கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை தொடர்புகொண்ட ஜனாதிபதி கோட்டாபய!

328

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடத்தப்பட்ட அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் அடிப்படைவாத முஸ்லிம்கள் சிலர் மாத்திரம் இருக்கவில்லை எனவும் அரசியல் நோக்கங்களுக்காக அவர்களைப் பயன்படுத்தியது யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை(Cardinal Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் இலங்கையின் நீதிக்கான ஒன்றியம் சூம் தொழினுட்பம் ஊடாக ஏற்பாடு செய்த ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பில் பேராயர் இதனைக் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) தேர்தல் பிரசார மேடைகளில் வாக்குறுதி வழங்கினார்.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு நாட்களில் தன்னை தொடர்பு கொண்டு ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், தான் அதிருப்திக்கு உள்ளாவேன் எனவும் கூறியதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலிருந்தது யார்?. உண்மையில் என்ன நடந்தது?. யார் அதனைச் செய்தனர்? என்பதை அறிந்துகொள்ளச் சர்வதேச சமூகத்தின் உதவி அவசியம்.

இந்த தாக்குதலின் பின்னணியில் சில அடிப்படைவாத முஸ்லிம்களை விடப் பெரிதாக ஒன்று நடந்துள்ளது. அது என்ன என்பதை அறியும் வரை திருப்தியடைய முடியாது. அந்த பின்னணி வெளியிடப்படாது போனால், மக்கள் ஏமாற்றப்படுவார்கள் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

SHARE