களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலுள்ள வைத்திய நிபுணர்களின் இடமாற்றம் காரணமாக அவ்வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை நிலவும் நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயும் முகமான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் களுவாஞ்விக்குடியில் இராசமாணிக்கம் அறக்கட்டளையின் தலைவர் இரா.சாணக்கியன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வைத்திய நிபுணர்கள் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி மதனழகன் உட்பட பல வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்திய நிபுனர்களின் இடமாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள வைத்திய நிபுனர்கள் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆரயப்பட்டது. இது தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்திய நிபுணர்களின் இடத்தினை நிரப்பும் முகமாக வைத்திய நிபுணர்களை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வைத்திய நிபுனர்கள் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி மதனழகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.