கணவன் சிறையில்..! கூலி வேலை செய்து பிள்ளையுடன் வாழப் போராடும் பெண்

410

வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்தத்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு வைத்து 2009 செப்ரெம்பர் 24 ஆம் திகதி நிர்மலாதேவியின் கணவன் கந்தையா குணநாதன் கைது செய்யப்பட்டார்.

அதன் போது தனது 7 வயது மகளுடன் முகாமில் தனிமையில் இருந்து விடுதலையாகி தற்போது கோவில்புளியங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவரது கணவன் இன்று வரை விடுதலை செய்யப்படாத நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

மீள்குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுதிட்ட வீட்டில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இன்று தரம் 9 இல் கல்விகற்கும் தனது மகளுடன் தனித்து வாழ்வதற்காக போராடுகிறது இந்தக் குடும்பம்.

குடும்பத்தை பார்க்க வேண்டிய கணவன் சிறையில், கையில் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட காயத்தால் பெரிய வேலைகள் செய்ய முடியாத நிர்மலாதேவி, தனது பிள்ளையின் படிப்புக்காகவும் சிறையில் இருக்கும் தனது கணவனை சென்று பார்த்து வருவதற்காகவும் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டாள்.

நாளாந்தம் கூலிவேலைக்குச் சென்று தன்னால் முடிந்ததை செய்து 500 ரூபாய் சம்பளம் பெற்று அதில் தனது சீவியத்தை போக்குகிறது இந்த குடும்பம்.

அக்கம், பக்கமமெல்லம் வழங்கப்பட்டுள்ள மின்சாரம் இந்த குடும்பத்தின் வீட்டை மட்டும் இன்னும் எட்டிப் பார்க்கவில்லை. சமுர்த்தி தொடக்கம் அரசின் எந்தவொரு வாழ்வாதார உதவிகளும் இந்த குடும்பதற்கு கிடைக்கவில்லை.

குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவியின் படிப்பும் இரவுப் பொழுதும் கழிகிறது. தோட்டம் செய்வதற்காக வெட்டிய கிணற்றைக் கூட கட்டி முடிப்பதற்கு பணம் இன்றி நாளாந்தம் வாழப் போராடுகிறது.

இவர்களின் தவிப்புக்கு காரணம் என்ன….? தமிழ் மக்களுக்காக அவர்களது கணவன் சிறையில் இருப்பது பெரிய குற்றமா… என கண்ணீர் விடுகின்றனர் நிர்மலாதேவியும் கையில் புத்தகப்பையுடன் நிற்கும் மகளும்.

தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளவர்களின் குடும்பங்கள் பல இதுபோலவே இன்றும் வாழப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்களுக்கான பொருளாதார உதவிகள், அபிவிருத்திகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் இன்று பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையில் கூட தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் அவலம் தொடர்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஒரு புறமிருக்க, அவர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வதற்கே நாளாந்தம் போராட வேண்டிய நிலையில் உள்ளது.

சமுர்த்தி நிவாரணம், பொருளாதார சுயதொழில் உதவிகள் என அரசால் பலருக்கும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு அவை வழங்கப்படாது புறக்கணிக்கப்படுவது ஏன்..?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண சபை அவர்களின் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாதது ஏன்..?

அரசியல் கைதிகள் குடும்பங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா..? என பல வினாக்கள் அவர்களிடம் எழாமலும் இல்லை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், அவர்கள் விடுதலையாகி வரும் போது அவர்களை பார்க்க அவர்களது குடும்பங்கள் இங்கு இருக்க வேண்டும். அதற்காக அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே இப்போதுள்ள கேள்வி.

SHARE