கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் சோர்ந்து போகிறார்கள். மன நிலை மாற்றம், உடல் அசதி, அதிக பசி உணர்வையும் எதிர்கொள்வார்கள். கர்ப்பகாலத்தில் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது சோர்வுக்கு காரணமாக அமைகிறது. சோர்வில் இருந்து மீள என்ன செய்யலாம்?
தூக்கம்: கர்ப்ப காலத்தில் போதுமான நேரம் தூங்க வேண்டும். கால்களுக்கும் போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். தாயின் ஓய்வு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது. தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிது நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்றினால் சோர்வு மறைந்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடற்பயிற்சி: டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்திருந்தால் கர்ப்பிணிகள் அதை முழுமையாக பின்பற்றவேண்டும். அதேவேளையில் யோகா, நடைப்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடலாம். அது உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்கும். தினமும் இத்தகைய உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது தாய்க்கும், சேய்க்கும் நலம் சேர்க்கும்.
புரத உணவு: வயிற்றில் வளரும் கருவுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவசியமானது. ஆதலால் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளடங்கிய சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி, பால், பாலாடைக்கட்டி, பீன்ஸ் போன்ற புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். தூக்க சுழற்சியையும் சீராக்கும். சீரான இடைவெளியில் ஊட்டச்சத்துமிக்க ஏதாவதொரு உணவு, பலகாரங்களை உட்கொண்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகம் நீடிக்கும்.
தண்ணீர்: கர்ப்ப காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சோர்வை போக்கும். தேவையான அளவு தண்ணீர் பருகாவிட்டால் சோர்வு ஏற்படுவதோடு, செரிமான அமைப்பும் பாதிப்புக்குள்ளாகும்.
உணவின் அளவு: கர்ப்ப காலத்தில் மூன்று வேளை உட்கொள்வதற்கு பதிலாக ஐந்து, ஆறு தடவைகளாக உணவை பிரித்து சாப்பிடலாம். இந்த வழக்கம் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கும்.
காபி: கர்ப்பகாலத்தில் காபி பருகுவது உற்சாகத்துடன் இருக்க செய்யும் என்று கருதலாம். முடிந்தவரை காபின் கலந்த பானங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை வளர்சிதை மாற்றத்தை குறைத்து செயலற்ற தன்மை கொண்டவர்களாக மாற்றிவிடும். மருத்துவர் ஆலோசனைபடி சமச்சீரான சத்துணவுகளை உண்பது மிக அவசியம்.