கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து அதிரடி காட்டிய தசுன் சனகாவால் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
தொடக்கம் முதலே அதிரடி
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த நிலையில், முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
தொடர்ந்து முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக சதீரா சமரவிக்ரம 61, குசல் மெண்டிச் 59 மற்றும் அசலன்கா 44 ஓட்டங்கள் குவித்து அசத்தினர். இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணியும் தனது பங்கிற்கு அதிரடி காட்டியது.
திரில் வெற்றி
இலக்கை வேகமாக நெருங்கிய வங்காளதேச அணிக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய சனகா 8 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து இலங்கை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 68 ஓட்டங்களும், மக்மதுல்லா 54 ஓட்டங்களும் குவித்தனர்.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக மேத்யூஸ், பினுரா பெர்னண்டோ மற்றும் சனகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.