செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Kajendran) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களைக் கோருவது யாரோ ஒரு ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைக்கும் நோக்கமே என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்(Dharmalingam Siddarthan )தெரிவித்துள்ளார்.
யாழ்.சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று(14.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் ஒவ்வொரு தடவையும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கி வந்த நிலையில் துரதிஸ்டவசமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிலைநாட்டப்பட வில்லை.
அதன் காரணமாகவே இம் முறை தமிழ் மக்கள் சார்ந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்த பயணிக்கும் ஐந்து கட்சிகள் சேர்ந்து கொள்கையளவில் முடிவெடுத்தன.
சக தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பினருடன் கலந்துரையாடி ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை நாம் ஆதரிப்போம்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்களை புறக்கணிக்குமாறு கூறுகிறார் அவர் தேர்தலை புறக்கணிக்க கூறி யாரை வெல்ல வைக்கப் போகிறார் என்பது தொடர்பில் தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக கூற வேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாயின் அவர் வெல்ல மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அண்மையில் பொது தமிழ் வேட்பாளராக வேலன் சுவாமிகளை நிறுத்தலாம் என விக்னேஸ்வரன் எம்.பி தனது கருத்தை கூறினார்.
வேலன் சுவாமிகளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஆதரவு உண்டு ஆனால் நாம் நிறுத்தும்போது வேட்பாளர் நேரடியாக மதம் சார்ந்த ஒருவராக இருக்கக் கூடாது என்பது எனது கருத்து” என குறிப்பிட்டுள்ளார்.