காரியவாதியான கன்னி ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு மேன்மையான சுப பலன்களை வழங்கிட நல் வாழ்த்துக்கள்.
இந்த வருடத்தில் நல்ல மன அமைதி, ஆனந்தம், மாற்றம், முன்னேற்றங்கள் உண்டாகும். கண் திருஷ்டி குறையும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் விலகி சாதகமான பலன் உண்டாகும். வருட கிரகங்களின் சஞ்சாரம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குருவின் பார்வை பதியும் இடங்கள் மூலம் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் திறமையும் வைராக்கியமும் உண்டாகும். கிரகங்கள் சாதகமாக உள்ள சூழ்நிலையில் வெற்றியை சுவைப்பது சாதாரணம்.
கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சுமாராக உள்ள காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிப்பவர்களே சாதனையாளர்கள். இனி விரிவான பலன்களைப் பார்கலாம்.
குருவின் சஞ்சார பலன்கள்: கன்னி ராசிக்கு 4, 7ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 7ம் இடத்திலும் அதன் பிறகு 8ம் இடம் சென்று ராகுவுடன் சேர்ந்து சனி பார்வை பெறுகிறார். எட்டில் உள்ள குரு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த குடும்ப பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதியுடன் இருப்பீர்கள். சிலருக்கு அதிர்ஷ்டத்தில் ராஜயோகம் பணக்கார யோகம் கிடைக்கும். தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வீட்டில் சேரும். புதிய சொத்துக்கள் தோட்டம், விவசாய நிலம், வாகனம் என செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். சிலருக்கு வசதியான வாழ்க்கைத் துணை அமைந்து அதன் மூலம் பொன், பொருள் ஆபாரணங்கள் கிடைக்கும்.
சொந்தத் தொழிலில் அல்லது உத்தியோகத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். சுய ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமற்றவர்கள் புதியதாக சுய தொழில் துவங்குவதை தவிர்க்கவும். ஏற்கனவே சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் புதிய பெரிய தொழில் முதலீடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களிடம் சுமூகமாக பழகவும். எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் வாழ்க்கையின் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
சனியின் சஞ்சார பலன்கள்: கன்னி ராசிக்கு 5, 6ம் அதிபதியான சனி பகவான் இதுவரை 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருந்தார். இனி ஜனவரி 17, 2023 முதல் 6ம் இடத்தில் ஆட்சி பலம் பெறப் போகிறார். 5ம் அதிபதி சனி 6மிடம் செல்வதால் தொழில், உத்தியோகம் அல்லது மன நிம்மதிக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். சிலருக்கு சொத்துக்கள் கை நழுவிப் போகலாம் அல்லது பூர்வீகச் சொத்தை விற்று அந்த பணத்தில் புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை நடக்கலாம். சிலருக்கு பிள்ளைகளின் திருமணம், படிப்பு, தொழில்,வைத்தியம், போன்றவற்றிக்கு கட்டுக்கு அடங்காமல் வரவிற்கு மீறிய செலவு உண்டாகும். வயதானவர்கள் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் சென்று செட்டிலாகலாம். அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும். சிலர் கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய வேலையால் அவதி உண்டாகும். தொழில் போட்டிகள் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.
புதிய தொழில் முதலீட்டில் கவனம் தேவை. விரயம் இருந்தாலும் வருமானம் வந்து கொண்டே இருக்கும். தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். பிள்ளைகளை உங்களின் நேரடி கண் காணிப்பில் பராமரிப்பது அவசியம்.உடன் பிறந்த சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். வேலையை மாற்றக்கூடாது. கோட்சார கிரகங்கள் சாதகமற்ற காலத்தில் தன் நம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.
ராகு/கேது சஞ்சார பலன்கள்: ராசிக்கு 8ம் இடத்தில் கேது 2ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். அக்டோபர் 30, 2023க்குப் பிறகு ராசிக்குள் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் செல்கிறார்கள். 8மிடத்தில். குரு ராகு சேர்க்கை இருப்பதால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த /எதிர்பாராத பெரும் தொகை, அதிர்ஷ்ட சொத்து கிடைக்கும். வீட்டிற்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தன வரவு மிகுதியால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.
துன்பம் என்றால் என்னவென்றே தெரியாது. பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். வீட்டில் சுப நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். திருமணம்: 2ல் கேது, 8ல் ராகு, 7ம் அதிபதி குரு எட்டாமிடம் சென்று சனி பார்வை பெறுகிறார். திருமணத்திற்கு கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமண முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
பெண்கள்: பொது நலச் சேவையில் ஆர்வம் பிறக்கும்.பிள்ளைகளின் திருமணத்தின் மூலம் சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல சம்பந்திகள் அமைவார்கள். தொழில், உத்தியோக நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ்ந்த சம்பந்திகள் சேர்ந்து வாழ்வர்கள்.மன நிறைவான மண வாழ்க்கை அமையும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உணவு கட்டுப்பாடு தேவை. பேச்சில் நிதானமும் பொறுமையும் அவசியம். குழந்தை பேற்றுக்கான மருத்துவ சிகிச்சை பலன் தந்து நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.
மாணவர்கள்: கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். மாணவ மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுடன் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். பள்ளி, கல்லூரி கலை நிகழ்சிகளில் கலந்து பரிசுகளும், பதக்கங்களும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதுத்தெம்பையும், புத்துணர்வையும் கொடுக்கும்.
உத்திரம் 2,3,4: தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். எதிர்பார்த்த தொகை உடனே கைக்கு வந்து சேரும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்சியை தரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் மாமன் வழி ஆதாயம் உண்டு. தம்பதியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
பரிகாரம்: பிரிந்து வாழும் தம்பதிகளை ஆலோசனை கூறி சேர்த்து வைக்கவும். வசதி இல்லாதவர்களின் திருமணத்திற்கு உதவவும். அஸ்தம்: வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் நேரம். உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். மன வேதனையைத் தந்த மகள் உங்களைப் புரிந்து கொள்வார். கணவருடன் இருந்த ஈகோ மாறும். பாராமுகமாக இருந்த உறவுகள் சுப நிகழ்வில் இணைந்து மீண்டும் அன்பு பொழிவார்கள். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும்.திருமணம் கை கூடும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல காலம் . ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பரிகாரம்: தொடர்ந்து பன்னிரன்டு பவுர்ணமிக்கு கிரிவலம் வர நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 1, 2: உங்கள் செயலில் ஆற்றலும், வேகமும் கூடும். கூட்டுத் தொழிலில் மிகப்பெரிய அதிர்ஷ்டங்களை அள்ளித்தரக்கூடிய காலமாகும். பொருளாதாரம் உயர்வதோடு, குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும். சமூக அந்தஸ்து கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் சிறக்கும். தந்தை வழி உறவு மேம்படும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். ஆரோக்கியம், தொழில், கல்வி போன்றவற்றில் நிலவிய தடை, பிரச்னைகள் சீராகும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மூத்த அதிகாரிகள், குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், மூத்த சகோதரர் வகையில் ஆதரவும், அன்பும் கிடைக்கும்.
திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் அல்லது பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற தம்பதிகள் இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.
பரிகாரம்: வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து ஆறு நெய்தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடை அகலும். திருமண வாழ்க்கை தித்திக்கும். பொருளாதாரம் பெருகும்.
புத்தாண்டிற்கு கன்னி ராசியினர் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி கோவில். ராம நாத சுவாமியை புத்தாண்டில் சென்று வழிபட கன்னி ராசியினரின் பாவங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு அமையும்.
maalaimalar