கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் …

591
 

காரைநகரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுமியையும் குடும்பத்தினரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அலைக்கழித்த கடற்படையினர் பிரச்சனையை பெரிதாக்காமல் விடும்படியும், அங்கு இருக்காமல் வேறு இடத்திற்கு மாறிச் செல்லும்படியும், இல்லாவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் மிரட்டி வருவதாக தெரிய வருகிறது.

இதேவேளை இன்று (17.07.14) சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று உள்ளனர். இவர்களை திடிரென சுற்றிவளைத்த கடற்படையினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் தெரிந்த பின் விலகிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் அரசிற்கு நெருக்கமான தமிழ்த் தரப்பொன்று பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனக் கோரி இருப்பதுடன் அதற்காக எவ்வளவு தொகைப் பணம் வேண்டும் என பேரம் பேசியதாகவும் தெரியவருகிறது.

காரைநகரில் 11வயதுச் சிறுமி மீது கடற்படையை சிப்பாய் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் – விடயத்தை முடக்கிவிட உயர் மட்டத்திலிருந்து அழுத்தங்கள்

யாழ்ப்பாணம், காரைநகரில் 11 வயது சிறுமியொருவர் அப்பகுதியினில் நிலைகொண்டுள்ள கடற்படையை சிப்பாய் ஒருவரால் தொடர்ச்சியாக 12 நாட்களிற்கு மேலாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த சிறுமி மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பினில் மேலும் தெரியவருகையில் காரைநகரின் ஊரி கிராமத்தில் பாடசாலைக்கு செல்லும் குறித்த சிறுமி மடக்கி அருகிலுள்ள கண்டல் காட்டினுள் கொண்டு சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். அத்துடன் குறித்த சிறுமி மிரட்டப்பட்டதையடுத்து வீட்டாருக்கு தகவல் தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில் இரத்தப் பெருக்கினையடுத்தே பெற்றோர் வினவிய போதே உண்மை வெளியாகியுள்ளது.

இச்செய்தி வெளியாகும் வரை குறித்த கடற்படை சிப்பாய் நீதிமன்றில் காவல்துறையால் ஆஜர்படுத்தப்பட்டு இருக்கவில்லை. விடயத்தை முடக்கிவிட உயர்மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

SHARE