கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை..த்ரில் வெற்றி பெற்ற பாபர் அசாம் அணி

104

 

PSL தொடரில் பாபர் அசாமின் பெஷாவர் ஸல்மி அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பாபர் அசாம் அரைசதம்
கராச்சியில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பெஷாவர் அணி முதலில் துடுப்பாடியது.

சைம் அயூப் 19 ஓட்டங்களிலும், முகமது ஹாரிஸ் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஹஸீபுல்லா கான் 1 ரன்னில் மின்ஹாஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

எனினும் பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அவர் 46 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த கேட்மோர் 9 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியில் மிரட்டிய ரோவ்மான் பௌல் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி 30 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்மூலம் பெஷாவர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. டேனியல் சாம்ஸ், ஸஹித் மஹ்மூத், மின்ஹாஸ் மற்றும் ஹசன் அலி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

செய்பெர்ட் அதிரடி
பின்னர் களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில், டிம் செய்பெர்ட் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் சேர்த்தது.

வின்ஸ் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த அணித்தலைவர் ஷான் மசூட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

எனினும் அதிரடி காட்டிய செய்பெர்ட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் சோயிப் மாலிக் 25 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

த்ரில் வெற்றி
இர்ஃபான் கான் மற்றும் அன்வர் அலி கூட்டணி அணியின் வெற்றிக்காக போராடியது. கடைசி பந்தில் கராச்சி கிங்ஸ் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆமீர் ஜமால் வீசிய பந்தை எதிர்கொண்ட இர்ஃபான் கானால் ரன் எடுக்க முடியவில்லை. எனினும், பைஸ் மூலம் கராச்சி அணிக்கு ஒரு ரன் கிடைக்க, பெஷாவர் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பெஷாவர் அணியின் தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும், லுக் வுட், ஆமீர் ஜமால் மற்றும் சைம் அயூப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

SHARE