நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர். கவுண்டமணி – செந்தில் கம்போவுக்கு இணையாக இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த கம்போவும் காமெடியில் இந்த அளவுக்கு ஜெயிக்கவில்லை என்றும் சொல்லலாம்.
கவுண்டமணி தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வருகிறார். அவர் கடந்த 20 வருடங்களாக சந்தித்து வந்த சொத்து பிரச்சனைக்கு தற்போது சட்டப்படி தீர்வு கிடைத்து இருக்கிறது.
வழக்கு
சென்னை ஆற்காடு சாலையில் தனக்கு சொந்தமான இடத்தில் 22,700 சதுர அடியில் ஒரு வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் 1996ல் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் கவுண்டமணி.
கட்டிடம் கட்ட 3 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அதன் பின் மூன்று வருடங்களில் 1.04 கோடி ருபாய் கவுண்டமணி அந்த நிறுவனத்திற்கு கொடுத்து இருக்கிறார்.
ஆனால் 2003 வரை கட்டிட பணிகள் எதுவும் தொடங்கவியே இல்லை என கவுண்டமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வெறும் 46.5 லட்சத்திற்கு மட்டுமே பணிகள் நடந்திருப்பது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.
அதனால் 2008 முதல் மாதம் தலா 1 லட்சம் ருபாய் இழப்பீடாக அந்த நிறுவனம் வழங்க வேண்டும், மேலும் நிலத்தையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என 2019ல் தீர்ப்பு வழங்கியது.
சாதகமாக வந்த தீர்ப்பு
தீர்ப்பை எதிர்த்து அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதன் தீர்ப்பு தற்போது கவுண்டமணிக்கு சாதகமாக வந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு, முந்தைய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.