முகத்திற்கு உண்மையான அழகைத்தருவது கண்கள். இதன் காரணமாகவே முகத்துக்கு ஒப்பனை செய்யும் போது கண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் அந்த காலத்து பெண்கள். கண்களுக்கு இயற்கையாக வீட்டில் தயாரித்த மையை தீட்டி அழகு பார்த்தார்கள். இப்போது கண்களை அழகுபடுத்த விதவிதமான அழகு சாதனப்பொருட்கள் வந்துவிட்டன. ஐ லைனர், காஜல், மஸ்காரா போன்ற பல பொருட்களை பெண்கள் உபயோகப்படுத்துகின்றனர்.
மஸ்காரா பல நிறங்களில் கிடைக்கும். நமது சரும நிறத்திற்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. நாம் அணியும் உடைகளின் நிறத்திற்கு தகுந்தவாறும் மஸ்காராவை தேர்ந்தெடுக்கலாம். கருப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் பெரும்பாலானோர் பயன்படுத்துவதாகும்.
மஸ்காரா தீட்டும் போது மேல்நோக்கி பார்த்தபடி மஸ்காரா தீட்டுவதற்கான குச்சியை கண் இமைக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும். கண்களை சிமிட்டாமல் இமை முடிகளுக்கு மஸ்காராவை தடவ வேண்டும். தீட்டிய பின்பு மெதுவாக மஸ்காரா குச்சியை எடுக்க வேண்டும். பின்னர் இமைகளை 30 நொடிகள் உலர வைக்க வேண்டும்.
மஸ்காரா தீட்டும் சமயத்தில் தண்ணீர் எண்ணெய் போன்ற பொருட்களை தொடக்கூடாது.
தூங்கச் செல்வதற்கு முன்பு மஸ்காரா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மற்ற ஒப்பனைகளோடு சேர்த்து மஸ்காராவையும் முழுவதுமாக நீக்கிய பின்பே தூங்க வேண்டும். இல்லையெனில் கண்களில் ஒவ்வாமை, இமைகளில் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கண்களுக்கு பயன்படுத்தும் அழகுசாதனபொருட்கள் தரமானவையா? என்பதை உறுதி செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.