்கையில் நிலவும் யதார்த்த சூழலில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை எவ்வாறு தீர்வு காண்பது என்பதில் தெளிவில்லாதவர்களாக அல்லது தமது சுய அரசியல் இலாபத்துக்காக பிரச்சினையைத் தீர்க்க விரும்பாதவர்களாக இருந்துள்ளார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

அதேநேரத்தில் இன்று அவர்கள் முன்வைக்கும் சமஸ்டித் தீர்வு கூட, இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சரியான வழிமுறை அல்ல.

தமிழரசுக் கட்சி 1949இல் உருவாக்கப்பட்ட போதுதான் சமஸ்டிக் கொள்கை முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. அதுவும் அக்கட்சி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுவதற்காக தமிழில் ‘தமிழரசுக் கட்சி’ (அதாவது தமிழர்களுக்கு தனியான அரசு வேண்டும் கட்சி என்ற அர்த்தப்பட) என்றும், சிங்கள மக்களையும் உலகையும் ஏமாற்ற ஆங்கிலத்தில் Federal Party (சமஸ்டி கட்சி) என்றும்தான் பெயர் சூடியது.

அவர்கள் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்த காலத்தில் இல்லாவிட்டாலும், 1956 தேர்தலில் அவர்கள் தமிழ் காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழ் பேசும் மக்களின் பிரதான அரசியல் கட்சி ஆன பின்னர், வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் மத்தியிலும் தமிழரசுக் கட்சிக்கு செல்வாக்கு ஏற்பட்டது..

அதன் காரணமாக வடக்கு மற்றும் மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள் உட்பட “35 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் தலைவர்” என தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அழைக்கப்பட்டார்.

ஆனால், தமிழரசுக் கட்சியின் இனவாதக் கொள்கை காரணமாக காலப்போக்கில் முஸ்லீம் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் தத்தமது யதார்த்தச் சூழலுக்கு ஏற்ப தமக்கான அரசியல் தலைமையை உருவாக்கிக் கொண்டு, பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் இணக்க அரசியலுக்குச் சென்றுவிட்டனர்.

அதுமாத்திரமல்லாது, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மையவாதத் தலைமையிலிருந்து விடுபட ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு பக்கத்தில் அன்று கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஒரு சூழலில், வடக்கையும் கிழக்கையும் சேர்த்து தமிழரசுக் கட்சி சமஸ்டி அமைப்புக் கோரியதற்கு அவர்கள் அளவிலாவது ஒரு நியாயப்பாடு இருந்தது.

ஆனால் அவர்களது நடைமுறைச்சாத்தியமற்றதும், புத்திசாலித்தனமற்றதுமான கொள்கைகளால் கிழக்கின் இன விகிதாசாரம் பெருமளவு மாறிவிட்டது.

இன்று கிழக்கில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கினராகவும், தமிழர்கள் மூன்றில் ஒரு பங்கினராகவும் வாழும் சூழல்தான் நிலவுகின்றது.

அதும்டுமல்லாமல், வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லீம் மக்கள் தமக்கென தனியான முஸ்லீம் நிர்வாக அலகொன்றைக் கோருகின்ற நிலைமையும் உருவாகிவிட்டது.

இந்தச் சூழலில், வடக்கையும் கிழக்கையும் சேர்த்து இலங்கைத் தமிழர்களுக்கென்று சமஸ்டி அமைப்பைக் கோருவது நடைமுறைச்சாத்தியமற்றது, பொருத்தமில்லாதது, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்கக்கூடியது.

poll-corr-cartoon-2  ஒற்றையாட்சியும் சமஸ்டியும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அல்ல! poll corr cartoon 2எனவே தமிழ் தலைமைகள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல “சமஸ்டி..சமஸ்டி”என்று மீண்டும் மீண்டும் சொல்வதால், எந்தவிதமான ஆக்கபூர்வமான நன்மையும் நிகழப்போவதில்லை.

அதுமாத்திரமின்றி, சிங்கள இனவாத சக்திகள் மட்டுமின்றி, ‘நல்லாட்சி’ என்று கூறிக்கொண்டு, மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பறித்து வரும் இன்றைய அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது நிலைப்பாடு ஒற்றையாட்சிதான் என்பதைப் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வலியுறுத்திச் சொல்லிவிட்டார்கள்.

எனவே, புதிய அரசியல் அமைப்பு மூலம் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வரப்போகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்துகின்ற மாலை போலித்தனமானது.

உண்மையில் தமிழ் தலைமைகள் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண விரும்பினால், நடைமுறைச்சாத்தியமற்ற சமஸ்டிக் கொள்கையில் தொங்கிக் கொண்டிருக்காமல், யதார்த்த நிலைமைக்கு ஏற்பச் செயற்பட வேண்டும். அப்படிச் செய்வதானால் அவர்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன.

chandrika-o  ஒற்றையாட்சியும் சமஸ்டியும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அல்ல! chandrika oஒன்று, 2000ஆம் ஆண்டில் அப்போதைய சந்திரிக குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் முன்வைத்த அரசியல் தீர்வு யோசனைகளில் உள்ளடங்கியிருந்த வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களை ஒன்றிணைத்து அமைப்பதற்கு உத்தேசித்திருந்த ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’என்ற திட்டத்தை அமுலாக்கக் கோருவது.

சந்திரிகா இன்றைய அரசை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததால், அவர் மூலமே இந்த நகர்வைச் செய்ய முடியும்.

அந்த முயற்சிக்கு இடதுசாரிக் கட்சிகளினதும், ஐ.தே.க, சிறீ.ல.சு.கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளினதும் ஆதரவையும் பெற முடியும். (முஸ்லீம் மக்களின் தனி அலகுக் கோரிக்கையையும் சாதகமாகப் பரிசீலிப்பது அவசியமானது)

இரண்டாவது, தற்போதுள்ள மாகாணசபை முறைமையை இந்தியாவினது உதவியுடன் முழுமையாக (காணி – பொலிஸ் அதிகாரங்கள் உட்பட) அமுலாக்கக் கோருவது.

இந்த இரண்டு வழிமுறைகளுமே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு சாத்தியப்படக்கூடிய தீர்வுகளாகும். அதைவிடுத்து, சமஸ்டி என்று மீண்டும் கோருவது நடைமுறைச்சாத்தியமற்றது மட்டுமல்ல, அந்த வார்த்தையால் (அது பிரிவினைக்கொப்பானது என) ஏற்கெனவே அரண்டு போயிருக்கிற சிங்கள மக்களை மேலும் அச்சமூட்டி பிரச்சினையைச் சிக்கல்படுத்துவதிலேயே முடியும்.

மேற்கத்தைய சக்திகளின் உதவியுடன் இலங்கையில் அவர்களுக்குச் சாதகமான மைத்திரி – ரணில் அரசு உருவாகியிருக்கின்ற இன்றைய சூழலை பொன்னான வாய்ப்பு என்று வர்ணிக்கின்ற, அந்த அரசுடன் சங்கமித்துப் போய் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இதர தமிழ்த் தலைமைகளும், இதைக் கவனத்தில் கொள்வார்களா அல்லது வழமைபோல இனவாதமும் பிரிவினைவாதமும் பேசி, தமிழ் சமூகத்தை மீண்டும் மீண்டும் படுகுழியில் தள்ளப் போகிறார்களா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

-வானவில் இதழ்-

SHARE