காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல்படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென்சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்பதாக படங்களை வெளியிட்டது.
பிறகு, மலேசியா மற்றும் வியட்நாமுக்கு இடைப்பட்ட பகுதியில் இவ்விருநாடுகளையும் சேர்ந்த மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் அதுபோன்ற மிதக்கும் பொருள் எதுவும் அங்கு தென்படவில்லை.
இந்நிலையில் சீன அதிகாரிகள் தங்கள் செயற்கைக்கோள்கள் தவறாக படங்களை அனுப்பியிருப்பதாகவும், விமானத்தின் பாகம் எதுவும் அந்த படத்தில் இல்லை எனவும் தெரிவித்தனர். மலேசிய விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடற்பகுதியில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் மலாக்கா ஜலசந்தி பகுதியில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசியா தெரிவித்தது.
இதையடுத்து அப்பகுதியில் கடந்த 5 நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்தமான் கடற்பகுதி வரை தேடும் பணியை விரிவுபடுத்த மலேசியா முடிவு செய்தது. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் மாயமான விமானத்தின் அடுத்த தேடுதல் பணியை இந்திய பெருங்கடலில் துவங்கலாம் என வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜே.கார்னே தெரிவித்துள்ளார்.