கலிபோர்னியா மாநிலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை

264

வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத வகையில், அவசரகால நிலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை)  குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா ஆளுநர் நியூசமின் அறிவுறுத்தலின் கீழ் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கர்களை உடனடியாக நாடு திரும்புமாறு, அல்லது வெளிநாடுகளில் கால வரையறையின்றி தங்கி இருக்குமாறு வொஷிங்க்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் 14000ஐ எட்டியுள்ள நிலையில் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 41,000ஐத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் ஒரே இரவில் 2,958 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 13,957 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 31 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 15,000 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோயாளர்கள் மலேசியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 130 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஆயிரத்து 30 பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தென்னாபிரிக்காவில் 202 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸ்வேலி ம்கைஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் 166 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2 இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு உயிரிழப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE