கனேமுல்ல சஞ்சீவ கொலையும், சந்திக்கு வராத சங்கதிகளும்..
கணேமுல்லை சஞ்சீவ, நேற்றைய தினம் கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் இன்றைக்கு வரைக்கும் சுடச்சுட பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.



இதற்கிடையில் ஒருசிலர் இதனை முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜபக்ஷ கும்பல் மீது சுமத்தவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் அங்கே நடந்திருப்பது முற்றிலும் மாறான விடயம்.
1. நேற்றைய தினம் சஞ்சீவவுக்கு வழக்கு விசாரணை இருக்கவில்லை. விசேட நகர்வுப் பத்திரம் (மோஷன்) மூலமாகவே அவரது வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வழமையாக அவ்வாறான மோஷன் முதல்நாளோ, வழக்கு விசாரணை நாளின் காலையிலோ தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஆகவே சஞ்சீவ நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ள விடயம் வௌியார் யாருக்கும் எந்த வகையிலும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
சஞ்சீவ நீதிமன்றத்துக்கு எதற்காக கொண்டுவரப்பட்டார்? நியாயமான காரணங்கள் இன்று அவரை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினீர்கள் என்று நீதவான் பொலிசாரிடம் கேள்வி தொடுத்துள்ளார். அது தொடர்பான செய்தி ஒளிபரப்பின் ஸ்க்ரீன் சொட்டை இத்துடன் இணைத்துள்ளேன்.
வழக்கு விசாரணை இல்லாமல், நியாயமான காரணம் இல்லாமல் நகர்வுப் பத்திரம் ஊடாக சஞ்சீவ எதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார்?
2. ஒரு சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் வந்து படுகொலையொன்றை மேற்கொள்வது இலகுவான விடயமல்ல.. அதற்கான ஒத்திகை குறைந்த பட்சம் ஒரு தடவையாவது மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அடையாள அட்டையும் சிறிது நாட்களுக்கு முன்னதாகவேனும் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடையாள அட்டை தயாரித்துக் கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் குறித்த நபர் நீதிமன்றத்துக்கு வந்து செல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு, நாள் குறிக்கப்பட்டே இந்த விடயம் நடைபெற்றிருக்கலாம்.
அதன் காரணமாகத் தான் வெளியார் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திடீரென சஞ்சீவ நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட விடயம் கொலையாளிக்குத் தெரிய வந்துள்ளது.
3. கொலையை நிகழ்த்திவிட்டு கொலையாளி பதட்டமின்றி தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நீதிமன்றத்தின் படிக்கட்டில் கைத்துப்பாக்கி சகிதம் ஒன்று அல்லது இரண்டு பொலிசார் எந்நேரமும் நின்றிருப்பார்கள். நீதிமன்றத்துக்குள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் நின்றிருப்பார். ஆக இந்த மூவரும் கொலையாளியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்பது சந்தேகத்துக்கு இடமான விடயம். அவர்கள் முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தால் மாத்திரமே அவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது.
4. கொலையாளியை எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரும், விசேட அதிரடிப்படையினரும் விரட்டிச் செல்லவோ, கைது செய்யவோ முயற்சிக்கவில்லை.
நீதிமன்றத்தில் இதற்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடைபெற்று, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருந்த போதிலும், குறைந்த பட்சம் பொலிசார் சந்தேக நபர்களை விரட்டிச் சென்றிருப்பார்கள். ஆனால் இங்கு அப்படி நடைபெறவில்லை. கொலையாளி இலகுவாகத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் சுமார் அரைமணிநேரம் கழிந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலும் சஞ்சீவ, உயிருடன் இருந்துள்ளார். அதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.
ஆனால் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சில நிமிடங்கள் வரை அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதில் பொலிசாரோ, விசேட அதிரடிப்படையினரோ கவனம் செலுத்தவில்லை. அவர் அப்படியே உயிரிழக்கட்டும் என்றவாறு அலட்சியமாக விடப்படுகின்றார்.
வழமையாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றால் காயமுற்றவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முற்படும் பதற்றம், முயற்சிகளை இங்கு காணவில்லை. ஆக அவ்வாறான நகர்வுகள் தேவையில்லை என்று முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கலாம் அல்லவா?
6. கொலையாளி கைது செய்யப்பட்ட போதும் அவர் மடக்கிப் பிடிக்கப்படவோ, உடனடியாக கைவிலங்கு மாட்டப்படவோ இல்லை. விசேட அதிரடிப்படையினர் அவருடன் நட்பாக பேசிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
ஆக, பாதுகாப்புத் தரப்பினரால் தனக்கு எந்த பாதகமும் வராது என்று உறுதியான நம்பிக்கை அவருக்கு அளிக்கப்பட்டதன் காரணமாகவே கொலையாளி அவ்வாறு இயல்பாக இருந்திருக்கலாம், அவ்வாறு நம்பிக்கை வழங்கப்பட்டதன் அடிப்படையிலேயே அவருக்கு கைவிலங்கு மாட்டப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் நம்ப முடிகின்றதல்லவா?
7. கொலையாளி சட்டத்தரணி உடையில் இருக்கும் போது காட்டப்பட்ட தோற்றம், கைது செய்யப்பட்ட நிலையில் காட்டப்படும் தோற்றம் பரஸ்பரம் வித்தியாசப்படுகின்றது.
இரண்டு புகைப்படங்களையும் இணைத்துள்ளேன். அச்சொட்டான முகத்தோற்ற வித்தியாசம் புலப்படுகின்றது.
கொலையாளிதான் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பதைக் குறித்தும் கவனமாக அவதானிக்க வேண்டியுள்ளது.
இருந்தாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த பாதாள குழு தலைவன் ஒருவன் அழிந்தான் என்று திருப்தி கொண்டாலும் நீதித்துறைக்கு இது ஒரு பாரிய வடு, தவறான உதாரணம்.
(இல்லாவிட்டால் முஸ்லிம் ஒருவரைப் பயன்படுத்தி முஸ்லிம் பாதாள உலகம், தீவிரவாதக் கும்பல் என்றொரு புரளியை ஏற்படுத்தும் முயற்சியா என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.)