காட்டுத்தீ அபாயத்தில் கனடா: பெடரல் அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

114

 

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேற்கு கெலோனா நகரில் வீடுகளை அழித்து பெரும் சேதத்தையும் மக்களுக்கு கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அப்போது, கண்ணுக்கு முன்னே, காட்டுத்தீயில் வீடு பற்றி எரிவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணீருடன் மக்கள் நின்ற காட்சிகள் பல வெளியாகின.

இந்நிலையில், இந்த இளவேனிற்காலம் மற்றும் கோடையிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு மீண்டும் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தெற்கு கியூபெக், கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கனடா முதலான பல பகுதிகள் ஏப்ரல் மாதத்தில் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. அந்த அபாயம், மே மாதத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர கால ஆயத்தங்கள் துறை அமைச்சரான Harjit Sajjan இது குறித்துக் கூறும்போது, கோடை எப்படி இருக்கும் என்பதை கணிக்க இயலாத நிலை இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மோசமாகிக்கொண்டே செல்வதால், கனடாவுக்கு காட்டுத்தீ பெரும் சவாலாக இருக்கும் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடிகிறது, காட்டுத்தீயால் கனேடியர்களுக்கு ஏற்படும் பண இழப்பும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்.

SHARE