பொருளாதார மத்திய மையம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்ற போதிலும் அரசியல் ராஜதந்திர ரீதியாக அரசாங்கம் தனது அணுகுமுறையை மேற்கொண்டு வருகின்றது. அதனொரு கட்டமாக சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனுடைய பின்னணி பற்றி அறிந்தும் தனது செயற்பாடுகளை தனது கௌரவத்தின் நிமித்தம் ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய மையம் அமையவேண்டும் என்பதில் குறிக்கோளாகச் செயற்பட்டு வருகின்றார்.
விசேட பொருளாதார மத்திய மையம் தொடர்பில் அதன் வரலாற்றுக்களை எடுத்துப் பார்த்தால் மொத்த முதலீடு ரூபா இரண்டு லட்சம் மில்லியன் (இலங்கையில் தம்புள்ள, நுவரேலியா, மற்றும் வவுனியா) 2016 பாதீடு ரூபா 200 மில்லியன் (300 கடைகள், 05 குளிரூட்டப்பட்ட சேமிப்பு அறைகள் அதோடு 25 பேருக்கான வேலைவாய்ப்பு) இது அமைக்கப்படவிருக்கின்ற பொருளாதார மத்திய மையத்தினுடைய அடிப்படைத் திட்டமாகும். இப் பொருளாதார மையம் அமைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களைப் பார்க்கின்றபொழுது,
1. செப்டெம்பர் 2015ல் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜனாதிபதியுடனான மீள்குடியேற்றக் கூட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மத்திய மையம் அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையில் பல்வேறு விடயங்களும் பேசப்பட்டிருந்தன.
2. 20.10.2015ல் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் செயலாளருக்கு கடிதம் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் காணி கோருதல் என்பதாகும்.
1. 2 கிலோ மீற்றர் தூரம்
2. 3 – 5 வரை ஏக்கர் காணி
3. பிரதான வீதிக்கு அருகில்
4. மின்சாரம் நீர் வசதி
இந்த அடிப்படையின் கீழேயே இந்த பொருளாதார மத்திய மையம் அமைக்கப்படுகின்ற இடம் தேர்வு செய்யப்படவேண்டும் என்பது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் அவர்களுடைய பிரதான கோரிக்கையாகும்.
3. 04.11.2015ல் அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் குறிப்பாக அதே தெரிவு நிபந்தனைகளுடன் எழுதப்பட்டிருந்தது.
4. 16.11.2015ல் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா பொறுப்பு உத்தியோகத்தர் பிரதேச செயலாளரிடம் காணி கோரிக் கடிதம் மிகத் துரிதமாக முன்னெடுக்கப்பட்டது.
5. 24.11.2015ல் பிரதேச செயலாளர் இரண்டு காணிகளை அடையாளப்படுத்தி பதில் கடிதம்
1. மாணிக்கவளவு தனியார் காணி படத்துடன் கூடியதாக
2. 2004 ஒதுக்கப்பட்ட ஓமந்தைக் காணி
இதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் மாணிக்கவளவு தனியார் காணி என அடையாளம் காணமுடியாமல் உள்ளதாக அறிவிப்பு
6. கௌரவ அமைச்சர் ஹரிசன் வவுனியா விஜயம். ஓமந்தைக் காணிக்கு விஜயம் செய்து நேரில் பார்வையிட்டார். இக்காணி தூரமானதால் அதனை மறுத்த ஹரிசன் பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் காணி தருமாறு மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
7. 25.01.2016ல் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன், கௌரவ விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் பங்கேற்காத நிலையில் நடைபெற்றது. பேரூந்து நிலையத்திற்கு அருகில் இருந்த காணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தாண்டிக்குளம் மேட்டுக் காணி, ஓமந்தை மாணிக்கவளவுக் காணி பார்வையிட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
8. தை மாதம் இறுதிப்பகுதியில் இக்குழு விஜயம் செய்து அறிக்கையை அரசாங்க அதிபரிடம் சமர்ப்பித்தது. அதில் ஓமந்தை காணி சாதகம் என்றும், தாண்டிக்குளம் பாதகம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. காரணம் என்னவென்றால் வவுனியாவில் இரண்டு குழுக்கள் எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் செயற்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை தாங்கிய குழு ஓமந்தையெனவும், மாகாண சபை அமைச்சர் சத்தியலிங்கத்தினை தாங்கிய குழு தாண்டிக்குளம் எனவும் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தமையே காரணமாகும்.
9. 10.01.2016ல் வவுனியா அரசாங்க அதிபர் கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் பல்வேறு காரணங்கள் சுட்;டிக்காட்டப்பட்டிருந்தன.
10. 14.03.2014ல் இரண்டு மாத காலங்கள் ஆகியும் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் பதில் எதுவும் வரவில்லை. இதற்கிடையில் வவுனியா அரசாங்க அதிபரினால் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. இதிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் (பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனைத் தவிர) எவரும் பங்கேற்கவில்லை. இதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதம் வாசிக்கப்பட்டது. அதி விசேடமாக தாண்டிக்குளம் காணி வழங்கபடமாட்டது என்றும் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் காணி வழங்கப்படாவிடின் திட்டம் வேறுமாவட்டத்திற்கு மாற்றவுள்ளதாக அமைச்சர் ஹரிசன் தனக்குத் தெரிவித்ததாக இணைத்தலைவரான அமைச்சர் ரிஷhட் பதியூதீன் அறிவித்தார். தாண்டிக்குளம் காணியை வழங்குமாறு மீண்டும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டது.
11. 11.04.2016ல் 16 விவசாய அமைப்புக்கள் கூடி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. தாண்டிக்குளத்தில் காணியை வழங்க அனுமதிக்குமாறு அதில் கோரப்பட்டது. அதற்கும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.
12. 22.04.2016ல் அரசாங்க அதிபரினால் அணைத்து இணைத்தலைவர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து இடங்கள் தெரிவு செய்து அதில் உள்ள சாதக பாதகத் தண்மைகள் உள்ளடக்கப்பட்டு குறிப்பாக இரண்டு இடங்கள் சிபரிசு செய்யப்பட்டது. அதில் ஒன்று தாண்டிக்குளம், அல்லது ஈரப்பெரியகுளம். இது இவ்வாறு இருக்க.
13. 24.04.2016ல் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா மாகாணசபை உறுப்பினர்கள் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதில் முதலமைச்சரிடம் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
1. ஓமந்தையில் பொருளாதார மத்திய மையம் அமைக்க ஹரிசனிடம் அனுமதி பெறுதல்
2. அது மறுக்கப்படுமிடத்தில் தாண்டிக்குளக் காணிக்கு முதலமைச்சர் அனுமதி வழங்குவது என்பதாகும். இதில் ஒரு விடயம் என்னவென்றால் ஹரிசன் ஓமந்தையை முற்றாக மறுக்கின்றார். அதேபோல் முதலமைச்சரும் தாண்டிக்குளத்தை முற்றாக மறுக்கின்றார். இதில் பாதிக்கப்படப்போது முதலமைச்சரும் அல்ல ஹரிசனும் அல்ல மக்களே!
14. 10.05.2016 அன்று அமைச்சர் ஹரிசன் தொலைபேசியில் அமைச்சர் சத்தியலிங்கத்தைத் தொடர்பு கொண்டு 11ம் திகதி மதியம் அமைச்சரவைக் கூட்டத்தில் அனுராதபுரத்திற்கு மாற்றத் தீர்மானித்துள்ளதாக ஒரு மிரட்டலை விட்டார். இதற்கிடையில் மாகாணசபை ஒன்று கூடியது. இவ்வாறு அமைச்சர் ஹரிசனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கின்றது. தாண்டிக்குள பொருளாதார மத்திய மையம் ஓமந்தையில் அமைப்பது சாத்தியமற்றது. தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய மையத்தினை அமைக்காது விடின் அமைச்சர் ஹரிசன் வேறு இடத்திற்கு மாற்றப்போவதாக என்னுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். எனவே நாம் அவசர அவசரமாக தீர்மாணத்தை எடுத்து பணம் திரும்பிப் போகதவகையில் அதை தடுத்து நிறுத்தும் முதலாவது செயல்நடவடிக்கையில் இறக்கவேண்டும். வடமாகாண சபையில் அமைச்சர்கள் உட்பட 23 பேர் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய மையம் அமைப்பதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் வவுனியாவை விட்டு நிதி வேறு இடத்திற்குச் செல்வதை தடுக்க தாண்டிக்குளத்தை வழங்குவது என்பதாகும். அதேவேளை வேறு இடத்தில் காணி சாத்தியப்படாவிடில் அமைவிடத்தை மாற்றவேண்டும் என்பதாகும்.
15. 11.05.2016 அமைச்சர் ஹரிசனுக்கு அவைத்தலைவரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அனுப்பிவைக்கப்பட்டது. இதன் பின்னர் வடமாகாண சபை உறுப்பினர்கள் இடையேயும், மாகாணசபை உறுப்பினர்கள் இடையேயும் கருத்துமுரண்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த பொருளாதார மத்திய மையம் அரசியல் மயமாக்கப்பட்டது. தென்னிலங்கை அரசியல் தலைமைகளும், யாழ் அரசியல் தலைமைகளும் வவுனியாவில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார மத்திய மையம் தொடர்பில் அநாவசியமான தலையீட்டை முடக்கிவிட்டிருந்தனர். இன்னமும் பொருளாதார மத்திய மையம் அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படவில்லை.
16. 13.06.2016 கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கொழும்பில் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் கூட்டம் இடம்பெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்ட விடயம் என்னவென்றால் ஜனநாயக ரீதியில் இவ் பொருளாதார மத்திய மையம் அமைப்பது தொடர்பில் முடிவினை எடுக்கவேண்டும் என்பதே. அதற்காக வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் அவர் அதற்கான முடிவினை ஜனநாயக ரீதியில் எடுத்து பொருளாதார மத்திய மையம் வவுனியாவில் எங்கு அமைப்பது என்பதை தெளிவாகச் செய்வார் என்பதேயாகும். இக் கூட்டத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்த விதத்தில் ஓமந்தை, அல்லது தாண்டிக்குளம் ஏதாவது ஒன்றை சம்பந்தன் அவர்கள் குறிப்பிடுவார்கள் என்றே அங்கு சென்றிருந்தனர். ஆனால் சம்பந்தனின் பதில் முதலமைச்சரையும், கட்சித் தலைவர்களையும் முட்டிமோதவிட்டு அதிலிருந்து பதிலை எடுத்து மக்களுக்கு அறிவிப்பதே என்பதாகும். அது அவரது அரசியல் ராஜதந்திரம். இதில் ஒரு உதாரணக் கதையை கூறுவது என்பது சிறந்ததாகும்.
கலைஞர் கருணாநிதியுடன் முப்பந்தைந்து வருடங்கள் அரசியலில் ஈடுபட்டு வந்த அவரது இடது கையென்று கூடக் கூறலாம். கலைஞர் கருணாநிதியுடைய அணைந்து விடயங்களையும் கவனிப்பத்தில் தலைசிறந்து இந்நபர் விளங்கினார். பல மேடைகளில் ஏறி இறங்கும் போதெல்லாம் கட்சியில் பணிபுரியும் ஏனையவர்களுக்கு மாலை அணிவிப்பதும், மோதிரம் அணிவிப்பதிலும், பொன்னாடை அணிவிப்பதிலும் அதிதீவிரம் காட்டிவந்த கலைஞர் கருணாநிதி அவரோடு அருகில் இருக்கும் இந்த நபருக்கோ மோதிரமோ, மாலையோ, பொன்னாடையோ அணிவித்தது கிடையாது. அவருக்கு வாகனங்கள், வீடு வசதிகள், சம்பளங்கள் ஒழுங்காக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த சமயம் பத்துப்பவுண் மோதிரம் ஒன்றை கருணாநிதியின் கட்சிக்காக ஒரு வருடம் பாடுபட்டு வந்த ஒருவருக்கு மேடையில் பொன்னாடை போர்த்தி பத்துப்பவுன் மோதிரமும் அணிவித்தார்.
அப்பொழுது கோபங்கொண்ட கருணாநிதியிடம் முப்பத்தைந்து வருடங்களாக பணிபுரியும் நபர் ஒருவருடம் தொண்டு செய்த இவருக்கு நீங்கள் இப்படி செய்கின்றீர்கள் நான் முப்பத்தைந்து வருடங்கள் உங்களுடன் இருந்து என்ன பயன் என்பதனைக் கலைஞரிடம் கேட்டவுடன் கலைஞர் சிரித்துக் கொண்டு அவன் வாங்கித் தந்தான் நான் போடுவித்தேன். முப்பத்தைந்து வருடம் என்னுடன் இருந்த உனக்கு என்னுடைய அரசியல் புரியவில்லையா எனக் கேட்டார்.
இது போன்று தான் வவுனியா மத்திய மையம் அமைப்பது தொடர்பில் முக்கிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் முடிவைக் கேட்க அங்கு சென்றிருந்தனர். அவரின் பதில் வேறு விதமாக அமைந்தது. ஒரு சிலர் கூட்டம் முடிவடைந்த பின்னர் நேரடியாகச் சென்று ஏன் இவ்வாறு பதில் கூறினீர்கள் என்று கேட்டதற்கு சம்பந்தன் கூறிய பதிலும் இதே தான். இது இவருடைய அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இவ்வாறிருக்க ஓமந்தையில் இந்த பொருளாதார மத்திய மையம் அமைக்கப்படுமாக இருந்தால் அதற்கு அருகாமையில் ஐம்பது அடி புத்தர் சிலையும் அமைக்கப்படும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஓமந்தைப் பகுதியைப் பொறுத்தவரையில் காணிகளை வாங்கங்கூடிய சூழ்நிலை உள்ளது. அதேநேரம் சிங்களவர்களும் காணிகளை வாங்கி குடியேறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. அக்காலகட்டத்தில் முருங்கன், நாயாறு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டதைப் போன்று தொழிலுக்காக வந்த சிங்களவர்கள் இப் பிரதேசத்தில் குடியேறுவார்கள். ஓமந்தைப் பிரதேசமானது ‘ஓமந்தைய’ எனப் பெயர் மாற்றப்படும்.
வவுனியா தாண்டிக்குளப் பிரதேசத்தில் இவ் வர்த்தக நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால் இப்பிரச்சினைக்கான வாய்ப்புக்கள் இல்லை. காணிகள் வாங்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படாது. குறிப்பாக வவுனியாவை அண்மித்த பிரதேசங்களைப் பார்க்கின்ற பொழுது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இருக்கின்றது. இதனை தட்டிக் கேட்க துணிவில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஓமந்தையில் ஐம்பதடிப் புத்தர்சிலையென்றால் கட்டுங்கள் என்று கண்களை மூடிக்கொண்டு இருப்பார்கள். வவுனியாவின் அரச அதிபரைக் கூட ஒரு தமிழராக நியமிக்கமுடியாத இந்த தமிழ் அரசியல்வாதிகள் வவுனியாவில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார மத்திய மையத்திற்கு அடிபிடிப்பட்டு தமது சுயலாப அரசியலைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதனை விட மிக முக்கியமாக மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்கு அருகாமையிலேயே ஜோசப் இராணுவ முகாம் அமைந்துள்ளது. கொஸ்கமவைப் போன்று ஆயுதக் கிடங்குகள் இந்த ஜோசப் முகாமில் இருக்கின்றது. வெடித்தால் மக்களின் நிலைமையென்ன? இதனைச் சிந்தித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றார்களா இந்த அரசியல்வாதிகள். இதனைவிட பதினைந்து பாலியல் படுகொலைகள் இந்த வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இது நடைபெற்று ஒரிரு நாட்களில் ஆர்ப்பாட்டங்களும், அமர்க்களங்களாகவும் இருக்கும். அதன் பின் அதுபற்றிப் பேச யாருமே இல்லை. கிருஷhந்தி – ஹரிஷ;ணவி வரை எத்தனை பாலியல் துஷ;பிரயோகங்கள், கொலைகள் இடம்பெற்று இருக்கின்றது. சமுதாயத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளுக்கு சிங்கள அரசிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள துணிவில்லாத அரசியல்வாதிகளெல்லாம் இனப்படுகொலைக்கான தீர்வை எப்படி எடுக்கப்போகின்றார்கள். ‘இருநூறு கோடி ரூபாவிற்குப் பெறுமதியற்றவன் அல்ல தமிழன் பலகோடி ரூபாய்க்குப் பெறுமதியானவன் தமிழன்’ தன்மானம் தான் இந்த பொருளாதார மத்திய மையம் கட்டுவதற்குப் பிரச்சினையென்றால் இந்த இருநூறு கோடி ரூபா பணம் தேவையில்லையெனத் திருப்பி அனுப்பிவிடுங்கள். ஏட்டிக்குப் போட்டியாக நின்று நிலத் தேர்வு செய்து இந்த பொருளாதார மத்திய மையத்தினைக் கட்டுவது தமிழ் அரசியல் வாதிகளுக்கு உகந்ததொன்று அல்ல. ஒற்றுமையை இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் நாம் காட்டவேண்டும். இந்த பொருளாதார மத்திய மையம் அமைப்பதற்கு இடம் தெரிவு செய்ய இத்தனை சிக்கல்களா? குறித்த வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், வவுனியா அரச அதிபரும் இணைந்தாலே இந்த பொருளாதார மத்திய மையத்தினைக் கட்டி முடித்துவிடமுடியும்.
அணைவரும் ஒன்றிணைந்து ஓமந்தையில் இவ் பொருளாதார மத்திய மையம் அமையவேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் ஐம்பதடியில் புத்தர் சிலை அமையப்பெறும். அதற்கான ஆர்ப்பாட்டத்தை இப்பொழுது தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். முப்பத்தையாயிரம் சிங்கள மக்களை கிழக்கு மாகாணத்தில் குடியேற்ற வேண்டுமென்று மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமங்களதேரர் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் திட்டமிட்ட முறையில் மட்டக்களப்பில் சிங்களங் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. சிங்கள அரசின் திட்டங்களை நாம் விரிவாக ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் எமது பிரதேசங்களில் செய்யப்படுகின்ற அபிவிருத்திகள், மீள் கட்டுமானங்கள் போன்றவற்றை மிக நிதானத்துடன் செயற்படுத்தவேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடைய அயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டதே தவிர, தமிழருக்கான தீர்வுத் திட்டம் முற்றுப்பெறும் வரையில் அரசியல் ரீதியான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்காகவே இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளாகிய நாம் ஒன்றிணைந்து ஒரு விடயத்தைத் தீர்மானித்து அதன் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாது எமது பிரதேசத்தில் எமக்குக் கிடைக்கவேண்டிய அபிவிருத்திகளைப் பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர, எம் தமிழ் மக்களிடையேயும் கட்சி வேறுபாடுகளின்றி அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களை மேற்கொள்வோமாக இருந்தால் அது தமிழினத்திற்கு நல்லதொரு பயனைத்தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. புத்தர் சிலையா? அல்லது பிள்ளையார் சிலையா? என்பதை தமிழ் மக்களாகிய நாங்கள் தான் சிந்திக்கவேண்டும்.
இரணியன்