கமல்ஹாசனுக்கு நடுத் தெருவில் கிடைத்த வாய்ப்பு…!

464
நடுத் தெருவில் கமல்ஹாசனுக்குக் கிடைத்த வாய்ப்பு…!

வாய்ப்பு என்பது சிலருக்கு வீடு தேடி வந்து கதவைத் தட்டும், சிலர் வாய்ப்பைத் தேடி ஒவ்வொரு கதவாக தட்ட வேண்டும்.

ஆனால், நடிக்கும் வாய்ப்பு கமல்ஹசானுக்கு நடுத் தெருவில் கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவத்தை நேற்று நடைபெற்ற ‘வாலிப ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரே சொன்னார்.

“ஒரு முறை நான் தெருவில நடந்து போய்க்கிட்டிருந்தேன். ஏற்கெனவே ‘அரங்கேற்றம்’ படத்துல நடிச்சிட்டேன். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் நடிச்சி முடியற நேரத்துல இருக்கு. ஒரு நாள் ஆழ்வார்பேட்டையில ஒரு தெருவில் நடந்து போய்க்கிட்டிருந்தேன்.

திடீர்னு யாரோ வண்டிய நிறுத்திக் கூப்பிட்டாங்க. கார்ல இயக்குனர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல் இருந்தாங்க. ரெண்டு பேரும் ஆபீசுக்கு வான்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாங்க. சொல்லிட்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறாங்க.

எதுக்கு சிரிக்கிறாங்கன்னு எனக்கு புரியலை, சட்டை அழுக்கா இருக்கா, இல்லை சட்டை மேல காக்கா எச்சம் போட்டுச்சான்னு பார்க்கிறேன். அப்புறம்தான் ஆபீசுக்குப் போன போது அவங்க சிரிச்சதுக்கான காரணம் தெரிஞ்சது.

ஒரு கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்கு நண்பர் ஸ்ரீகாந்தோட கால்ஷீட் கிடைக்கலை. அந்த கதாபாத்திரத்தை அவர் கால்ஷீட் கிடைச்ச பிறகு ஷுட் பண்ணிக்கலாம்னு பேசியிருக்காங்க. இல்லை யாரையாவது வச்சி பண்ணிக்கலாமேன்னு பேசின போது, அதுக்காக தெருவுல போறவங்களையெல்லாம் நடிக்க வைக்கிறதான்னு சொல்லியிருக்காங்க.

கடைசில தெருவுல நடந்து போன நான்தான் அந்த ‘அவள் ஒரு தொடர்கதை’ கதாபாத்திரத்துல நடிச்சேன்.

அன்னைக்கு மட்டும் நான் தெருவுல நடந்து போகாம இருந்திருந்தால், அந்த கதாபாத்திரத்துல வேற யாரோ நடிச்சிருப்பாங்க. இப்ப வேணா அது எனக்கு சின்ன வேஷமா இருந்திருக்கலாம். வேற படம் கிடைச்சிருக்குமேன்னு நினைச்சிருக்கலாம்.

அன்று அந்த நடுத் தெருவில் கிடைத்த வாய்ப்பை நான் இன்றும் மறக்கவில்லை, ” என்ற ஒரு சுவாரசியமான விஷயத்தை அனைவரது கைதட்டல்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டார்.

 

SHARE