வவுனியாமாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றம்
கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு: ஜெகதீஸ்வரன் எம்.பி

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் இன்று (03.01) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்று 2009 ஆண்டுக்கு பின் பொலிசாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணியை விடுவிக்க அப் பகுதி மக்கள் பல தடவைகள் முயன்றும் அது பயனளிக்கவிவில்லை. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலக அபிவிருத்திக் குழுக்க கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து வவுனியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும், பிரதி பொலிஸ்மா அதிபருடனும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதனையடுத்து குறித்த காணியினை உடனடியாக விடுவிக்க வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் இக் காணி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.