முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் நடைபெறவிருப்பதால் நேற்றைய தினம் (02.06.2014) அன்று சிலாபத்தை தீர்த்தக்கரை பகுதியில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் உப்பு நீரில் விளக்கெறியும் சம்பவம் தொடர் காலமாக நடைபெற்றுவருவதால் கடல்நீர் எடுக்கும் நிகழ்வுகள் மடப்பண்டம் கொண்டுவரப்பட்டு தீர்த்தக்கரையில் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மடப்பண்டம் எடுப்பவர் குடந்தாங்கி கடற்பகுதிக்குச்சென்று அலைவரும் போது ஒருதடவை மாத்திரமே நீரில் மூழ்கி எழுவார்.
அதன்போது குடநீரானது அதுநிறைய வருமாயின் அங்குள்ள மக்கள் நல்லதே நடைபெறும் என நம்புவார்கள். சில ஆண்டுகளில் குடத்தில் நீர் முழுமையாக வருவதில்லை. அவ்வாறான காலத்தில் ஏதாவது தீமைகள் நிகழுமென மக்கள் நம்புவார்கள். ஆனால் இந்த வருடம் குடம் முழுவதும் நீர் நிறைந்து வந்ததால் மக்கள் நிறைந்த மனதுடன் கண்ணகி அம்மன் அருள்புரிவார் என நம்புகின்றனர். அத்தோடு கடந்த வாரம் கிணற்றில் இருந்து நீர் கட்டுக்கு 2 அடிக்கு மேலாக நிரம்பி வழிந்ததால் மக்கள் தங்களுக்கு நாட்டில் நல்லது நடக்கும் என நம்புகின்றார்கள். அத்தோடு மடப்பண்டம் எடுத்துவரப்படும் பொழுது முல்லைத்தீவு மாங்குளம் வீதிப்பகுதியில் இடையிடையே தண்ணீர்ப்பந்தல் காணப்பட்டதோடு ஒவ்வொரு சிறு குடில்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் உடைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அத்தோடு அன்று இரவு 12.00 மணியளவில் மடப்பண்டத்துடன் குடத்தில் ஏந்தப்பட்ட நீரையும் எடுத்துக்கொண்டு காட்டுவிநாயகர் ஆலயத்திலிருந்து முள்ளியவளை ஊடாக வற்றாப்பளை ஆலயத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு உப்புநீரில் விளக்கெறியும் அதிசயம் நடைபெறவிருக்கின்றது. இது அடுத்தவாரம் திங்கட்கிழமை வைகாசி விசாகப்பொங்கல் வரை விளக்கு தொடர்ச்சியாக அணையாமல் எறிந்துகொண்டே இருக்கும். இந்நிகழ்வினைக் காண்பதற்காக இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தகவலும் படங்களும் – ச. பார்த்தீபன்