கதைக்கு தேவைன்னா எதுவும் தப்பில்லை: சனம் ஷெட்டி பேட்டி!

437

அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் தக்காளி சனம் ஷெட்டி. தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்காமல் இடத்தை காலி செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார். அச்சு அசல் தமிழ் பொண்ணு மாதிரி அழகாக தமிழ் பேசுகிறார், கதம் கதம், விலாசம் என இரண்டு படங்களில் நடித்து வரும் சனம் மலையாளத்திலும் நடித்து வருகிறார் அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* சினிமாவுக்கு வந்தது எப்படி?
படிக்கும்போது சினிமா ஆசையெல்லாம் இல்லை. பாக்கெட் மணிக்காக விளம்பர படங்கள், பேஷன் ஷோ பண்ணினேன். அப்புறம் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங் முடிச்சிட்டு லண்டனில் ஒரு கம்பெனியில் வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். மாதம் 4 லட்சம் சம்பளம். வேலையில் இருந்தப்போ அம்புலி படக்குழுவினர் நான் நடிச்ச விளம்பர படங்களை பார்த்துட்டு நடிக்க கூப்பிட்டாங்க. வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்துட்டேன். மீண்டும் எப்ப வேணாலும் வேலைக்கு வரலாமுன்னு கம்பெனிகாரங்க சொல்லியிருக்காங்க. திரும்பவும் வேலைக்கு பேகாத அளவிற்கு சினிமாவுல சாதிச்சிடுவேன்னு நினைக்கிறேன்.
* இப்போது நடித்து வரும் படங்கள்…?
கதம் கதம், விலாசம்னு இரண்டு படங்கள்ல நடிக்கிறேன். கதம் கதம்ல நந்தாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இன்ஸ்பெக்டர் மனைவி கேரக்டர். புளூ கிராஸ் அமைப்புலேயும் இருக்கிறவள். நல்ல அதிகாரியாக இருந்த கணவன், கெட்ட அதிகாரியாக மாறுகிறப்போது அந்த மனைவி எப்படி கஷ்டப்படுவாள் என்பதை காட்டும் நடிப்பு. விலாசம் படத்தில் கல்லூரி மாணவி கேரக்டர். குடிசை பகுதி மக்களுக்காக போராடும் பணக்கார வீட்டு பெண். சேவை செய்ய போன இடத்தில் குடிசை பகுதி ஹீரோவை காதலிக்க அதனால் வரும் பிரச்னைகளை சமாளிக்கிற சவாலான கேரக்டர்.
* அம்புலிக்கு பிறகு நீண்ட நாட்களாக ஆளைக் காணவில்லையே?
எங்கேயும் போகலை மலையாளத்துல நடிச்சிட்டிருந்தேன். ராகு என்ற படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. சினிமா கம்பெனி, மம்முட்டியுடன் தெய்வத்திண்ட சொந்தம் படத்துல நடிச்சேன்.
* எந்த மாதிரி படங்களை விரும்புறீங்க?
கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள். அதுலதான் நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கும். ஹீரோவை காதலிக்கிறது, கண்ணீர் வடிக்கிறது, டூயட் பாடுறதுன்னு ரெகுலர் கேரக்டராக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்பதான் நம்மோட திறமையை காட்ட முடியும்.
* பாலா படம்னா அழுக்கா நடிக்கணும், கமல் படம்னா லிப் லாக் இருக்கும்? இரண்டு சான்ஸ் கிடைச்சா எதுல நடிப்பீங்க?
கெஞ்சி கேட்டு இரண்டுலேயும் நடிச்சிடுவேன். கதை என்ன கேக்குதோ அதை கொடுக்குறதுதான் ஒரு நடிகையின் கடமை, பாலா சார் படம் கிடைச்சா மொட்டைகூட அடிச்சுக்க ரெடி, கமல் சார் படம் கிடைச்சா எத்தனை லிப் லாக்கிற்கும் ரெடி. நடிப்பை நடிப்பா பார்க்குற வரைக்கும் எந்த பிரச்னையும் இல்லீங்க.
* பெங்களூர் பொண்ணு நீங்க… ஏன் கன்னட படங்கள்ல நடிக்க வில்லை?
அதுவும் விரைவில் நடக்கப்போகுது. ஆனாலும் முதல்ல சான்ஸ் கிடைச்சது தமிழ்லதான். இங்கு ஒரு நல்ல இடத்தை பிடிச்சிட்டு அப்புறமாக மற்ற லாங்குவேஜ்ல நடிக்கலாமுன்னு இருக்கேன். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், நான்கு மொழியும் சரளமாக பேசத் தெரியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான்கு மொழியிலேயும் ஒரு ரவுண்ட் வருவேன்.
* படப்பிடிப்புக்கு காதலுடன் வருவதாகவும், சொகுசு கேரவன் கேட்பதாகவும் உங்களை பற்றி கிசுகிசுக்கள் வருகிறதே?
நீங்களே அதை கிசுகிசுன்னு சொல்லிட்டீங்க. அதற்கு பிறகும் நான் விளக்கம் சொல்லணுமா. நான் வளர்ந்து வர்ற நடிகை அப்படியெல்லாம் பந்தா பண்ணுவேனா. மலையாள பட ஷூட்டிங்ல கேரவன்ங்ற ஒண்ணு கிடையாது. ஹீரோக்கள் கூட சொந்த கேரவன்தான் வச்சிருப்பாங்க. ரொம்ப சாதாரண அறைகள்ல தங்கி நடிச்சிருக்கேன். வேனுக்குள்ளேயே உடை மாற்றி நடிச்சிருக்கேன். அப்புறம் எனக்கு காதல் உண்டு, காதலனும் உண்டு. ஆனால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் வர்றதில்லை. அவர் அவர் வேலையில பிசியா இருக்கார். நான் என் வேலையில பிசியா இருக்கேன். அதுக்குமேல அது என்னோட பர்ஷனல்.
என்கிறார்
SHARE