கர்ப்பகால சர்க்கரை நோயும்… மருத்துவ ஆலோசனையும்…

453
கர்ப்பகால சர்க்கரை நோயும்... மருத்துவ ஆலோசனையும்...

கர்ப்பகால சர்க்கரை நோய்
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:

ஊட்டச்சத்துள்ள உணவு:

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை ஆகியவற்றை  அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.

உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

மருத்துவ ஆலோசனை:

கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.

உடற்பயிற்சி கட்டாயம்:

கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5  நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.

SHARE