ஒற்றையாட்சி முறையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

272
அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண முடியுமா என்ற சந்தேகம் தற்போது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மாற்றத்தில் அரசியல் தீர்வுக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும். இவ்வாறான நிலையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு இணக்கப்பாடுகள் காணப்பட வேண்டியது அவசியமானது.

ஆனால், அரசியல் தீர்வை எந்தவகையில் காண்பது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்குமிடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.

அரசாங்கமானது ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்படும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் ஒற்றையாட்சி முறையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்தும் இருக்கின்றது.

இதனால் தீர்வுக்கான அடிப்படை விடயத்திலேயே முரண்பாடு எழுந்திருக்கின்றது. இந்த முரண்பாட்டை அடுத்தே தீர்வு சாத்தியமா? என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் கடந்த வாரம் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு எனக்கு இடமளியுங்கள். ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பினை நாம் உருவாக்கமாட்டோம். மக்களைக் குழப்பும் வகையிலான வீணான எதிர்ப்புக்களை அனைவரும் கைவிடவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மக்களுக்கான அரசியலமைப்பை தயாரித்து அதனை பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம். இதன் பின்னர் மக்களின் கருத்தினை அறியும் பொருட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளேன் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்திலிருந்து ஒற்றையாட்சிக்குள்ளேயே அரசியல் தீர்வு காணப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாகின்றது. இதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியிருக்கின்றது.

கடந்த வாரம் இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, ஆகியோர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணங்கியுள்ளனர். ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசியல் தீர்வை காண முடியும்.

இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தும். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த தயாராக உளளன என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவர்களது கருத்துக்களிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை தீர்வாக வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளமை தெளிவாகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும், ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டுக்குள் சிக்குண்டுள்ள நிலையில் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளமை தெளிவாகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே அவசியமாகும். இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஒற்றையாட்சிக் கோட்பாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது. முஸ்லிம்களையும், அரவணைத்துக் கொண்டு சிங்கள மக்களை பகைத்துக் கொள்ளாது நீடித்த நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். எமது மக்கள் ஏற்காத எத்தகைய தீர்வினையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. என்றும் சம்பந்தன் எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி அடிப்படையிலான அதிகூடிய அதிகாரப்பகிர்வை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கிணங்கவே அரசாங்கத்துடனான எமது பேச்சுவார்த்தைகள் அமையும் என்று கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இதிலிருந்து இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் காணவேண்டும் என்பதே கூட்டமைப்பினரின் நிலைப்பாடாக உள்ளது.

கூட்டமைப்பினர் உட்பட ஏனைய தமிழ் தரப்பினரதும் நிலைப்பாடாகவும் இதுவே உள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி இந்திய முறைமையின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமென்று அன்றுதொட்டு வலியுறுத்தி வருகின்றார். மொத்தத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வு காணப்பட வேண்டுமென்பதே தமிழ் தலைமைகளின் நிலைப்பாடாக உள்ளது.

ஆனால், ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வினை காணமுடியுமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

ஒற்றையாட்சியை மீறி தீர்வினை காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒற்றையாட்சி வேண்டாம் என்றும் சமஷ்டியே தேவையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறிக் கொண்டிருக்கட்டும். ஆனால் நாங்கள் இதற்கு ஒருபோதும் இடமளியோம் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் மஹிந்த ஆதரவணியின் முக்கியஸ்தருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.

இதேபோல் சமஷ்டிக்குள் அதிகாரப் பரவலாக்கல் என்ற சம்பந்தனின் கருத்து நிராகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சியே உள்ளது என்று மஹிந்த அணியின் ஆதரவாளரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார கருத்துக் கூறியிருக்கின்றார்.

இவ்வாறு ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதற்கு எதிரணியினரும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ஆளும் கட்சியாக இருக்கலாம். எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஒற்றையாட்சிக்கு அப்பால் செல்வதற்கு சிங்கள தலைமைகள் தயாராக இல்லை என்ற சூழல் தற்போது காணப்படுகின்றது. உண்மையிலேயே இந்த நிலைப்பாடானது தவறானது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர்வுத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. இந்த தீர்வுத் திட்டத்தில் சமஷ்டி முறை என்ற பெயர் இடம்பெறாத போதிலும் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் அதிகாரப் பரவலாக்கல் முறைமை அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

2000ம் ஆண்டு இந்த அரசியல் தீர்வுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக எதிர்த்தமையினால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதேபோல், 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவி வகித்தது. ஜனாதிபதியாக சந்திரிக்கா குமாரதுங்க பதவி வகித்திருந்தார்.

2002ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி முறையின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணங்கியிருந்தன.

இந்த இணக்கப்படானது ஒஸ்லோ தீர்மானம் என அன்று அழைக்கப்பட்டது. ஒஸ்லோ பிரகடனத்தில் சமஷ்டி தீர்வுக்கு அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் இணங்கியிருந்தது.

இவ்வாறு ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று தீர்வைக் காண்பதற்கு அன்று இணங்கிய சிங்களத் தலைமைகள் இன்று அதனை மறுத்து ஒற்றையாட்சிக்குள் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.

எனவே, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தரத் தீர்வைக் காண வேண்டுமானால் ஒற்றையாட்சிக்கு அப்பால் செல்ல தேசிய தலைமைகள் முன்வரவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

SHARE